ஜுலை 09

கோர்கம் வேதசாட்சிகள் (கி.பி. 1572) 

கோர்கம் என்னும் ஸ்தலத்தில் 19 குருக்கள் பதிதர்களான கல்வீன் மதத்தினரால் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

இவர்களுக்குள் பிரான்சீஸ்கு, தொமினிக், அகுஸ்தீன் முதலிய சபையாரும் இருந்தார்கள். சத்திய வேதத்தின் மட்டில் பதிதருக்கிருந்த பகையால் 19 பேரையும் குரூரமாய் உபாதித்து சத்திய வேதத்தை விடும்படி கட்டாயப் படுத்தியும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. 

அநேக நாட்கள் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் பசியால் அவர்களை வாதித்தபின், ஒரு வெள்ளிக் கிழமையன்று மாமிசம் கலந்த உணவை வேதசாட்சிகளுக்குக் கொடுத்தபோது அவர்கள் அதைத் தொடாமல் சர்வேசுரனைத் துதித்து, தேவ தாயார் பேரில் பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள். 

இதைக் கண்ட துஷ்டப் பதிதர் கோப வெறிகொண்டு வேதசாட்சிகளை நிந்தித்து தூஷித்து இரத்தம் வரும்வரை நிஷ்டூரமாய் அடித்தும், அவர்கள் அதற்கு அஞ்சாமல் தாங்கள் சீக்கிரத்தில் பெறவிருக்கும் வேதசாட்சி முடியை நினைவு கூர்ந்து ஆறுதலடைந்தார்கள். 

தாங்கள் செய்த முயற்சியெல்லாம் வீணாகியதைக் கண்ட பதிதர் சினங் கொண்டு 19 குருக்களையும் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.

யோசனை

நாம் திருச்சபையின் பிரமாணிக்கமான பிள்ளைகளாயிருப்பதுடன் அதன் கட்டளைகளை ஒழுங்காக அனுசரிக்கவும் வேண்டும். நமது இரட்சகர் இறந்த நாளாகிய வெள்ளிக்கிழமையன்று மாமிசம் உண்ணாதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். எப்ரெம், ம. அர்ச். எவரில்டிஸ், க.