அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 07

புனித சூசையப்பர் மரியன்னையை ஏற்றுக் கொண்டதை தியானிப்போம்.

தியானம்.

வானதுதரால் மரியன்னையின் கருத்தரிப்பு பற்றிய சேதி அறிந்ததும் இயேசுகிறிஸ்துவின் தாய், மண்ணக - விண்ணக அரசி என, சூசை மரியன்னையை வணங்கத் தொடங்கினர். அவர் தெய்வீகத்திற்கு இருப்பிடமும் ஆலயமுமாக இருந்தார். எல்லோராலும் வணங்கப்படுகிற வானதூதர் தன்னுடைய இல்லத்திற்கு வந்ததால் வீடு ஒளியும் தூய்மையும் அடைந்து இறைவனின் இருப்பிடமான ஆலயமாக விளங்கியதை உணர்ந்தார். மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட புனித சூசையப்பர் பக்தியோடு மரியன்னைக்கு உதவியாக இருந்தார். இத்தகையவளுக்கு தான் கணவனாக அமைந்தது இறைவன் அளித்த பாக்கியமாக கருதி தாழ்ச்சியோடு இறைவனை புகழ்ந்தார்.

அவர் ஏழையாக இருந்தபோதும் இரவும் பகலும் வேலை செய்து மரியன்னையை எந்த குறையுமின்றி பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வந்தார். புண்ணிய செயல்களால் தாயையும் மகனையும் மகிழ்வித்தார். இயேசுவின் தாய்க்கு கணவராக இருந்ததே அவருக்கு மிகப்பெரிய வல்லமையை அளித்தது. தூய ஆவியானவர் புனித சூசையப்பரை மரியன்னைக்கு தேர்ந்தெடுத்தப்போதே அவரை புண்ணியங்களினாலும் நிரப்பினார் என்று புனித பெர்நர்தீனுஸ் எழுதியுள்ளார். அரசியை திருமணம் செய்கிறவன் அரசனாவான் என்பது உண்மை. அதுபோல் விண்ணக அரசியை திருமணம் செய்ததால் அவர் வான்விட்டின் அரசரானார் என்று புனித லியோனார்டு உறுதி செய்தார்.

மரியன்னையோ தனது கணவரை அன்புசெய்து, பணிவிடை செய்து மகிழ்ந்தாள். இவர்கள் இருவருக்குமிடையே இருந்த புண்ணிய செயல்களைக்கண்டு வானதூதர்கள் மகிழ்ந்தனர். சகல வான தூதர்களும், புனிதர்களும் இவர்களின் புண்ணிய வாழ்வை முன் மாதிரிகையாக கொண்டு போற்றி புகழ்ந்தனர். கிறிஸ்தவ திருமணமானது ஏழு அருட்சாதனங்களுள் ஒன்றானதும் தூய்மையானதும் ஆகும். திருமண உறவிலே ஒருவரை ஒருவர் அனபு செய்து தங்களுடைய குழந்தைகளை நன்கு வளர்த்து, தங்கள் கடமைகளை சரிவர செய்து வந்தால் அவர்களது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். இல்லறத்தினரில் பலரும் புனிதர்களாகவும் விளங்குகின்றனர். இவர்கள் திருமணம் என்ற உறவினை இறைவனின் திருச்சித்தத்திற்கு இயைந்து பயன்படுத்தாவிட்டால் இவர்களுக்கு திருமணம் நரகத்திற்குச் செல்லும் வாசலாக அமைகிறது.

சிந்தனை

புனித சூசையப்பர் மரியன்னையிடம் பாசத்தோடு நடந்து கொண்டதுபோல் மரியன்னையும் விண்ணக மண்ணக அரசியாக இருந்தாலும் தனது கணவருக்கு கீழ்ப்படிந்து, வணங்கி மனைவிக்குரிய பணிவிடைகளை குறையற செய்து வந்தார் என அறிந்துள்ளோம். இல்லறத்தினர் இவர்களை நன்மாதிரிகையாக கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் பூவுலகில் மகிழ்ச்சியும் வானுலகில் மகிமையும் இருக்கும்.
கணவர்கள் தங்கள் மனைவிகளை அடிமைகளாகவும் விலங்குகளாகவும் கருதாமல் அவர்கள்மீது அக்கறை  கொண்டு அவர்களை உங்களைப்போல் அன்புசெய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தக்க மரியாதையையும் அளித்து, பக்தியோடு புண்ணிய வழியில் செல்வதற்குரிய வழிவகைகளை செய்து கொடுக்கவேண்டும். மனைவியர் தூய மரியன்னையை நன்மாதிரியாய் கொண்டு கணவர்கள் தங்களுக்கு மேலானவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பணிந்து பணிவிடை செய்து பக்தியோடு வாழ்ந்து வந்தால் மகிழ்ச்சியும், மகிமையும், புண்ணியமும் கிடைக்கும். இதற்காக நாம் நம்முடைய குடும்பங்களை புனித சூசையப்பருக்கு காணிக்கையாக்கி, நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம்.

