இஸ்பிரீத்து சாந்துவின் ஏழு கொடைகளுக்கான ஜெபம்

ஓ ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவே, தேவரீர் பரலோகத்திற்கு ஆரோகணமாகிப் போகுமுன், உமது அப்போஸ்தலர்களுடையவும், சீடர்களுடையவும் ஆத்துமங்களில் தேவரீர் தொடங்கிய வேலையை முடிக்கத் தக்கதாக உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவை அனுப்புவதாக வாக்களித்தீரே. அதே இஸ்பிரீத்து சாந்து, உமது வரப்பிரசாதத்தினுடையவும், சிநேகத்தினுடையவும் வேலையை என் ஆத்துமத்தில் பூரணமாக்கும்படி, அவரை எனக்குத் தந்தருளத் தயைசெய்வீராக.

இந்த உலகத்தின் அழியக் கூடிய வஸ்துக்களை நான் நிந்தித்து, நித்தியமானவைகளின் பேரிலேயே தாகங் கொண்டிருக்கும்படியாக, ஞானத்தின் கொடையையும், உமது தெய்வீக சத்தியத்தின் ஒளியினால் என் மனத்தை ஒளிர்விக்கும்படியாக, புத்தி என்னும் கொடையையும், சர்வேசுரனைப் பிரியப்படுத்தி, மோட்சத்தை அடைந்து கொள்ளத் தக்கதாக, விமரிசை என்னும் கொடையையும், உம்மோடு என் சிலுவையை நான் சுமந்து உம் பிறகே வரவும், என் இரட்சணியத்திற்கு விரோதமான எல்லாத் தடைகளையும் திடதைரியத்தோடு வெல்லவும் தக்கதாக, திடம் என்னும் கொடையையும், அடியேன் தேவரீரையும், என்னையும் அறிந்து கொள்ளவும், அர்ச்சியசிஷ்டவர்களின் வழியில் உத்தமதனத்தில் வளரவும் தக்கதாக, அறிவு என்னும் கொடையையும், சர்வேசுரனுடைய ஊழியமானது எனக்கு மதுரமானதாகவும், மனதிற்கு உகந்ததாகவும் நான் காணத் தக்கதாக, பக்தி என்னும் கொடையையும், சர்வேசுரன் மீது ஒரு நேசமுள்ள சங்கையினால் நான் நிரப்பப்படவும், எந்த விதத்திலும் அவரை வேதனைப்படுத்த அச்சப்படவும் தக்கதாக, தேவபயத்தின் கொடையையும் எனக்குத் தந்தருளும்.

பிரியமான ஆண்டவரே, உமது உண்மையான சீஷர்களுடைய அடையாளத்தை என் மீது பொறித்தருளும். சகல காரியங்களிலும், உமது தேவ இஸ்பிரீத்துவானவரைக் கொண்டு என்னை நடப்பித்தருளும். ஆமென்.