மெலானி கூறிய சலேத் மாதாவின் இரகசியங்கள்

(முழு வாசகம்) "மெலானி, நான் இப்பொழுது உன்னிடம் கூறப்போவது எப்போதும் இரகசியமாயிராது. நீ அதை 1858-ல் வெளியிடலாம்.''

"குருக்கள், என் ; குமாரனின் ஊழியர்கள், தங்கள் கெட்ட வாழ்க்கையாலும் தங்கள் அவமரியாதைகளாலும், புனித தேவ இரகசிய திருச்சடங்குகளை நிறைவேற்றுவதில் தங்களின் பக்தியற்றதனத்தினாலும், தங்கள் பண ஆசையாலும், மதிப்பையும் இன்ப சுகங்களையும் தேடுவதினாலும் அவர்கள் அசுத்தத்தின் கிடங்காகி விட்டார்கள். 

ஆம் குருக்கள் பழிவாங்குதலைக் கூப்பிடுகிறார்கள். பழிவாங்குதலும் அவர்களின் தலை மேல் தொங்க விடப்பட்டுள்ளது. தங்களுடைய பிரமாணிக்கக் கேடுகளினாலும் தங்கள் கெட்ட வாழ்க்கையாலும் என் குமாரனை மறுபடியும் சிலுவையில் அறையும் குருக்களும் கடவுளுக்கென வசீகரம் செய்யப் பட்டுள்ளவர்களுக்கும் ஐயோ கேடு! 

சர்வேசுரனுக்கு வசீகரிக்கப்பட்டவர்களின் பாவங்கள் மோட்சத்தை நோக்கி அபயமிடுகின்றன. பழிவாங்கும்படி கூப்பிடுகின்றன. ஆதலால் இங்கே, அவர்களின் வாசலிலே பழிதீர்ப்பு வந்து நிற்கிறது. ஏனென்றால், ஜனங் களுக்காக இரக்கத்தையும் மன்னிப்பையும் மன்றாடுவார் யாருமில்லை. தாராளமனமுள்ள ஆன்மாக்கள் யாருமில்லை. உலகத்தின் சார்பாக நித்தியருக்கு மறுவில்லாத பலிப் பொருளை ஒப்புக்கொடுக்கத் தகுதியுள்ளவர் இப்பொழுது யாருமில்லை.

ஒப்புமை எதுமில்லாத அளவு கடவுள் அடிப்பார். பூமியில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு ஐயோ கேடாம். கடவுள் தம் கோபத்தைத் தீர்த்துக் கொள்வார். ஒரே நேரத்தில் விழும் அத்தனை கோடுகளிலிருந்தும் தப்புவதற்கு யாருமிருக்க மாட்டார்கள்.

"சர்வேசுரனுடைய மக்களின் தலைவர்கள் ஜெபத்தையும் தவத்தையும் கைவிட்டார்கள். அவர்களுடைய மனங்களை பசாசு இருளச் செய்துள்ளது''
- சலேத் இரகசியம்.

சர்வேசுரனுடைய மக்களின் தலைவர்கள் ஜெபத்தையும் தவத்தையும் கைவிட்டார்கள். அவர்களுடைய மனங்களை பசாசு இருளச் செய்துள்ளது. பழைய பசாசு தன் வாலால் அழிவுக்கு இழுத்துச் செல்கிற அலையும் நட்சத்திரங்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். எல்லா சமூகங்களிலும் எல்லா குடும்பங்களிலும், ஆட்சியாளர்கள் நடுவிலும் பிரிவினையை விதைக்க பழைய சர்ப்பத்திற்கு கடவுள் அனுமதியளிப்பார். 

சரீரத் தண்டனைகளும் உள்ளத்தின் தண்டனைகளும் அனுபவிக்கப்படும். கடவுள் மனிதர்களை அவர்கள் பாட்டிற்கே கைவிடுவார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக தண்டனைகளை ஒன்றுக்குப் பின் ஒன்றாக அனுப்புவார்.

