(இதுவும் ஒரு முக்கியமான பதிவு..)
வழக்கமாக இத்தாலிய மொழியைச் சரளமாக அறிந்தவர்கள் மட்டுமே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என்றாலும், பாத்ரே பியோ, “ பல மொழி வரம் “ பெற்றிருந்தார் என பரவலாக நம்பப்பட்டது; உதாரணமாக, ஒரு அமேரிக்கரோ, ரஷ்யரோ அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய முடிந்தது.; இது மறுக்க முடியாத உண்மை. 1920-களின் பிற்பகுதியில் மேரி பைல் தமது மைத்துனி ஸீன் என்பவளை பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்யும்படி தூண்டினார். ஆனால் தமக்கு இத்தாலிய மொழி தெறியாது என்று ஸீன் மறுத்தாள். ஆயினும் மேரி வற்புறுத்தவே, அவளும் பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்றாள்.அதன் பின் அவள் மேரியிடம்,” நான் ஆங்கிலத்தில் பேசினேன். அவர் இத்தாலிய மொழியில் பேசினார். ஆனால் நாங்கள் ஒருவர் பேசுவதை மற்றவர் மிக எளிதாகப் புரிந்து கொண்டோம்” என்றாள். ( இதுதான் அந்நிய பாஷை வரம் )
தம்மிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வந்தவர்களின் வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாத்ரே பியோ அறிந்திருந்தார் என்று தோன்றுகிறது. ஆல்பெர்ட் கார்டோன் பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்த ஒரு பெண்ணைப் பற்றி மார்ச் 1990-ல் பின்வரும் சம்பவத்தைக் கூறினார்.
அவள் பாவசங்கீர்த்தனம் செய்யச் சென்றாள். பாத்ரே பியோ அவளுக்கு பாவமன்னிப்பு வழங்குவதற்கு முன் “ உன்னுடைய இன்னொரு பாவத்தை நினைவுக்கு கொண்டுவர முயற்சி செய் “ என்றார். அவளோ, “ எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன், வேறு எதுவுமில்லை “ என்றாள். “ அப்படியானால் நீ இப்போதே சிலுவையிடம் சென்று பதினைந்து பரலோக மந்திரங்களும், பதினைந்து அருள் நிறை மந்திரங்களும் சொல் “ என்றார் பியோ. உண்மையிலேயே அந்தப் பாவசங்கீர்த்தனத்திற்கான அபராதம் இந்த ஜெபங்கள் அல்ல. மாறாக, அந்தச் சிலுவையிடம் செல்வதுதான். ஏனெனில் அது மலையின் உச்சியில் நாட்டப்பட்டிருந்தது. அங்கு செல்லும் சாலையும் மிக மோசமாயிருந்தது. மிகுந்த சிரமத்தோடு பாத்ரே பியோ தனக்குக் கட்டளையிட்டதை அவள் செய்து முடித்தாள்.
அவள் முதல் முறை சென்று விட்டு திரும்பி வந்த போது அவர் அவளிடம், “ இப்போது உன் பாவம் நினைவுக்கு வருகிறதா?” என்று கேட்க, இல்லையென்று அவள் மறுத்தாள். எனவே மீண்டும் மலையேற அவளுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அவள் மூன்று முறை மலையேறியபின் அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, மீண்டும் அவள் இல்லையென்று மறுத்தாள். உடனே பியோ குரலை உயர்த்தி :
“ அவன் ஒரு நல்ல குருவாகவோ, ஆயராகவோ கர்தினாலாகவோ கூட ஆகியிருக்க முடியும் என்று நீ நினைக்க வில்லையா ? “ என்று கேட்டார்.
அவள் யோசிக்கத் தொடங்கினாள். பிறகு அழுகையோடு,
“ சுவாமி, கருச்சிதைவு ஒரு பாவம் என்று எனக்குத் தெறியாது”, என்றாள். “ தெறியாதா? அது ஒரு கொலை! “ என்றார் பியோ. “ இதைப்பற்றி எனக்கும் என் தாய்க்கும் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெறியாது. நீங்கள் எப்படி அதை அறிந்து கொண்டீர்கள்?, மேலும், அந்தக் குழந்தை ஒரு குருவாகவோ, கர்தினாலாகவோ ஆகியிருக்க முடியும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? “ என்று அவள் கேட்க, “ அது ஒரு பாவம், மிகப்பெரிய பாவம் “ என்று மட்டும் பியோ பதிலளித்தார்.
பாவசங்கீர்த்தனம் என்ற தேவத்திரவிய அனுமானத்தை அலட்சியம் செய்வோரும், அது அவசியமில்லை என்று நினைப்பவர்களும், அதை ஏளனம் செய்யத் துணிபவர்களுக்கும், அது தொடர்பாகவே பாத்ரே பியோவுக்கு அளிக்கப்பட்டிருந்த தேவக் கொடைகள் ஒரு மிகச் சிறந்த பாடமாக இருக்கின்றன.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டணம், தூத்துக்குடி. போன் : 9487609983, 0461-2361989,
இயேசுவுகே புகழ் ! மரியாயே வாழ்க !