புதுமை

மரியன்னை புனித எலிசபெத்தம்மாளை நலம் விசாரித்தல்' என்ற பெயரில் புனித பிரான்சிஸ் சலேசியூஸ் என்பவரும் புனித தெஹாந்தால் அருள் பிரான்சிஸம்மாளும் சேர்ந்து கன்னியர் சபையை தோற்றுவித்தார்கள். இச்சபையில் தெசோஸ் என்ற கன்னியர் ஒருவர் இருந்தார். இவர் செல்வந்தரின் மகளாயினும் மிகவும் பணிவாக பக்தியாக இருந்தார். ஆனால் எந்த துறவற சபையிலும் சேராமல் அவற்றை வெறுத்து வந்தார். புனித பிரான்சிஸ் (பிரான்சிஸம்மாளுக்கு) கனவில் "தேசோஸ் என்ற பெண் இக்கன்னியர் இல்லம் வந்தால் மேலும் பக்தியுடையவளாக இருப்பது மட்டுமல்லாமல் இச்சபைக்கு அரிய பொக்கிஷமாக அமைவாள்' என அறியவே இவர்கள் அப்பெண்ணிடம் மிகவும் அன்பொருந்தார்கள். மேலும் புனித சூசையப்பரிடம் அப்பெண் தங்கள் கன்னியர் இல்லம் வரவும் அங்கு நிலைத்திருக்கவும் அவருக்குள்ள வெறுப்பினை நீக்கவும் வெண்டிக் கொண்டார்கள். புனித சூசையப்பரும் அவ்வாறே நிறைவேறச் செய்தார். இதனை அறிந்த தெசோஸ் இறுதிவரை புனித சூசையப்பரை தனது காவல் தூதராக, பாதுகாவலர் என்றும் அழைத்தார்.

இவருக்கு கன்னியர் இல்லத்தில் பற்பல இன்னல்கள் வந்தபோதும் இவர் அவைகளைப் போக்க மேலும் மேலும் பக்தியில் மூழ்கினார். ஒருதடவை அசுத்த ஆவியினால் இவரது மனம் குழம்பி, பயத்தால் விவேகத்தையும் அறிவையும் இழந்து இருந்தபோது எழுத்தாணியினை எடுத்து தனது மார்பில் இயேசு மரி சூசை என இரத்தம் வழயுமளவுக்கு எழுதினார். அவர் அக்கன்னியர் இல்லத்தின் பொருளாளராக இருந்தபோது பணியாட்களுக்கு கூலி கொடுக்கவே பணமின்றி இருந்தது. அவர் புனித சூசையப்பரிடம் தனது பணப்பை காலியாக இருப்பதை காண்பித்து தந்தையிடம் கேட்பதைப்போல் உறுதியாக கேட்டார். பின்னர் முன்பின் தெரியாத சிலரால் பணம் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இதனால் புனித சூசையப்பர் ஞான வாழ்வில் மட்டுமின்றி உலகம் சம்பந்தப்பட்டவைகளிலும் உதவுவார் என்பதை அறிந்து அவரின் உதவியைக் கேட்போம். (3 பர, அரு, பிதா)

செபம்

இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியன்னையைப் பேணி காத்து வந்த புனித சூசையப்பரே உம்மை வணங்கி புகழ்கின்றோம். மரியன்னையிடம் நாங்கள் வைக்க வேண்டிய பக்தி வணக்கத்திற்கு நன்மாதிரியாய் இருந்து எங்களுக்கு காண்பித்திரே கன்னிமரியிடம் அனைவரும் பக்திகொள்ள செய்தருளும். சகல வல்லமை பொருந்திய மரியன்னை உமக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததை நாங்கள் கண்டுணரச் செய்தருளும். அவர் உம்மீது காட்டிய பரிவையும் பாசத்தையும் பார்த்து உம்மோடு மரியன்னையையும் சேர்த்து அன்புசெய்ய எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

விண்ணக அரசியான கன்னிமரியாளை திருமணம் செய்த அரசராகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம்.
இவ்வுலகில் மரியன்னைக்கு ஆதரவாயிருந்த தந்தையாகிய புனித சூசையப்பரே! உமக்கு புகழ்!
விண்ணக அரசியால் வணங்கப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை வாழ்த்துகிறோம்.

செய்ய வேண்டிய நற்செயல்

மரியன்னையின் திருச்சுருபம் முன்பாக 3பர, அருள், பிதா சொல்வோம்.