இறந்தவர்கள் உயிர் பெறல்

இறந்த குழந்தை உயிர் பெறுதல்

ஒரு பெண் தூயவரின் மறையுரையைக் கேட்க அதிக ஆசைப்பட்டு, தொட்டிலில் துயின்ற குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் பிரசங்கத்தைக் கேட்க ஓடோடிச் சென்றாள். மனநிறைவுடன் திரு உரையைக் கேட்டாள். நிம்மதியுடன் வீடு திரும்பினாள்.

வீட்டிலிருந்த குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு துடியாய்த் துடித்தாள். அழுதவாறே புனிதரிடம் சென்றாள். நடந்ததைச் சொன்னாள்

"உன் குழந்தை விளையாடுகிறது சென்று பார்'' என்றார். விசுவாசத்தோடு வீடு திரும்பினாள். மாண்ட குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

கொதிநீரில் விளையாடிய குழந்தை பிழைத்தது

ஒருபெண் புனிதரின் உரையைக் கேட்கச் சென்றாள். வீட்டில் குழந்தையுமிருந்தது. எரியும் தீ மீது வைத்த கொப்பறையும் இருந்தது. இதனை அவள் மறந்து விட்டாள்.

எத்தனை ஆர்வம் திருஉரைகேட்பதில் அவளுக்கு. பிரசங்கம் முடிந்தபின் கொப்பறையின் நினைவு வந்தது. பதறி ஓடி வந்தாள்

தூயவரின் அருளால் பிள்ளை கொதிக்கும் நீரில் விளையாடிக் கொண்டிருந்தது. எந்த விபத்தும் ஏற்படவில்லை .

அவரது மறை உரையின் சிறப்பையும், மக்கள் அதன் மீது காட்டிய அளவிலா ஆர்வத்தையும் விருப்பையும் இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

பிணமாண வாலிபன் உயிர் பெறல்

ரோமாக்னா மாகாணத்தின் மேலாளர் பதவி 1227ல் தூயவருக்குத் தரப்பட்டது.

ஜெமானே பகுதியில் இவர் ஒரு சிறு மடம் கட்டினார். அவ்வழியே மாட்டு வண்டியில் ஒரு குடியானவன் வந்தான். தனக்கு உதவும்படி அவனைக் கேட்டார். வண்டியில் ஒரு வாலிபனின் பிணம் இருப்பதாகப் பொய்கூறிக் கடந்து சென்று விட்டான். அவரை ஏமாற்றி விட்டதாக எண்ணி சிறிது தூரம் சென்ற பின் வாலிபனை எழுப்பினான். வண்டியில் உயிருடனிருந்த வாலிபன் பிணமாய்க் கிடந்தான்.

புனிதரிடம் ஓடோடி வந்து பொய்யுரைத்தமைக்கு மன்னிப்புக் கோரினான். இறந்தவனை மீண்டும் உயிருடன் எழுப்பினார். அந்நகர மக்கள் அவர் சொன்னவைகளை அதன் பின்னர் தட்டவே இல்லை.