சேசுநாதர், நம் முன்மாதிரிகை

அவருடைய நடத்தையையும், செயல்களையும் உன் இருதயத்தில் ரூபிகரம் செய்து கொள். சகல மனிதர்களுக்கும் மத்தியில் அவருடைய இருத்தலானது, எவ்வளவு சாந்தமும், அமைதியுமுள்ளதாயிருக்கிறது! அவருடைய சொந்த மக்களிடையே, அவர் எத்துணை அன்போடு பழகுகிறவராக, ஊக்கமும், மகிழ்ச்சியும் தருகிறவராக இருக்கிறார்! உண்பதிலும், பானம் பண்ணுவதிலும் எவ்வளவு கட்டுப்பாடு உள்ளவராயிருக்கிறார்! ஏழைகள் மட்டில் அவர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார்! எல்லாக் காரியங்களிலும் அவர்களைப் போலவே தம்மை ஆக்கிக் கொண்டவர் அவர்; அவருடைய சொந்த உள்ளார்ந்த வட்டத்திற்குள்தான் அவர்கள் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு யாரையும் புறம்பே தள்ளிவிடாதவராக அவர் இருந்தார்! எந்த அளவுக்கு யாரிடமிருந்தும், குஷ்டரோகிகளிடமிருந்தும், பாவியிடமிருந்தும், இழிந்தவர்களிடமிருந்தும், வெட்கமற்றவர்களிடமிருந்தும் கூட அவர் தம்மைச் விலக்கிக் கொள்ளாதவராக இருந்தார்!

உயர்ந்த நிலையினரிடம் எவ்வாறு அவர் நயந்து நடவாதிருந்தார்! எவ்வாறு அவர் யாரிடமும் அடிமையின் பணிவும், முகஸ்துதியும் காண்பிக்காதிருந்தார்! எந்த அளவுக்கு உலகக் கவலைகளிலிருந்து தம்மை அவர் உயர்த்தி வைத்திருந்தார்! எந்த அளவுக்கு அவர் தமது சரீரத்தின் தேவைகளை சட்டை பண்ணாமலிருந்தார்! அவருடைய கண்கள் எவ்வளவு கட்டுப்பாடுள்ளவையாக இருந்தன! பரிகசிக்கப்பட்ட போது அவர் எவ்வளவு பொறுமையோடு நின்றார்! அவருடைய பதில்கள் எவ்வளவு மென்மையாயிருந்தன! எந்த அளவுக்கு ஒரு கூர்மையான, அல்லது கசப்புள்ள பதிலால் தமது மகிமையை அவர் வெளிப்படுத்தாமல் இருந்தார்! எவ்வாறு அவர் தமது மெளனத்தாலும், அமைதியாலும், சத்தியத்தை உறுதிப் படுத்தியதாலும், தமது நேசத்தைத் தந்ததாலும் பழிவாங்கும் வன்ம உணர்வை விலக்கினார்! மேலும், அவருடைய ஒவ்வொரு அசைவும் எவ்வளவு கம்பீரமும், அமைதியுமுள்ளதாயிருந்தது! அவருடைய ஒவ்வொரு செயலும் எந்த அளவுக்கு எந்தக் குறையுமின்றி இருந்தது!

யார் மேல் வைத்த சிநேகத்திற்காக மனிதனாகவும், மரிக்கவும் அவர் சித்தங் கொண்டாரோ, அந்த ஆத்துமங்களின் இரட்சணியத்திற்காக அவர் எவ்வளவு ஏங்கினார்! தமது நடத்தை முழுவதிலும் எவ்வாறு அவர் சகல நன்மைகளுடையவும் முன்மாதிரிகையாகவும், சகல மனிதருக்கும் ஒளியாகவும், அவர்களது வழியாகவும், அவர்களது சத்தியமாகவும், அவர்களது ஜீவியமாகவும் இருந்தார்!

மீளவும், உழைப்பின் கடுமையையும், குறைபாடுகளையும், பசி, தாகத்தையும், கடும் களைப்பையும் அவர் எவ்வாறு தாங்கிக் கொண்டார்! துன்புறுகிற அனைவரிடமும் அவர் எவ்வளவு தயையுள்ளவராக இருந்தார்! எவ்வாறு பலவீனர்களுக்கு ஒத்த விதமாக அவர் தம்மை மாற்றிக் கொண்டார்; தாழ்ந்தவர்களுக்கு முன்பாக அவர் எந்த அளவுக்குத் தம்மையே எளிமைக்கு உட்படுத்தினார்! துர்மாதிரிகையை அவர் எவ்வாறு விலக்கினார்! எப்படி எந்தப் பாவியையும் மறுதலிக்காதிருந்தார்! மனந்திரும்பிய ஒவ்வொருவரையும் எவ்வளவு இரக்கத்தோடு வரவேற்றார்! எந்த அளவுக்குத் தம் வார்த்தைகளில் சமாதானமுள்ளவராகவும், நல்ல மனமுள்ளவர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தார்! இறுகிய இருதயங்களிடம் அவர் எவ்வளவு கடுமையாயிருந்தார்! ஜெபிக்க அவருக்கு எவ்வளவு ஏக்கம்! ஊழியஞ் செய்வதில் எவ்வளவு வேகம்! “ஓர் ஊழியனைப் போல நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்” என்று அவர் தம்மைப் பற்றிக் கூறுகிறார்.

மீளவும், ஜெபத்தில் எத்தனை மணித்தியாலங்களை அவர் செலவிட்டார்! தம் பெற்றோருக்கு எவ்வளவு கீழ்ப்படிந்திருந்தார்! பெருமையடித்துக் கொள்வதன் ஒவ்வொரு அடையாளத்தையும், தனிப்பட்டவராயிருப்பதன் ஒவ்வொரு காட்சியையும் அவர் எவ்வாறு வெறுத்துத் தள்ளினார்! எவ்வாறு அவர் இந்த உலக மகிமை அனைத்தையும், இந்த உலக அதிகாரம் அனைத்தையும், இந்த உலக வெற்றியின் வழிகள் அனைத்தையும் தவிர்த்தார்!

அவரைப் பற்றி நாம் சிந்திக்கிற போது, இந்த எல்லாச் சிந்தனைகளும், இன்னும் அதிகமான சிந்தனைகளும் நம் மனத்தில் எழுகின்றன. நம் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும், அசைவுக்கும், நிற்றலுக்கும், அமர்தலுக்கும், உண்பதற்கும், அமைதியாயிருப்பதற்கும், பேசுவற்கும், தனியாயிருப்பதற்கும், மற்றவர்களோடு இருப்பதற்கும் முன்மாதிரிகைகளை நாம் அவரில் காணலாம். அவருடைய நட்புறவில் நீங்கள் இனிமையையும், நம்பிக்கையையும் பெற்றுக் கொள்வீர்கள். அவருடைய ஒவ்வொரு புண்ணியத்தாலும் நீங்கள் பலப்படுத்தப் படுவீர்கள்.

அவரை எப்போதும் மனத்தில் கொண்டிருப்பதும், அவரைக் கண்டுபாவிப்பதும், அவருடைய சிநேகத்தை உங்களுக்கென சம்பாதித்துக் கொள்வதுமே உங்கள் ஞானமாகவும், உங்கள் தியானமாகவும், உங்கள் ஆராய்ச்சியாகவும் இருக்கக் கடவன.

அதிமேற்றிராணியார் கூடியர், சே. ச.