மிகப் பயங்கரமான நோய்களும் மிகப் பெரிய நிகழ்வுகளும் நடக்கப் போகும் தறுவாயில் சமூகம் இருக்கிறது. இரும்புக் கோலால் ஆளப்படவும் கடவுளின் கோபமாகிய பாத்திரத்தைப் பருகவும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

என் குமாரனின் பிரதிநிதி 9 -ம் பத்திநாதர் பாப்பரசர் 1859 - க்குப் பின் உரோமையை விட்டு வெளியேறாதிருக்கட்டும். அவர் நிலையுறுதியாய் தாராளமுள்ளவரா யிருப்பாராக. விசுவாசம், சிநேகம் என்னும் ஆயுதங்களால் போரிடுவாராக. அவருடன் நான் இருப்பேன்.

அவர் நெப்போலியன் மட்டில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவனுடையது இரட்டை இருதயம். அவன் தானே பாப்புவாகவும் சக்கரவர்த்தியாகவும் ஒரே சமயத்தில் இருக்க விரும்பும்போது கடவுள் சீக்கிரம் அவனை விட்டகலுவார். எப்போதும் மேலே எழும்ப விரும்பும் கழுகாக இருந்து, தன்னை உயர்த்தும்படி மக்களைக் கட்டாயப்படுத்த அவன் பயன்படுத்த விரும்பிய அதே வாளில் அவன் விழுவான்.

இத்தாலி நாடு கர்த்தாதி கர்த்தருடைய நுகத்தை உதறிவிட விரும்புகிற தன் பேராசைக்காக தண்டிக்கப்படும். அப்படி அது யுத்தத்திற்குக் கையளிக்கப்படும். எப்பக்கத் திலும் இரத்தம் பாயும். தேவாலயங்கள் மூடப்படும், அல்லது அவசங்கைப்படுத்தப்படும். 

குருக்களும் துறவிகளும் விரட்டப்படுவார்கள். அவர்கள் கொல்லப் படுவார்கள். குரூரமாய்க் கொல்லப்படுவார்கள். அநேகர் விசுவாசத்தை விட்டு விடுவார்கள். உண்மையான மதத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்கிற குருக்கள், துறவிகளின் தொகை பெரிதாயிருக்கும். இவர்களுள் மேற்றிராணிமாரும் இருப்பார்கள்.

அற்புதங்களைச் செய்கிறவர்களைப் பற்றி பாப் பானவர் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏனென்றால் பூமியிலும் ஆகாயத்திலும் மகா அதிசயமான ஆச்சரியங்கள் நடைபெறும் காலம் வந்துள்ளது.

1864-ம் ஆண்டில் லூஸிபர் ஒரு பெருந்தொகை யான பசாசுக்களுடன் நரகத்திலிருந்து அவிழ்த்து விடப்படுவான். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விசுவாசத்தை அழிப்பார்கள் - அதிலும் கடவுளுக்கு வசீகரிக்கப் பட்டவர்களிலும் அப்படிச் செய்வார்கள். பசாசுக்கள் அவர்களை எப்படிக் குருடாக்குவார்கள் என்றால், ஒரு தனி வரப்பிரசாதம் இல்லாதிருந்தால் அவர்கள் இக்கெட்ட அரூபிகளின் தன்மையைப் பெறுவார்கள். ஒரு தொகையான சந்நியாசம் இல்லங்கள் விசுவாசத்தை முற்றிலுமாக இழப்பதோடு அநேக ஆன்மாக்கள் நாகத் தீர்ப்படையக் காரணமா யிருப்பார்கள்.

"உண்மையான மதத்திலிருந்து தங்களை பிரித்துக் கொள்கிற குருக்கள் துறவிகளின் தொகை பெரிதாயிருக்கும். இவர்களுள் மேற்றிராணிமாரும் இருப்பார்கள்.''
- சலேத் இரகசியம்.

