சில அற்புதங்கள்

உடைந்த கூஜா செம்மையாதல்

அந்தோனியார் இன்னொரு துறவியையும் அழைத்துக்கொண்டு, கால் நடையாகப் புறப்பட்டார். மார்செயில்ஸ் நகரத்திற்குப் போய் அங்கிருந்து கப்பலில் இத்தாலி செல்ல வேண்டும். வெகுதூரம் நடந்து சென்ற இவர்கள் நடக்க வலுவற்று, தள்ளாடிப் போய்க் கொண்டிருப்பதை ஒரு ஏழைப் பெண் கவனித்து, அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை தன் குடிசைக்கு அழைத்து வந்து, சிற்றுண்டி அருந்தி இளைப்பாறிச் செல்ல வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டாள், அவர்களும் அதற்கு இசைந்து வீட்டிற்குப் போனார்கள். அவர் இவர்களை அன்புடன் உபசரித்து அவ்விருந்திற்கு வேண்டிய பாத்திரங்களை இரவல் வாங்கி வந்தாள். சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தாள். இவர்களைப் பந்தி அமரச் செய்து, பீப்பாயில் இருந்த திராட்சை ரசத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்துக் கொண்டிருந்த போது இரவல் வாங்கி வந்த அழகிய கண்ணாடிக் கூஜா ஒன்று தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. உடைந்த ஒலி கேட்டு ஓடி வந்த அவள் இரசப்பீப்பாவின் அடைப்பை அடைக்காமல் வந்து விட்டாள். அண்டை வீட்டாரிடம் இரவல் வாங்கி வந்த அவ்வழகிய பாத்திரத்தை எவ்வாறு தன்னால் கொடுக்க இயலும் என அவள் மிகுந்த மனத்துயர் அடைந்தாள். அந்தோனியார் இதைக் கண்டு அவள் மீது இரக்கம் கொண்டு எழுந்து சென்று உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்துச் சேர்த்து அவைகளின் மீது சிலுவை அடையாளமிட்டார். உடனே கூஜா முன்னிருந்த நிலையடைந்தது.

இரசப்பீப்பா அடைக்கப்படாதிருந்த போதிலும், அதலிருந்து ஒரு துளி இரசம் கூட சிந்தி வீணாகவில்லை . அப்பீப்பாவில் பாதி அளவு இரசமே இருந்தது. அதன் பின்னர் பீப்பாய் நிறைய இரசம் காணப்பட்டது. அனைவரும் வியந்தனர்.
இத்தாலி செல்லும் வழியில் சிசிலித்தீவில் பல மடங்களைக் கட்டினார்.

ஊனமுற்றவன் குணமடைதல்

பதுவை துறவியர் மடத்தில் அவர் வாழ்ந்தார். அவரது முதல் பிரசங்கம் பலரைக் கவர்ந்தது. அவரை அங்குள்ள மக்களும் மிகவும் நேசித்தனர். அவரை விட்டுப் பிரிய விருப்பவில்லை. அந்தோனியாரும் எங்கு சென்றாலும் பதுவைக்குத் திரும்பி விடுவார். அவ்வளவு அன்பு அம்மக்கள் மீது அவருக்கு.

பீற்றர் என்ற பதுவைநகர் வாசி, கை கால் இயங்காத தனது நான்கு வயது மகளான பதுவானாவை அந்தோனியாரிடம் எடுத்துச் சென்றான். அந்தோனியார் சிலுவை அடையாளம் வரைந்து செபித்தார். குழந்தை நடந்தது. தந்தை மகிழ்ந்தான்.

"படித்தவனுடைய ஞானத்தை ஓய்வு காலத்தில் அறியலாம்" (சீராக் 38/25) தனது ஓய்வு வேளைகளை உல்லாச சல்லாபங்களில் அவர் செலவிடவில்லை. "நீண்ட பேச்சில் பாவம் இராமற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனே பெரிய விவேகி” மோன நிலையில் இறைவனுடன் பேச 3700 அடி உயரமுள்ள லாவெர்ணா மலைக்கு அடிக்கடி செல்வார். இம்மலையில் தான் அசிசி பிரான்சிஸாருக்கு ஆண்டவரின் சாட்சி கிடைத்தது. தமது மறை உரையை, ""உங்களுக்கு சமாதானம் உண்டாகுக” என்று தொடங்குவார். சமாதானத்தைப் போற்றியே பேசுவார். பலமுறை பேசியதை கேட்ட மக்களிடையே சமாதானம் நிலவுவதாயிற்று.

நஞ்சு கலந்த உணவை உண்கும் பிழைத்திருந்தது 

"நஞ்சு கலந்த உணவை உண்டு பிழைத்திருந்ததால், தாங்கள் கத்தோலிக்கராவதாக” பதிதர்கள் சிலர் வாக்களித்தனர்.

“உங்கள் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு தேவ அருளால் - இது ஆகும்" என உரைத்து சிலுவை அடையாளம் வரைந்து விஷ உணவை உண்டார். அவர் மடியவில்லை . பதிதரின் துடுக்கு அடங்கியது. கத்தோலிக்கராகி, செய்த பிழையை மன்னித்து விடுமாறு அவரை வேண்டினர்.

"உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ, மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்கு பேச்சுவன்மையும், ஞானமும் அருளுவேன்.” (லூக்காஸ் 21/15)

வெட்டிய கூந்தல் முன்போலாகுதல்

கணவனுக்குப் பயந்த பெண் ஒருத்தி கணவனுக்குத் தெரியாமல் புனிதரின் பிரசங்கத்தை கேட்கச் சென்றாள். அக்கொடியவன் அவளது கூந்தலை அறுத்து விட்டான். அவள் கதறியழுது புனிதரிடம் முறையிட்டாள். இரங்கிய அவர், கூந்தலை முன்போல் வளரச் செய்தார். கொடியவனும் நடந்ததை அறிந்து மனம் மாறினான்.

கிழிந்த ஆடை சரியாதல்

இன்னொரு ஏழைப் பெண், மறைஉரை கேட்கச் சென்றாள். வழியில் சறுக்கி விழுந்ததால் ஆடை கிழிந்து கறை பட்டது. வேறு ஆடை வாங்கப் பொருளில்லாத அந்த ஏழை தனது கணவன் திட்டி உதைப்பானே என்ற பயத்தில் அந்தோனியாரிடம் அபயமடைந்தாள். அந்தோனியார் செபம் செய்து ஆடையை முன்போலாக்கினார்.

மழையில் நனையாத பணியாளர்

ஒரு நாள் மடத்தில் உணவு இல்லாததால் காய்கறி வாங்கிட ஒரு சீமாட்டியிடம் சென்றார். அவள் உணவுப் பொருட்களை தன் பணியாளரிடம் கொடுத்து அனுப்பினாள்.

யார் கடும் மழை பெய்து கொண்டிருந்த போதிலும் காய்கறி கொண்டு சென்ற பணியாட்கள் நனையவில்லை நடந்ததைக் கேட்டு அறிந்த அவள் தாராள மனத்துடன் அடிக்கடி உதவி செய்து வந்தாள். கொடுப்பதால் நிறைவு அடைகிறோம் என உணர்ந்தாள்.