அர்ச். எலிசபெத்தம்மாள் - இராணி (கி.பி. 1336)
ஆரகன் தேசத்து இராஜ குமாரத்தியான எலிசபெத்தம்மாள் புண்ணிய வாளரால் வளர்க்கப்பட்டு சிறுவயதிலேயே அர்ச்சியசிஷ்டவளாகக் காணப் பட்டாள். குழந்தையாயிருக்கும்போதே கோவிலுக்கு போக ஆசைப்படுவாள்.
எட்டு வயதிலேயே ஒருசந்தி பிடிக்கத் தொடங்கி, ஒறுத்தலை அனுசரித்து, பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தாள். 12-ம் வயதில் போர்ச்சுகல் நாட்டு அரசனை மணமுடித்துக்கொண்டு புண்ணிய வழியில் முன்னிலும் மேன்மையாக நடந்து வந்தாள்.
அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துவிட்டு திவ்விய பலிபூசைக் கண்டு அரண்மனை வேலைகளைச் செய்வாள். ஞானக் காரியங்களினிமித்தம் குடும்பக் காரியங்களை அசட்டை செய்யமாட்டாள். நல்ல ஆயத்தத்துடன் தேவநற்கருணை வாங்குவாள். கதைப் புத்தகங்களை வெறுத்து ஞானப் புத்தகங்களை வாசிப்பாள்.
அவளுடைய தான தர்மங்கள் கூற முடியாதளவு இருந்தன. அநேக தேவாலயங்களையும் தர்மசாலைகளையும் கட்டுவித்தாள். இந்தப் புண்ணியவதி ஏழைகளுக்கு உணவுப் பதார்த்தங்களை தன் மடியில் மறைத்துக்கொண்டு எடுத்துச் செல்வதை அரசன் கண்டு, அதைத் திறந்து பார்த்தபோது ரோஜாப் புஷ்பங்களாக மாறியதைக் கண்டு அதிசயித்தான்.
ஒழுங்கற்ற தன் கணவனைக் கடிந்துகொள்ளாமல் ஜெப தபத்தாலும் நற்புத்தியாலும் அவனை மனந்திருப்பினாள். எப்போதும் சமாதானக் குணமுள்ளவளாய் பலமுறை விரோதிகளை சமாதானப்படுத்தினாள். தன் குமாரனுக்கும் கணவனுக்கும் உண்டான பெரிய சண்டையை நிறுத்தி இருவரையும் சமாதானப்படுத்தினாள்.
இந்த நல்ல இராணியின் மேலும் அவளது மெய்க்காப்பாளன் மேலும் இராயனிடம் கோள் சொல்லி அம்மெய்க்காப்பா எனைக் காளவாயில் போட்டுக் கொல்ல ஏற்பாடு செய்த ஊழியன், தான் கொல்லப்பட்டானே தவிர, மெய்க்காப்பாளன் கொல்லப்படவில்லை.
ஏனெனில் குற்றமற்ற மெய்க்காப்பாளன் காளவாய்க்குப் போகும் வழியிலிருந்த கோவில் ஒன்றில் கண்ட பூசைப் பலனால் அற்புதமாய் மரணத்திலிருந்து காப்பாற்றப் பட்டான்.
தன் கணவனுடைய மரணத்திற்குப்பின் எலிசபெத்தம்மாள் அருந்தவப் புண்ணியங்களை நடத்தி, அர்ச்சியசிஷ்டவளாய் வாழ்ந்து, தன் பிள்ளைகளைச் சமாதானப்படுத்துவதற்காக செய்த பிரயாணத்தில் நோய்வாய்ப்பட்டு மோட்ச முடியை சுதந்தரித்துக்கொண்டாள்.
யோசனை
சமயம் வாய்க்கும்போதெல்லாம் பலிபூசை காண முயற்சி செய்வோமாக. மேலும் கதைப் புத்தகங்களை வெறுத்து ஞானப் புத்தகங்களை வாசிப்போமாக.