கெட்ட புத்தகங்கள் உலகத்தில் மிகுந்திருக்கும், சர்வேசுரனின் ஊழியத்தின் மட்டில் மொத்தமான தளர்ச்சியை எல்லா இடங்களிலும் எல்லா அம்சங்களிலும் இருளின் ஆவிகள் பரப்பும். அவைகளுக்கு இயற்கையின் மேல் மிகப் பெரிய வல்லமை இருக்கும். இந்த ஆவிகளுக்கு ஊழியம் செய்ய கோவில்கள் ஏற்பட்டிருக்கும். இந்த ஆவிகளால் ஜனங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். குருக்களும் கூட அவ்வாறு இடம் பெயர்த்தி கொண்டு போகப்படுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் சுவிசேஷத்தின் நல்லுணர்வின்படி நடந்திருக்க மாட்டார்கள். அந்நல்லுணர்வு என்பது தாழ்ச்சியின் உணர்வு , தேவசிநேகம் கொள்வது, கடவுளின் மகிமைக்காகத் தாகம் கொள்ளுதல் என்பவையாகும். மரித்தவர்களும் நீதிமான்களும் எழுப்பப்படுவார்கள்: அதாவது, இந்த மரித்தவர்கள் முன்பு உலகில் வாழ்ந்த நீதியுடைய ஆன்மாக்களின் தோற்றத்தை எடுத்துக் கொள்வார்கள். இதனால் மனிதர்களை மயக்கிக் கெடுப்பார்கள். இப்படி அழைக்கப்படுகிற , உயிர்த்தெழ வைக்கப்பட்ட மரித்தவர்கள், இந்த முகங்களுடன் காணப்படுகிற பசாசேயாகும். அவர்கள் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்கள். அது சேசு கிறீஸ்துவின் சுவிசேஷத்திற்கு எதிராக இருக்கும்.

அது மோட்சம் உண்டென்பதை மறுக்கும். இவர்கள் நரக தண்டனை பெற்றவர்களின் ஆன்மாக்கள் தான். இவ்வான்மாக்கள் தங்கள் சரீரங்களுடன் இணைக்கப் பட்டுக் காணப்படுவார்கள். காரணம் உண்மையான விசுவாசம் அளிக்கப்பட்டு பொய்யான ஒளி உலகத்தில் வீசுகிறது. திருச்சபையின் இளவரசர் களுக்கு ஐயோ கேடு. செல்வத்துக்கு மேல் செல்வத்தைக் குவிப்பதிலேயே ஈடுபட்டு அதோடு தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு கர்வத் தால் அதட்டிக் கொண்டு திரிகிறவர்களுக்கு ஐயோ கேடு!

என் குமாரனின் பிரதிநிதி அதிக துன்பப்பட வேண்டியிருக்கும். ஏனென்றால் ஒரு காலத்திற்கு திருச்சபை பெரிய கலாபனைகளுக்குக் கையளிக்கப்படும்; அது இருளின் நேரமாயிருக்கும். அது ஒரு பயங்கர நெருக்கிடையில் இருக்கும்.

கடவுளின் புனித விசுவாசம் மறக்கப்பட, ஒவ்வொருவனும் தன்னையே வழிநடத்த விரும்புவான் : தன் சக மனிதருக்கு மேலாக எழும்ப ஆசிப்பான். சமுதாய அதிகாரமும் திருச்சபை அதிகாரமும் அழிக்கப்படும். எல்லா ஒழுங்கும் நீதியும் காலின் கீழ் மிதிக்கப்படும். கொலைகளும், பகையும், பொறாமையும், பொய்யும் முரண்பாடுமே காணப்படும். நாட்டுப் பற்றோ குடும்பப் பாசமோ இராது. பரிசுத்த தந்தை அதிகம் துன்புறுவார். அவருடைய பலியை ஏற்றுக் கொள்ள நான் அவருடன் இறுதி வரையிலும் இருப்பேன்.

