ஏழு சகோதரர்களும் அவர்கள் தாயாரும் - வேதசாட்சிகள் (2-ம் யுகம்)
தன் கணவன் இறந்தபின் பெலிசித்தாஸ் என்பவள் ஜெப தபம் புரிந்து பிறர் சிநேகக் காரியங்களைச் செய்துவந்தாள். இப்புண்ணியவதி தன் 7 குமாரர்களையும் புண்ணிய வழியில் வளர்த்து, சகல புண்ணியங்களிலும் அவர்களுக்கு நன் மாதிரிகையாயிருந்து வந்தாள்.
இவளுடைய தர்ம நடத்தையாலும் மேலான புத்திமதியாலும் அநேக அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்வதைக் கண்ட பூசாரிகள் பொறாமைக் கொண்டு, இதைப்பற்றி அரசாங்கத்திற்கு தெரிவித்தார்கள். தேசாதிபதி 7 சகோதரர்களையும் அவர்கள் தாயையும் பிடித்து பொய்த் தேவர்களை வணங்கும்படிக் கட்டளையிட்டான்.
அவர்கள் அதற்குச் சம்மதியாததைக் கண்ட அதிபதி அவர்களுடைய தாயைத் தன்னிடம் வரவழைத்து: அம்மா, நீ பெற்ற இந்தப் பிள்ளைகள் மேல் இரக்கம் வைத்து அவர்கள் நாட்டு தேவர்களை வணங்கும்படி புத்தி சொல், இல்லாவிட்டால் அவர்கள் வாதித்துக் கொல்லப்படுவார்கள் என்றான்.
அப்போது அத்தாய் அதிகாரியைப் பார்த்து: "ஐயா, என் பிள்ளைகளை நான் உண்மையாகவே நேசிக்கிறேன்; இவ்வுலகப் பாக்கியம் அநித்தியமானது. பரலோகப் பாக்கியமோ முடிவற்றது” எனக் கூறி, பிள்ளைகளைப் பார்த்து: "என் மக்களே! மேலே பாருங்கள்; நமது கர்த்தராகிய சேசுநாதரும் மோட்சவாசிகளும் உங்களை எதிர்பார்க்கிறார்கள். தைரியத்துடன் சரீர வாதைகளை அனுபவியுங்கள்'' என்றாள்.
இதைக் கேட்ட அதிபதி சினங் கொண்டு, அவள் கன்னத்தில் அறையக் கட்டளையிட்டு, பிள்ளைகளுக்கு நயபயத்தைக் காட்டியும் அவர்கள் இணங்காததினால், ஜானுவாரியுஸ், பெலிக்ஸ், பிலிப் என்பவர்களை தடியால் அடித்துக் கொல்லவும் சில்வானுஸ் என்பவரை உயர்ந்த இடத்திலிருந்து கீழே தள்ளவும் அலெக்ஸாண்டர், வித்தாலிஸ், மார்ஸியாலிஸ் என்பவர்களை சிரச்சேதம் செய்யவும் கட்டளையிட்டான்.
4 மாதங்களுக்குப்பின் பெலிசித்தாஸ் அம்மாளும் வேதசாட்சி முடி பெற்றாள்.
யோசனை
தாய்மாரே! உங்கள் பிள்ளைகளை நீங்கள் உண்மையாகவே நேசிப்பீர்களாகில் அவர்கள் மெய்யான பாக்கியமடையத் தக்க வழியை அவர்களுக்கு காட்டுவீர்களாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ருபினாவும் துணை ., வே.