திவ்ய பலிபூசை

இது எப்பேர்ப்பட்ட தெய்வீக அதிசயம் என்பதை நாம் மோட்சத் தில்தான் புரிந்து கொள்வோம். நாம் எவ்வளவுதான் பரிசுத்தர்களாகவும், தேவ ஏவுதல் பெற்றவர்களாகவும் இருந்தாலும், புத்தியெல்லாம் கடந்து நிற்கிற இந்தத் தெய்வீக அலுவல் பற்றித் தெளிவாக எடுத்துரைக்க நம்மால் ஒருபோதும் இயலாது.

அர்ச். பியோவிடம் , "சுவாமி, பூசையை எங்களுக்கு விளக்குங்கள்'' என்று கேட்கப்பட்டது. அவர் பதில் மொழியாக, "என் குழந்தைகளே, அதை நான் எப்படி உங்களுக்கு விளக்கிக் கூற முடியும்? பூசை சேசுநாதரைப் போலவே அளவற்றதாக இருக்கிறது. பூசை என்றால் என்ன என்று ஒரு சம்மனசானவ ரிடம் கேட்டுப் பாருங்கள், "அது என்னவென்றும், அது ஏன் ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் எனக்குப் புரிகிறது, ஆனாலும், அது கொண்டுள்ள மதிப்பு எவ்வளவு பெரியது என்று எனக்குப் புரியவில்லை ' என்று அவர் பதில் சொல்வார்'' என்று கூறினார்.

"திவ்ய பலிபூசையை விட அதிக பரிசுத்தமானதும், மேலானதுமான ஒரு செயலைக் கடவுளே கூட நிறைவேற்ற முடியாது" என்று அர்ச். லிகோரியார் கூறுகிறார். ஏனெனில் அது நமக்காக கடவுள் தாமே நிறைவேற்றிய பரம இரகசியங்களான சேசுநாதரின் பிறப்பு, திருப்பாடுகள், திருமணம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

"பூசை நிறைவேற்றப்படுவது, சிலுவையின் மீது நிகழ்ந்த சேசுவின் மரணத்துக்கு இணையான மதிப்புள்ளது" என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார். இதே காரணத்திற்காக அர்ச். பிரான்சிஸ் அசிசியார், ''சர்வேசுரனுடைய திருச்சுதன் பீடத்தின் மீது, குருவானவரின் கரங்களில் தோன்றும்போது, மனிதன் நடுங்க வேண்டும், உலகம் அதிர வேண்டும், மோட்சம் முழுவதும் ஆழமாக நெகிழ்ச்சியடைய வேண்டும்" என்று கூறினார்.

எனவே ஞாயிறு பூசை காணத் தவறாதிருக்கவும், முடிந்த வரை அடிக்கடி, ஏன், தினமும் கூட பூசைகாண முயல்வதும் கிறிஸ்தவனின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.