கெட்டவர்கள் அவருடைய உயிர்மேல் அநேக முயற்சிகளைச் செய்வார்கள். அவருடைய நாட்களைக் குறைக்க அவர்களுக்கு முடியாது. ஆனால் அவரோ அல்லது அவருக்குப்பின் வருபவரோ கடவுளின் திருச்சபையின் வெற்றியைக் காணமாட்டார்கள்.

தேச தேச அரசாங்கங்கள் எல்லாம் ஒரே நோக்கத்தைக் கொண்டிருக்கும். அதாவது : எல்லா சமயக் கொள்கைகளையும் மறையச் செய்து, உலோகாயத் திற்கும் நாஸ்திகத்திற்கும் ஆவி வழிபாட்டுக்கும் சகல விதமான பாவங்களுக்கும் வழிவகுக்கும்.

1865 - ம் ஆண்டில் பரிசுத்த ஸ்தலங்களில் அருவருப்புக்குரிய நாசம் காணப்படும். கன்னியர் மடங்களில் திருச்சபையின் மலர்கள் அழுகிக் கிடக்கும். சாத்தான் எல்லா இதயங்களுக்கும் அரசனாக தன்னை ஸ்தாபிக்கும். துறவற சபைகளின் அதிபர்களாயிருக்கிறவர்கள், தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போகும் நபர்களைப் பற்றி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஏனென்றால் சாத்தான் பாவபழக்கமுடையவர்களை துறவற சபைகளுக்குள் கொண்டுவர தன் கெடுமதியையெல்லாம் பயன்படுத்துவான். ஏனெனில் ஒழுங்கீனங்களும் மாமிச இன்ப ஆசையும் உலக முழுவதிலும் பரவியிருக்கும்.

பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகள் யுத்தத்தில் இறங்கும். தெருக்களில் இரத்தம் பாயும். பிரஞ்சுக்காரன் பிரஞ்சுக்காரனுடன் சண்டையிடுவான். இத்தாலியன் இத்தாலியனுடன் சண்டையிடுவான். திகைக்க வைக்கிற ஒரு பொது யுத்தம் ஏற்படும். சிறிது காலத்திற்கு கடவுள் பிரான்ஸ் நாட்டையாவது இத்தாலி நாட்டையாவது நினைவுகூர மாட்டார். காரணம் சேசுகிறீஸ்துவின் சுவிசேஷம் அறியப்படாததாயிருக்கும். கெட்டவர்கள் தங்கள் தீய திட்டங்களையெல்லாம் அவிழ்த்து விடுவார்கள். இல்லங்களில் முதலாய் கொலை களும் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லுதல்களும் நடக்கும்.

கடவுளுடைய வாளின் முதல் மின்னல் தாக்குதலிலே மலைகளும் எல்லா இயற்கையும் அச்சத்தால் நடுநடுங்கும். ஏனென்றால் மனிதர்களின் ஒழுங்கீனங்களும் வானங்களின் வளைவுக் கூடத்தைக் குத்தி ஊடுருவுகின்றன. பாரிஸ் பட்டணம் எரிக்கப்படும். மார்ள்சே பட்டணம் விழுங்கப்படும். பல பெரிய நகரங்கள் பூமியதிர்ச்சிகளால் சிதைக்கப்பட்டு அமிழ்த்தப்படும்; சகலமும் இழக்கப்பட்டுக் காணப்படும். கொலைகளே புலப்படும். போராயுதங்களின் ஓசையும் தேவ தூஷணங்களுமே கேட்கப்படும்.

