தந்தை பியோவும் பாவசங்கீர்த்தனமும் 7

ஜியோவான்னி ப்ரோட்டோ என்பவன் ஒரு டாக்ஸி ஓட்டுனராக இருந்தான். அவன் ஒரு தீவிரமான கம்யூனிஸ்ட். குடிபோதையில் இருக்கும் போது தன் மனைவியை அடிப்பான். ஒரு நாள் இரவில் அவன் தன் மனைவியை ஆடித்து விட்டு, தள்ளாடியபடி தன் படுக்கைறைக்கு வந்து படுக்கையில் விழுந்தான். சற்று நேரத்தில் தன் கட்டில் பலமாக உலுக்கப்படுவதை அவன் உணர்ந்தான். அவன் கண்களைத் திறந்த போது. ஒரு துறவி கோபத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தான்.. அந்தத் துறவி அவனைப் பற்றியும், அவனது செயலைப் பற்றியும் தாம் என்ன நினைக்கிறார் என்பதை அவனுக்குத் தெளிவாகக் கூறினார். அதன் பின் அவர் மறைவது போலத் தோன்றினார்.

கோபவெறி கொண்டிருந்த ஜியோவான்னி தன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, தன் மனைவியிடம் : “ இவ்வளவு நேரம் இங்கே இருந்த அந்த துறவி எங்கே ? “ என்று கத்தினான். அவன் என்ன பேசுகிறான் என்றே தனக்குப் புரியவில்லை என அவள் எவ்வளவோ சொல்லியும், அவன் அவளைத் தள்ளிவிட்டு, வீடு முழுவதும் அவரைத் தேடினான். ஆனால் அவன் யாரையும் காணவில்லை.

இதனிடையே தன் போதை சற்றுத் தெளிய, தன் மனைவி களங்கமற்றவள் என்பதை அவன் உணரத் தொடங்கினான். அதே வேளையில் அவனது மனைவி பாத்ரே பியோவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்வு தன் ஜெபங்களுக்கு அவர் தரும் பதிலாக இருக்குமோ என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். ஆகவே அவள் தன் கணவனிடம், பாத்ரே பியோதான் தன் கணவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறினாள். ஜியோவான்னி இறுகிய குரலில்,

“ இதோ பார். என்னை எந்த துறவியும் ஒன்றும் செய்து விட முடியாது. நீ சொல்கிற உன்னுடைய பாத்ரே பியோவிடம் நான் சென்று, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கேட்கத்தான் போகிறேன். மேலும் அவரால் பறக்க முடியுமா என்பதையும் நான் கண்டுபிடிக்கப் போகிறேன் “ என்றான்.

சில நாட்களுக்குப் பிறகு, தான் சொன்னது போலவே ஜியோவான்னி தன் டாக்ஸியில் நீண்ட பயணம் செய்து பாத்ரே பியோவைக் காணச் சென்றான். பாத்ரே பியோவை உடனே அடையாளம் கண்டு கொண்ட அவன் அவரிடம் பேசத்தொடங்கினான். பாத்ரே பியோ அவனைப் பற்றி அவனுக்கு மட்டுமே தெறிந்த இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவதை கேட்ட அவன் இடியால் தாக்கப்பட்டவனைப் போலானான். அவன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று பாத்ரே பியோவைக் கேட்டுக் கொண்டான்.

பாவசங்கீர்த்தனத்திற்குப் பின், “ நான் மறந்து விட்டவற்றைக் கூட அவர் எனக்கு நினைவுபடுத்தினார் “ என்று ஒத்துக் கொண்டான். இந்தப் பாவசங்கீர்த்தனத்தின் முடிவில், ஜியோவான்னி தன் சட்டைப் பையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டையை வெளியே எடுத்து அதைப் பாத்ரே பியோவிடம் தந்து, அதை அழித்து விடும்படி கேட்டுக் கொண்டான். “ சரி, இதை நான் அழித்து விடுகிறேன். ஆனால் உன் படுக்கையின் தலை மாட்டிலுள்ள மேஜை இழுப்பறையில் மற்றொரு உறுப்பினர் அட்டை இருக்கிறது. வீட்டுக்குப் போனதும் மற்றொரு உறுப்பினர் அட்டை இருக்கிறது. வீட்டுக்குப்போனதும் அதையும் அழித்துவிட மறந்து விடாதே “ என்று அவர் சொன்னதைக் கேட்டு அவன் அதிசயித்துப் போனான்.

பாத்ரே பியோ தொடர்ந்து அவனிடம் : “ நீ பலருக்கு மிகவும் இடறலாக இருந்திருக்கிறாய். பாவசங்கீர்த்தனத்தின் அபராதமாக நான் நிறுத்தச் சொல்லும் வரை, உங்கள் பங்கு கோவிலில் நடக்கும் கடைசிப் பூசையில் ஒவ்வொரு ஞாயிறன்றும் நீ திவ்ய நன்மை வாங்க வேண்டும் “ என்று கூறினார். அந்நாட்களில் திருச்சபைக் கட்டளைப்படி திவ்ய நன்மை வாங்குபவர்கள் நள்ளிரவு முதல் நன்மை வாங்கும் வரை எந்த வித திட உணவையும் விலக்க கடமைப்பட்டிருந்தார்கள். ஜியோவான்னி தொடர்ந்து ஒரு வருடத்தின் பெரும் பகுதியில் இதைச் செய்துகொண்டிருக்க வேண்டியிருந்தது.

ஜியோவான்னி தனது கம்யூனிஸத் தோழர்களிடையே முக்கியப் புள்ளியாக இருந்தான். ஆனால் இப்போது அவன் உண்மையாகவே ஒரு நல்ல கிறிஸ்தவனாக மாறியிருந்தான். தனக்குத் தெறிந்த சில கம்யூனிஸ்ட்களிடம் அவன், “ ஏன் நீ என்னோடு வந்து பாத்ரே பியோவிடம் வாதாடிப்பார்க்கக் கூடாது “ என்று சொல்லி அவர்களுக்கு சவால் விடுவது வழக்கம். அவனது சவாலை ஏற்று பாத்ரே பியோவை ஒவ்வொரு மாதமும் கம்யூனிஸ்ட்டுகள் சென்று சந்தித்தார்கள். அவர்கள் எப்போதுமே அவரால் வெற்றிகொள்ளப்பட்டார்கள். சிலர் மனம் திரும்பவும் செய்தார்கள்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி. போன் : 9487609983, 0461-2361989,

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !