அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 06

புனித சூசையப்பர் சந்தேகப்பட்டதை தியானிப்போம்.

தியானம்.

புனித சூசையப்பர் கன்னிமரியாளை திருமணம் செய்தபிறகு வானதூதர் கன்னிமரிக்குத் தோன்றி மங்கள வார்த்தை கூறி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தது; இதோ ஆண்டவருடைய அடிமை; உம் வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும் என்று ஏற்றுக் கொண்டதன் பேரில் தூய ஆவியால் கருத்தரித்தாள். சிறிது நாட்களுக்குப் பிறகு தனது உறவினளான புனித எலிசபெத்தம்மாளை சந்திக்கச் சென்றாள். அவருடன் மூன்று மாதம் தங்கியிருந்து அவருக்கு பணிவிடை செய்துவிட்டு தனது ஊரான நாசரேத்து வந்தாள். அப்போது மரியன்னை கருவுற்றிருப்பதை அறிந்து புனித சூசையப்பர் அதிர்ந்தார். இறைவனின் திருச்சித்தத்தை அறியாதவராக இவர் இது எப்படி ஆனதோ என கலங்கி சந்தேகப்பட்டு மிகவும் வேதனை அடைந்தார். தாழ்ச்சியால் மரியன்னை தனக்கு நேர்ந்ததை தன் கணவரிடம் கூறாது விட்டுவிட்டார். புனித சூசையப்பர் நீதிமானாக இருந்தாலும், மரியன்னையை அவமானப்படுத்த விரும்பாததாலும் இரகசியமாக தன் மனைவியை விலக்கி வைக்க எண்ணினார்.

இவ்வாறு அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வானதூதர் அவரது கனவில் தோன்றி "சூசையப்பரே! தாவீது அரசரின் குலத்தோன்றலே! உம் மனைவியை ஏற்றுக்கொள்ள சந்தேகப்படவேண்டாம். தூய ஆவியால் கருத்தரித்துள்ளார்; ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அந்த குழந்தைக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் தம்முடைய மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். அதன்பின் புனித சூசையப்பர் தன் மனைவியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். புனித சூசையப்பர் இறைச்சித்தத்தை அறியாமல் இருந்ததால் மரியன்னை கருவுற்றது எப்படி என சந்தேகத்திற்கு இடமளித்தாலும் அவருக்கு மன கஷ்டத்தை அளிக்காமலும் விசாரிக்காமலும் இருந்தார். அவர் இவ்வேளையில் மிகவும் மனகலக்கம் அடைந்திருந்ததால் யாரிடமும் முறையிடாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் அறிவிக்க வேண்டும் என்று செபித்தார்.

தமது மனைவியாகிய மரியன்னையை அவமானப்படுத்தாமல் யாருக்கும் தெரியாமல் விலக்கி அனுப்பவேண்டும் என முடிவெடுத்த போது இறைவன் வானதுதரை அனுப்பி மரியன்னையின் வயிற்றில் வளரும் இயேசுகிறிஸ்துபற்றிய பரம இரகசியத்தை வெளியிடச் செய்தார். புனித சூசையப்பர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தூயவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர் என்பதை கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும். இவ்வுலக வாழ்வு சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது என உணர வேண்டும். மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். நாம் சில நேரங்களில் வானதுதர்களைப்போல் தூயவர்களாகவும், சில நேரங்களில் இறைவனுக்கு நிந்தை ஏற்படுத்துகிறவர்களாகவும் வாழுகிறோம். நிலையான இடம் வான்விடு என்பதை உணர வேண்டும். மகிழ்ச்சி வரும்போது ஆங்காரப்படாமலும், துன்ப வேளைகளில் சோம்பிப்போகாமலும், எதற்கும் பயப்படாமல் எல்லாவற்றிலும் உறுதியாக இருந்து இறைவனின் புகழ்ப் பாடினார். நாமும் அவ்வாறு நடப்போம்.

புனித சூசையப்பர் தேவனுடைய விருப்பத்தையும் திட்டத்தையும் அறியாததால் சந்தேகப்பட்டாலும் பொறுமையோடு செயல்பட்டார். நமக்கும் இத்தகைய பொறுமை இருந்தால் பல துன்பங்கள் வராமல் நன்மைகளை வரவழைக்கும். கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி, நண்பர்கள் இவர்களிடையே சந்தேகமும் வேறுபாடும் தோன்றுகிறபோது நாம் வைராக்கியம் கொண்டு வாழ்ந்தால் என்ன பயன்? கோபம் அதிக கெடுதலைத்தான் தோற்றுவிக்கும். அமைதிக்கு அது வழியல்ல. காயத்திற்கு மருந்து போட்டால் ஆறுமே தவிர மிளகுபொடியைத் தூவினால் ஆறுமா? அதனால் பொறுமை, தாழ்ச்சியால் எல்லா தடைகளும் அகலும். பொறாமை, கோபம், சோம்பல், ஆங்காரம் குடும்பத்தை சிதைக்கும்.

புனித சூசையப்பரைப்போல் துன்பம் அனுபவிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும். நம்மை பெற்ற தாய் தந்தையரைவிடவும் இறைவன் அதிக பாசம் உடையவராதலால் நாம் துன்பப்படும்போது, நாம் நம்மை மீட்க செபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்போல் உமக்கு விருப்பமானால் இந்த துன்பம் என்னை விட்டு அகலட்டும். உமது விருப்பப்படி ஆகட்டும் என செபிப்போம். விசுவசித்தால் இறைவன் நல்லதையே செய்வார்.

புனித சூசையப்பர் மனத்துயரில் இருக்கும்போது  வானதூதரின் அறிவிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதுபோல் நாம் துன்பம் வரும்போது பொறுமையாக இருந்து இறைவனிடம் செபித்து வந்தால் மறுஉலகில் நமக்கு பிரதிபலன் கிடைக்கும் என நம்புவோம்.

புதுமை

1856-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு தென்பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் புகழ்பெற்ற மனிதர் கொடிய நோயால் இறக்கும் நிலையில் இருந்தார். உலகத்தின் பார்வைக்கு நல்லவராக இருந்தபோதும், நீண்டகாலம் ஒப்புரவு அருட்சாதனத்தை பெறாமலும், இறைசெயல்களில் அசட்டையாகவும், இறைவனின் கட்டளைகளை சரிவர நிறைவேற்றாமலும் இருந்து வந்தார். அவன் உயிர்பிழைக்க மாட்டார் என்பதை அறிந்து அருட்பணியாளர்கள் அவரை ஒப்புரவு, நோயில் பூசுதல் போன்ற அருட்சாதனங்களைப் பெறவும், மரணத்திற்கு தயாராகும்படியும் அறிவுறுத்தினார்கள். 'மெதுவாக நடக்கட்டும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என நோயாளி கூறினார்.

நோயின் பிடி இறுக இறுக அவனது உறவினர்கள் அவனுக்காக இறைவனிடம் செபித்தார்கள். நோயாளியின் நெருங்கிய உறவினர் ஒருவர் புனித சூசையப்பரிடம் அடைக்கலம் தேட வேண்டும் என்று கன்னியர் இல்லம் ஒன்றிற்கு செய உதவி கேட்டு கடிதம் எழுதினார். நோயாளிக்கு நல்மரணம் நிகழ புனித சூசையப்பரிடம் இல்லத்தில் உள்ள அனைவரும் செபிக்க கேட்டிருந்தார். அவர்களும் அக்டோபர் 24-ஆம் நாள் முதல் செபிக்க தொடங்கினர். இவர்கள் செபிக்க தொடங்கிய நான்காம் நாளிலே நோயாளி மனம் திரும்பி தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி நோயில் பூசுதல் அருட்சாதனத்தினை பெற ஆவலாய் இருப்பதாகத் தெரிவித்தான். பின்னர் மனநிறைவோடு தன்னுடைய உயிரை இறைவனிடம் ஒப்படைத்தார்.

நவநாள் செபத்திற்கு கடைசி நாளான சகல புனிதர்களுடைய நாளிலே நோயில் பூசுதலைப் பெற்று இவர் புனித சூசையப்பரின் உதவியால் மனம் திருந்தி நரகத்திலிருந்து மோட்சமடைந்தார் என மகிழ்ந்தனர். நவநாள் செய்ய கேட்டுக்கொண்ட மனிதரோ அந்த கன்னியர் இல்லத்திற்கு அழகிய புனித சூசையப்பர் திருஉருவத்தை அனுப்பிக் கொடுத்தார். அதனை ஆயர் அவர்கள் மந்திரித்து சிந்தனையுள்ள மறையுரையை நிகழ்த்தினார். நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ மரண நேரத்தில் ஒப்புரவு அருட்சாதனம் பெறாமல் இருந்தால் புனித சூசையப்பரிடம் அவருக்கு நன்மரணம் கிடைக்க செபித்தால் நிச்சயம் நன்மரணம் கிடைக்கும் என நம்புவோம். (3 பர, பிதா)

செபம்

துன்ப வேளைகளில் பொறுமை, அமைதி, தாழ்ச்சி முதலிய புண்ணியங்களை கடைப்பிடித்து வந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். எல்லா இல்லறத்தாருக்கும் இப்புண்ணியங்கள் தேவையாக இருப்பதால் அவர்களுக்கு பணிவான அன்பை அளித்தருளும். துன்பப்படுகிறவர்கள் எல்லாம் மனம் தளர்ந்து விடாமல், பொறுமையோடு இறைவனிடம் ஆறுதலைக் கேட்டு பெற்றுக் கொள்ள செய்தருளும். உம்முடைய புண்ணியங்களைப் பார்த்து துன்ப வேளைகளில் கலங்கிப் போகாமல் புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க உதவும் படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலான புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம். சந்தேகப்படுகிறவர்களுக்குத் தெளிவு கொடுக்கிற புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்துகிறோம். பக்தியுள்ள குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிற புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.

செய்ய வேண்டிய நற்செயல்

துன்ப துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுதல்.