நேர்மையானவர்கள் மிக அதிகமாய் வேதனைப்படுவார்கள். அவர்களுடைய ஜெபங்களும் தவ முயற்சிகளும் கண்ணீர்களும் மோட்சத்திற்கு எழும். சர்வேசுரனின் எல்லா மக்களும் மன்னிப்பையும் இரக்கத்தையும் கேட்டு மன்றாடுவார்கள். என்னுடைய உதவியையும் பரிந்து பேசுதலையும் கேட்பார்கள். அப்போது சேசுகிறீஸ்து நாதர் தம்முடைய நீதியின் ஒரு செயல்பாட்டாலும் நேர்மையுள்ளவர்கள் மேல் தமக்குள்ள பெரிய இரக்கத்தாலும், தமது எதிரிகள் அனைவரையும் கொல்லும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். ஒரே அடியில் சேசுக்கிறிஸ்துவின் திருச்சபையை இம்சிப்பவர்களும் பாவத்துக்கு உட்பட்ட எல்லா மனிதரும் அழிவார்கள். உலகம் ஒரு வனாந்தரம் போலாகும்.

அப்போது சமாதானமிருக்கும் : கடவுளுக்கும் மனிதருக்கும் மீண்டும் உறவாடல் ஏற்படும். சேசு கிறீஸ்து ஊழியம் செய்யப்படுவார், ஆராதிக்கப்படுவார். மகிமைப் படுத்தப்படுவார். சிநேகம் எங்கும் தழைக்கும். புதிய அரசர்கள் எல்லா இடங்களிலும் திருச்சபையின் வலது கரமாயிருப்பார்கள். திருச்சபை வலிமையோடும் தாழ்ச்சி யுடனும் பக்தியுடனும், வறுமையுடனும், ஊக்கமுடனும் சேசுவின் புண்ணியங்களைக் கண்டுபாவிக்கும் சுவிசேஷம் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்படும். மனிதர்கள் விசுவாசத்தில் பெரும் வளர்ச்சி பெறுவார்கள். ஏனென்றால் அப்போது சேசுகிறிஸ்துவின் ஊழியர்களுக்குள் ஐக்கியம் இருக்கும். மாந்தர்கள் தெய்வபயத்துடன் வாழ்வார்கள்.

மனிதர்கள் மத்தியில் இந்த சமாதானம் அதிகம் நீடிக்காது. மனிதர்களின் பாவங்கள்தான் உலகில் நடக்கும் கேடுகளுக்கெல்லாம் காரணம் என்னும் உண்மையை, இருபத்தைந்து ஆண்டுகளின் செழிப்பான அறுவடை , அவர்கள் மறக்க வைக்கும்.

அந்திக் கிறீஸ்துவின் முன்னோடி ஒருவன் பல நாடு களிலிருந்து சேர்க்கப்பட்ட தன் படைகளுடன் உலகத்தின் ஒரே இரட்சகரான உண்மையான கிறிஸ்துவுக்கெதிராகப் போர் தொடுப்பான். அவன் மிகுதியான இரத்தத்தைச் சிந்துவான். கடவுளின் வழிபாட்டை நிர்மூலமாக்கத் தேடுவான், அவனே தெய்வம் என்று எண்ணப்படுவான்.

பூமி எல்லாவிதமான நோய்களாலும் தாக்கப்படும். (கொள்ளை நோய்களும் பஞ்சமும் பரவியிருக்கும்). யுத்தங்கள் நடக்கும் - அந்திக் கிறீஸ்துவின் பத்து இராஜாக் களால் மூளும் யுத்தம் கடைசி வரையிலும் நடக்கும். அந்த இராஜாக்கள் அனைவருக்கும் ஒரே நோக்கமிருக்கும். அவர்களே உலகத்தின் ஏக ஆட்சியாளர்களாயிருப்பார்கள். இது நடப்பதற்கு முன்னால் உலகத்தில் ஒரு வகையான போலி சமாதானமிருக்கும். ஜனங்கள் தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதிலேயே நினைவாயிருப்பார்கள். கெட்டவர்கள் சகல விதமான பாவங்களிலும் ஈடுபடுவார்கள். ஆயினும் பரிசுத்த திருச்சபையின் மக்கள், உண்மையான விசுவாசமுடைய பிள்ளைகள் என்னை உண்மையிலே கண்டுபாவிக்கிறவர்கள் தேவ சிநேகத்திலும், எனக்கு மிக விருப்பமான புண்ணியங்களிலும் வளர்ந்து வருவார்கள். பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் தாழ்ச்சியுள்ள ஆன்மாக்கள் பாக்கியம் பெற்றவர்களே. அவர்கள் முதிர்ச்சியின் நிறைவை அடையுமட்டும் நானும் அவர்களுடன் சேர்ந்து போராடுவேன்.

