தந்தை பியோவும் பாவசங்கீர்த்தனமும் 6

பாத்ரே பியோவைச் சந்திக்க வந்தவர்களில் கடைந்தெடுத்த பாவிகளும், விசுவாசமற்ற நாத்திகர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் வெறும் ஆவலின் காரணமாகவும், மற்றவர்கள் அவரையும், கடவுளையும் ஏளனம் செய்யும் நோக்கத்தோடும் வந்தார்கள்.

கடவுளையும், கத்தோலிக்கத் திருச்சபையையும் தன் எதிரிகளாக மதிக்கும் சாத்தானின் இரகசிய சபையைச் சேர்ந்த இருவர், தாங்கள் கற்பனையாகச் சொல்லும் பாவங்களைக் கொண்டு, பாத்ரே பியோவின் பாவசங்கீர்த்தனங்களை ஏளனம் செய்யத் தீர்மானித்தார்கள். பாவசங்கீர்த்தனமாகிய தேவத்திரவிய அனுமானத்தை அவமதிப்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

அவர்கள் தங்கள் பொய்யான பாவங்களை சொல்லத் தொடங்கியபோது, பாத்ரே பியோ அவர்களை தடுத்து நிறுத்தினார்.. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தமக்குத் தெறியும் என்று கூறிய அவர் தொடர்ந்து அவர்களின் உண்மையான பாவங்களை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார். வெறுமனே தங்கள் பாவங்களை மட்டுமின்றி, அவைகள் செய்யப்பட்ட நேரத்தையும், விதத்தையும், இடத்தையும் அவர் துல்லியமாகக் கூறுவதை கேட்ட அவர்கள் எவ்வளவு ஆழமாகத் தொடப்பட்டார்கள் என்றால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, தங்கள் பாவ வாழ்க்கைக்காக மனம் திரும்பி நல்ல கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

பெண்கள் உடையணியும் முறை பற்றி பாத்ரே பியோ மிகக் கண்டிப்பாகவும், விட்டுக்கொடுக்காதவராகவும் இருந்தார். இறுக்கமான குட்டையான, இறக்கமான கழுத்துப்பகுதி உள்ள உடைகள் அணிந்த பெண்கள் அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. முழங்கால்களுக்குக் கீழே குறைந்தது எட்டு அங்குலமாவது நீண்ட உடை உடுத்திய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதற்காகவே கோவில் வாசலில் ஒரு அறிவிப்புப் பலகையையும் அவர் மாட்டி வைத்தார்.

பாவசங்கீர்த்தனத்தின்போது , “ நீ ஏன் உன் ஆன்மாவைப் பசாசுக்கு விட்டு விட்டாய்?.. எவ்வளவு பொறுப்பற்றத் தன்மை. நீ நரகத்திற்கு செல்லும் வழியில் இருக்கிறாய்! ஓ கவனமற்ற மனிதா, முதலில் நீ போய், பாவத்திற்கு மனம் வருந்து, அதன் பின் இங்கு திரும்பி வா… “ என்பவை போன்ற வார்த்தைகளை பாத்ரே பியோ அடிக்கடி கூறுவார்.

பாவசங்கீர்த்தனம் செய்ய வந்த ஒருவன், நரகம் இருப்பதை நான் விசுவசிக்கவில்லை என்றான். பாத்ரே பியோ பதிலுக்கு: “ நீ அங்கே போகும்போது, அதை நம்புவாய் “ என்றார்.

பாத்ரே பியோ அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வதை ஆன்ம வாழ்வின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக கருதினார். அவர் வாரம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்து வந்தார். தம் ஞானக்குழந்தைகள் பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது கட்டாயம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென அவர் விரும்பினார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !