பாத்திமா காட்சிகள் - ஜஸிந்தா

பிரான்சிஸ் காய்ச்சல் என்று படுத்த சில நாட்களுக்குள் ஜஸிந்தாவும் அதே வி­க் காய்ச்சலால் தாக்கப்பட்டாள்!  மார்ட்டோவுக்கும், ஒலிம்பியாவுக்கும் மனம் உடையத் தொடங்கியது. 

அவர்கள் தங்கள் பிள்ளைகள் அன்னையின் தரிசனையை அடைந்தார்கள் என்று திடமாக நம்பினார்கள்.  இவ்விரு பிள்ளைகளையும் சீக்கிரம் மோட்சத்திற்குக் கூட்டிச் செல்வதாக தேவதாய் கூறியிருந்ததையும் அறிவார்கள்.  ஆயினும் பெற்ற மனங்கள் கலங்கித் தவித்தன. அவர்களால் என்ன செய்ய முடியும்?

நாடெங்கும் பரவி வந்த வி­க் காய்ச்சலோ அதிக வேகமுடையது. பாத்திமாவிலும், இதர ஊர்கள் எங்கும் துக்கமணி தினமும் எத்தனை தடவை அடிக்கிறது என்பதற்கு ஒரு கணக்கில்லை. பல ஊர்களில் மக்கள் அளவுக்கு மிஞ்சி பீதியடையாதபடி யார் இறந்தாலும் துக்க மணி அடிக்காமலே அடக்கம் செய்ய வேண்டியதாயிற்று. அவ்வளவு பயங்கரமான கொள்ளை நோய்!  அது அப்படியிருக்க இந்தச் சிறு குழந்தைகள் தங்களுக்குள் பேசிய பேச்சுக்கள் எப்படி இருந்தன!

தனக்கு வி­க் காய்ச்சல் கண்டு விட்டது என்ற அக்களிப்பில் இருந்த ஜஸிந்தா லூஸியாவைப் பார்த்து, “இங்கே பார் லூஸியா, நம் அம்மா எங்களை (தன்னையும், பிரான்சிஸையும்) இங்கு பார்க்க வந்தார்கள். சீக்கிரம் பிரான்சிஸை மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறினார்கள்! 

மேலும் என்னிடம், நீ இன்னும் அதிகமான பாவிகளை மனந்திருப்ப ஆசைப்படுகிறாயா என்று கேட்டார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.  நான் இரண்டு ஆஸ்பத்திரிகளுக்குச் செல்ல வேண்டும் என்று நம் அம்மா விரும்புகிறார்கள். 

செளக்கியம் அடைவதற்கல்ல, கடவுளின் அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு விரோதமாய்க் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும் நான் அதிகம் துன்பம் அனுபவிப்பதற் கென்றே அந்த ஆஸ்பத்திரிகளுக்குச் செல்வேன். 

மேலும் நீ இப்போ மோட்சத்துக்கு வர மாட்டாய் என்றும் அம்மா கூறினார்கள்.  என்னை என் அம்மாதான் அந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்வார்களாம். அப்புறம் அங்கு நான் தனியே இறப்பேன்” என்றாள்.

இப்படிப்பட்ட உரையாடல்களை இப்பிள்ளைகளிடம் கேட்ட மார்ட்டோவும், ஒலிம்பியாவும் மிகவும் வேதனைதான் அடைந்தனர். இந்த இரு குழந்தைகளையும் தாங்கள் விரைவில் இழக்கப் போவதை உணர்ந்து தாங்காத துயரம் கொண்டார்கள் இப்பெற்றோர். ஆயினும் தங்களால் இயன்ற அளவு அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதில் அவர்கள் மிக ஊக்கமாயிருந்தனர்.

பிரான்சிஸ் இறந்தபின், அவனுடைய கட்டிலில் ஜஸிந்தா வைக்கப்பட்டாள். அந்த அறை வாசல் பக்கம் இருந்தது. ஆட்கள் வருவதை எளிதில் காண முடியும். வீட்டிற்கு வருகிறவர்கள் பேசு வதையும் தெளிவாகக் கேட்க முடியும்.  இது ஜஸிந்தாவின் உடல் நிலையை சீர்திருத்த உதவும் என்று ஒலிம்பியா நம்பினாள். 

பிரான்சிஸ் எங்கு போயிருக்கிறான், யார் அவனை அழைத்துச் சென்றார்கள் என்று ஜஸிந்தாவுக்கு நன்கு தெரியும். அப்படியிருந்தாலும் அவளுடைய கவலை மிகப் பெரிதாகவே இருந்தது. பிரான்சிஸை இழந்தது அவளால் தாங்குவதற்கு மிகக் கடினமான துயரமாயிருந்தது.

லூஸியா தினமும் பள்ளி விட்டபின் ஜஸிந்தாவைப் பார்க்க வருவாள். விடுமுறை நாட்களில் கோவா தா ஈரியா, வாலினோஸ், கபேசோ முதலிய இடங்களில் பறித்துவந்த மலர்களை ஜஸிந்தாவுக்கென கொண்டு வருவாள். 

அவற்றை மேசைமீது ஒழுங்குபடுத்தி வைத்துக்கொண்டே, “இந்தப் பூவை கோவா தா ஈரியாவில் பறித்தேன், இந்தப் பூவை கபேசோவிலிருந்து கொண்டு வந்தேன்” என்று கூறுவாள்.  

ஜஸிந்தா எந்தப் பூக்களை விரும்புவாள் என்று லூஸியா அறிந்திருந்ததால், அந்தப் பூக்களை சேகரித்துக் கொண்டு வருவாள். வயலட், காட்டு ரோஜா, டெய்ஸி மலர்கள் ஜஸிந்தாவுக்கு விருப்பமானவை.

லூஸியா பூக்கள் கொண்டு வருவது ஜஸிந்தாவுக்கு மிக விருப்பம். லூஸியா வந்து விட்டால், ஜஸிந்தா மகிழ்ச்சியடைவாள்.  ஒரு நாள் ஜஸிந்தா லூஸியாவிடம், 

“கோவா தா ஈரியாவையும், வாலினோஸையும் இனி ஒருபோதும் நான் காண மாட்டேன்” என்று துயரத்துடன் கூறினாள்.

“இல்லை ஜஸிந்தா.  நீ கட்டாயம் காண்பாய்.  திடமாயிரு” என்றாள் லூஸியா.

“நான் காண மாட்டேன். என்னை என் அம்மா ஓர் இருண்ட கட்டடம் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்கள்;  அங்கு நான் குணமடைய மாட்டேன் என்று நம் அம்மா என்னிடம் கூறினார்கள்” என்றாள் ஜஸிந்தா.

இச்சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது.

லூஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனைப் பல வாரங்களாகக் காணவில்லை. அவன் திறமையுள்ளவன் என்றாலும், துர்ப்புத்தியும் உண்டு. அவனைப் பற்றி அறிந்த ஜஸிந்தா அவன் திரும்பி வரும்படியாக தேவ அன்னையிடம் மன்றாடினாள்.

சில நாட்களுக்குப் பின் அவன் திடீரென்று வீட்டிற்குத் திரும்பி வந்தான்.  தான் எவ்வாறு திரும்ப நேரிட்டது என்பது அவனே நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியமாயிருந்தது.  அவன் தன் கைப் பணத்தையயல்லாம் செலவிட்ட பின் களவு செய்து பிழைக்க ஆரம்பித்தான். 

களவில் பிடிபட்டு தோரஸ் நோவாஸ் என்ற இடத்தில் சிறையிலடைக்கப்பட்டான். ஒருநாள் இரவு அவன் தந்திரமாகச் சிறையிலிருந்து தப்பி விட்டான்.  தப்பியவன் காட்டுப் பகுதியில் ஒளிந்து திரிந்தான். அப்போது, ஓரிரவில் ஏற்பட்ட ஒரு பலத்த புயல் இடி முழக்கத்தால் அவன் மிகவும் பயந்து முழங்காலில் விழுந்து கடவுளிடம் மனம் உருகி மன்னிப்புக் கேட்டான். தன்னைப் பத்திரமாக வீடு சேர்க்க வேண்டுமென்று மன்றாடினான். 

அவன் மன்றாடி முடியவும் ஒரு சிறுமி அங்கு வந்தாள். யார்? ஜஸிந்தா!  ஜஸிந்தாவே தான்!  அவள் பேசவில்லை.  அவள் அவனைக் கையைப் பிடித்து வழிநடத்திக் கூட்டிக் கொண்டு வந்தாள்.  காட்டைக் கடந்து ரோட்டுக்கு வந்ததும், அவன் செல்ல வேண்டிய பாதையை சயிக்கினையால் காட்டி விட்டு மறைந்து விட்டாள். 

ஜஸிந்தா காட்டிய பாதை வழியே அவன் நடந்தான். உதயமாகும் வேளையில் அவன் பாத்திமாவில் இருந்து சற்றுத் தொலைவிலுள்ள போலெரோஸ் என்ற இடத்திற்கருகே வந்திருப்பதைக் கண்டுகொண்டான். பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான்.

இச்சம்பவம் பற்றி லூஸியா ஜஸிந்தாவிடம் கேட்டாள். அவளால் அதுபற்றி எதுவும் சொல்லக் கூடவில்லை. காணாமல் போனவனுக்காக தான் அதிகம் ஜெபித்ததாக மட்டும் கூறினாள் ஜஸிந்தா.