இயற்கையானது மனிதர்களின் காரணத்தால் பழி வாங்கக் கேட்கிறது. பழி பாதகம் படிந்த பூமிக்கு என்ன நடக்குமென்று காத்திருந்து நடுங்குகிறது.

பூமியே நீ நடுங்கு. சேசுகிறீஸ்துவுக்கு ஊழியம் செய்வதாக அறிக்கையிட்டு உள்ளுக்குள் உங்களையே ஆராதிப்பவர்களே , நடுங்குங்கள். ஏனென்றால் கடவுள் உங்களை தம் எதிரிகளிடம் கையளிப்பார். ஏனென்றால் பரிசுத்தமான ஸ்தலங்களெல்லாம் அழுகிய நிலையில் இருக்கின்றன. அநேக மடங்கள் கடவுளின் இல்லங்களாக இல்லை. அவை அஸ்மோதேயுஸுக்கும் அவனுடைய வர்களுக்கும் மேய்ச்சல் நிலங்களாக உள்ளன.

(* அஸ்மோதேயுஸ் = வேதபாரகர் உரைப்படி : தோபியாஸ் ஆகமத்தில் கூறப்படுகிற பேய் இது. ராகுவேலின் குமாரத்தியாகிய சாராள் மேல் மையல் கொண்டு அவளைத் திருமணம் செய்த ஏழு பேரைக் கொன்ற பசாசு இதுதான். ரபேல் அதிதூதர் அதைத் துரத்த, இது எஜிப்துக்கு ஓடிற்று.)

இச்சமயத்தில்தான் ஒரு எபிரேய கன்னியாஸ்திரீயிடம் அந்திக் கிறீஸ்து பிறப்பான். அவள் ஒரு போலி கன்னிகை. அவள் அசுத்தத்தனத்தில் கைதேர்ந்தவனான பழைய பாம்புடன் தொடர்பு கொண்டிருப்பாள். அந்தக் கிறீஸ்துவின் தகப்பன் ஒரு ஆயர். அவன் பிறப்பிலேயே தேவ தூஷணம் கக்குவான். அவனுக்குப் பற்கள் இருக்கும். ஒரு வார்த்தையில் அவன் பசாசின் அவதாரமாயிருப்பான். அவன் பயங்கரமான கூச்சலிடுவான். அதிசயமான காரியங்களைச் செய்வான். அசுத்தங்களையே உண்பான். அவனுக்குச் சகோதரர் இருப்பார்கள். அவர்கள் அவனைப் போல் பசாசின் அவதாரமா யில்லாவிட்டாலும் தீமையின் புத்திரராயிருப்பார்கள். அவர்களுடைய பன்னிரண்டு வயதில் அவர்கள் வெல்லப் போகிற வீரமுள்ள வெற்றிகளுக்குப் பேர் போனவர்களா யிருப்பார்கள். விரைவிலேயே அவர்கள் ஒவ்வொருவரும் படைகளுக்குத் தலைமை தாங்குவார்கள். நரகப் படைகளால் உதவி பெறுவார்கள்.

பருவகாலங்கள் மாறும். பூமி கெட்ட கனிகளையே கொடுக்கும். விண்வெளி கோளங்கள் தங்கள் பயண ஒழுங்கை இழக்கும். சந்திரன் மெல்லிய செந்நிற ஒளியை மட்டும் பிரதிபலிக்கும். நீரும் நெருப்பும் பூமி உருண்டைக்கு வலிப்பு அசைவுகளைக் கொடுக்கும். அதனால் மலைகள், நகரங்கள் முதலியவை விழுங்கப் படும்.

உரோமாபுரி விசுவாசத்தை இழக்கும். அது அந்திக் கிறீஸ்துவின் ஆசனமாகும்.

ஆகாயத்தின் பசாசுக்கள் அந்திக் கிறீஸ்துவுடன் சேர்ந்து, பூமியிலும் ஆகாயத்திலும் பெரிய அதிசயங்களை செய்வார்கள். மனிதர்கள் மேலும் மேலும் கெட்டுப் போவார்கள். கடவுள் தமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களையும் நல்ல மனமுடையவர்களையும் கவனித்துக் கொள்வார். சுவிசேஷம் எல்லா இடத்திலும் பிரசங்கிக்கப்படும். எல்லா ஜனங்களும் எல்லா நாடுகளும் சத்தியத்தின் அறிவைப் பெற்றிருப்பார்கள்.

பூமிக்கு ஒரு ஆர்வமான விண்ணப்பம் நான் செய்கிறேன்: பரமண்டலங்களிலே சீவித்து ஆட்சி செய்கின்ற சர்வேசுரனின் உண்மையான சீடர்களை அழைக்கிறேன்; மனிதர்களின் ஒரே மெய்யான இரட்சக ராகிய, மனிதாவதாரமான கிறிஸ்துவை மெய்யாகவே கண்டுபாவிக்கிறவர்களை அழைக்கிறேன்; என்மீது உண்மையான பக்தி கொண்டவர்களை, என் தெய்வீக குமாரனிடம் தங்களை அழைத்துச் செல்லும்படி தங்களை எனக்கு அர்ப்பணித்துள்ள என் பிள்ளைகளை அழைக்கிறேன்; நான் என் கரங்களில் ஏந்தி இருப்பவர்களைப் போல் என் உள்ளத்தன்மையின்படி வாழ்கிற பிள்ளைகளை அழைக்கிறேன். இறுதியாக பிந்திய காலங்களின் அப்போஸ்தலர்களை அழைக்கிறேன்; சேசுகிறிஸ்துவின் சீடர்களை, உலகத் தையும் தங்களையும் வெறுத்து, வறுமையிலும், தாழ்ச்சியிலும், உலகத்தின் அவமதிப்பிலும், மவுனத் திலும், ஜெபத்திலும், பரித்தியாகத்திலும், கற்பிலும், கடவுளுடன் ஐக்கியத்திலும், துன்பப்படுதலிலும், உலகத்துக்கு அறியப்படாமலும் இருக்கிற என் பிள்ளைகளை அழைக்கிறேன். அவர்கள் வெளியே வரவும் பூமிக்கு ஒளியூட்டவும் காலமாயிற்று. போங்கள், உங்களை என் பிள்ளைகளென்று காண்பியுங்கள். இந்தத் தீமையின் காலங்களில் உங்கள் விசுவாசமே உங்களை ஒளிர்விக்கும் வெளிச்சமாக இருக்குமானால் நான் உங்களுடனும் உங்களிலும் இருப்பேன். உங்கள் தீவிர ஆர்வமானது சேசுகிறிஸ்துவின் மகிமைக்கும் மதிப்பிற்கும் உங்களை ஏங்கித் தாகமுள்ளவர்களாகச் செய்வதாக! ஒளியின் பிள்ளைகளே, அந்த ஒளியைக் கொண்டு காண்கிற கொஞ்சப் பேரே, போராடுங்கள். ஏனென்றால் நேரங்களின் நேரம், முடிவுகளின் முடிவு சமீபித்திருக்கிறது.

திருச்சபை மறைக்கப்படும். உலகம் தத்தளித்து செய்வதறியாது நிற்கும். ஆனால் ஏனோக்கும் எலியாசும் வருவார்கள். அவர்கள் கடவுளின் ஆவியால் நிரம்பியிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய வல்லமையோடு போதிப்பார்கள். நல்ல மனமுள்ள மனிதர்கள் கடவுளை விசுவசிப்பார்கள். அநேக ஆன்மாக்கள் ஆறுதலடைவார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர்கள் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அந்தக் கிறிஸ்துவின் பசாசுக்குரிய தப்பறைகளைக் கண்டனம் செய்வார்கள்.

பூமியில் வசிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு. இரத்தங் கொட்டும். யுத்தங்கள் நடைபெறும். பஞ்சங்களும் கொள்ளை நோய்களும், தொற்று வியாதிகளும் பரவும். பயங்கரமாக மிருகங்கள் பெய்யப்படும். நகரங்களை உடைத்தழிக்கும் இடி முழக்கங்கள் இருக்கும். நாடுகளை விழுங்கும். பூமி அதிர்ச்சிகள் ஏற்படும். ஆகாயத்தில் குரல்கள் கேட்கப்படும். மனிதர்கள் தங்கள் தலைகளை சுவர்களில் மோதிக் கொள்வார்கள். அவர்கள் மரணத்தை வரும்படி அழைப்பார்கள். ஆயினும் மரணமே அவர்களுடைய வாதையாக இருக்கும். எப்பக்கமும் இரத்தம் பாயும். இத்துன்ப சோதனையை யாரால் தாங்க முடியும், கடவுளே அதன் நீளத்தைக் குறைக்காவிட்டால்? நேர்மையுள்ள வர்களின் இரத்தத்தையும் கண்ணீர்களையும், ஜெபங்களையும் கண்டு கடவுள் அதன் அதன் கடுமையைத் தளர்த்துவார். ஏனோக்கும் எலியாசும் கொலை செய்யப்படுவார்கள். அஞ்ஞான உரோமை மறைந்து போகும். மோட்ச நெருப்பு விழுந்து மூன்று நகரங்களை எரித்துவிடும். பிரபஞ்சம் முழுவதும் பயங்கரத்தால் தாக்கப்படும். அநேகர் தாங்கள் நெறிகெட்டுப் போக விட்டுக் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்கள், தங்கள் நடுவில் வாழும் உண்மையான கிறீஸ்துவை வழிபடவில்லை. நேரம் ஆயிற்று. சூரியன் இருக்கிறது. விசுவாசம் மட்டுமே பிழைக்கும்.

தருணம் வந்துவிட்டது. பாதாளம் திறக்கிறது. இதோ இருளின் அரசருக்கரசன்! இதோ தன் பிரஜைகளுடன் மிருகம்! அது தன்னை உலகின் இரட்சகன் என அழைக்கிறது, அது ஆங்காரத்துடன் ஆகாயத்தில் எழும்பி மோட்சம் நோக்கிப் போகும். அதிதூதரான அர்ச். மிக்கேலின் சுவாசத்தால் அதன் மூச்சு திணறடிக்கப்படும். அது விழும். மூன்று நாள் அளவாக தொடர்ந்து மாற்றம் பெற்றிருக்கும் பூமி தன் நெருப்பு வயிற்றைத் திறக்கும். அதன் உள்ளே அது தன்னைப் பின் சென்ற அனைவரோடும் நரகத்தின் நித்திய வெடிப்பிற்குள் நித்தியமாக மூழ்கடிக்கப்படும். பின் தண்ணீரும் நெருப்பும் பூமியைச் சுதந்தரிக்கும். மனிதர்களுடைய அகங்காரத்தின் வேலைப்பாடுகள அனைத்தையும் எரித்தழிக்கும். சகலமும் புதுப்பிக்கப்படும் சர்வேசுரன் ஊழியம் செய்யப்படுவார். அவர் மகிமைப்படுத்தப்படுவார்.''

- இத்துடன் இரகசியம் முடிகிறது