கத்தொலிக்கம் மெல்ல மெல்ல தன்னுடைய தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழந்து வருவது கவலைதரும் விசயம்.

இப்போது எங்கு பார்த்தாலும் ஆலயங்களில் நற்செய்தி ஆராதனை என்ற பெயரில் கரங்களை மேலே தூக்கி அசைப்பதும், கைதட்டுவதும், நற்கருணை நாதரை ஸ்தாபகம் செய்துவிட்டு பிரிவினை சபையினரின் பாணியில் கத்தி ஜெபிப்பதைக் காண முடிகிறது. மாதா நற்கருணை நாதர் தவிர்த்துப்பார்த்தால் அப்படியே அது பிரிவினை சபையினர் நடத்தும் ஜெபக்கூட்டம். நடப்பதை எல்லாம் நடப்பதையும் பார்க்கும்போது நமக்கு சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத புது வழிபாட்டு முறையை நம் வழி பாட்டில் புகுத்தி நம் பாரம்பரிய கத்தொலிக்க வழிபாட்டை குழிதோண்டி புதைத்து வரும் செயலை நிறைய பேர் செய்து வருகிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்றுதான் தெறியவில்லை.

நம் கத்தொலிக்க வழிபாட்டில் எந்த காலத்திலுமே தனி நபர் ஆதிக்கம் செலுத்தியதில்லை. செலுத்தவும் முடியாது. எவ்வளவு பெரிய ஆராதனை நடந்தாலும் தனி நபர்கள் முக்கியத்துவம் வகிக்க மாட்டார்கள். மூவொரு கடவுளே முக்கியத்துவமாக; மத்தியஸ்தராக செயல்படுவார். வழிபாடு முழுவதும் ஒரு தெய்வீகம் நிறைந்திருக்கும் அந்த வழிபாடு முடிந்ததும் நம் ஆன்மாவில் கடவுளையே சுமந்து செல்வோம். சிந்தனையிலும் அவரே நிறைந்திருப்பார். குறிப்பாக பெரிய வழிபாட்டில் பங்குத்தந்தை ஆயர் தவிர வேறு யாரையும் அழைப்பதில்லை.

இப்போது எல்லாமே மாறிவிட்டது. தனி நபர்கள் முன்னிருத்தப்படுகிறார்கள். இவர் ஸ்பெசல், அவர் ஸ்பெசல், அவர் நன்றாக ஜெபிப்பார், இவர் நன்றாக ஜெபிப்பார். நன்றாக ஜெபிப்பவர்கள் மன்றாட்டைத்தான் கடவுள் கேட்பாரா? ஒரு சாமானியன் சாதரணமாக ஜெபித்தால் கடவுள் கேட்கமாட்டாரா? உருகி, அழுது, புரண்டு ஜெபிக்கும் மன்றாட்டுகளையே கேட்பேன் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? எளிமையான கடவுள்; எளியவர்களின் கடவுள் எளிமையான இதயத்திலிருந்து வரும் கூக்குரலை, அபயக்குரலை வேண்டுதலை ஒரு போதும் புறக்கனிக்கமாட்டார். பெரும்பாலும் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார். கடவுள் அனைவருக்கும்தான் நாவு கொடுத்திருக்கிறார். ஆகவே எல்லாருமேதான் ஜெபிக்கவேண்டும்.

நம் நற்கருணை வழிபாடு எப்படி இருக்கும்? அதிலும் திருமணி ஆராதனை எப்படி இருக்கும்? அமைதி, மவுனம், தியானம், உருக்கம், வேண்டுதல், வார்த்தை வழிபாடு, பாடல்கள் என்று அருமையாக சென்று அவரோடு இனைந்து “ மான்புயர் பாடி இனிமையுடன் நிறைவு பெரும் திருமணி ஆராதனை இப்போது எங்கே? இதுதானே கத்தொலிக்கவழிபாடு.

இதற்கு நேர் எதிராக சப்தமிடுதல், கைகளை தூக்குதல், கைகளை தட்டுதல், இடையிடையே அமைதியைக்குலைக்கும் விதமாக கத்துதுதல், சத்தமாக ஜெபித்தல், கூச்சலிடுதல் எல்லாவற்றையும் அமைதியின் தெய்வம் ஏற்பாரா? இது அவருக்கு பிடிக்குமா? இயேசு எப்போது ஜெபித்தாலும் தனிமையான இடத்திற்கு சென்று ஜெபித்துவந்துள்ளார். சில நேரம் அவர் ஜெபிக்கும்போது சீடர்களைக்கூட அருகில் வைத்ததில்லை. அவ்வளவு அமைதி விரும்பி தனிமை விரும்பி. ஆனால் இப்போது அதே ஆண்டவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, கத்துதல் கூச்சல் போடுதல் எல்லாவற்றையும் தானும் செய்து மற்றவர்களை செய்யவைக்கும் இது நமக்கு சொந்தமான வழிபாடா?

அதிலும் தமதிருத்துவத்தை அருகில் வைத்துக்கொண்டே “ ஆண்டவரே வாரும்; இப்போதே வாரும் வாரும்.. என்றால் எங்கிருந்து வருவார். “ ஏம்ப்பா நான் இவ்வளவு பக்கத்துலதானே இருக்கேன். ஏன் இப்படி என் காது கிழியுமாறு கத்துகிறாய். வா, வா என்று கத்துகிறாய். நான் இருக்கவா? இல்லை எந்திரிச்சு போகவா?” என்பார்.

மற்றவர்களைப்பார்த்து,“ நாம் தூரத்தில் இருக்கும்போது இப்படி கத்துறே, கை தட்டுரே ! கையை ஆட்டுரே ! ஆனால் நான் உனக்குள் இன்னும் நெருக்கமாக வந்த பின் என்னை சட்டைபன்னுவதே இல்லை. ஒரு வார்த்தை பேசுவது இல்லை. பக்கத்தில் இருப்பவரிடம் பேசுகிறாய். எனக்காக ஒருசில நிமிடங்கள் உனக்கு தர முடியவில்லை. ஆனால் நான் மட்டும் நீ கேட்பது அத்தனையும் செய்யவேண்டும்” என்று கேட்க மாட்டாரா?

நாம் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெறியாமல் என்னலாமோ செய்கிறோம். இந்த பிரிவினை சபையினரின் பாணி ஒரு போதைப்பழக்கம்போல் அனைவரையும் தொற்றி வருகிறது. அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது நிலையினர் எல்லாரும் இதற்கு பலியாகிறார்கள். இது எதைக்காட்டுகிறது ? இப்படி ஜெபிப்பவர்கள் பல பேர் பிரிவினைபோதகர்களின் ஸ்டைலை காப்பி அடிக்கிறார்கள். இல்லை தனக்கென்று அதில் ஒரு புதிய பாணியை கடை பிடிக்கிறார்கள்..

ஏன் நமக்கு என்று தனித்தன்மை இருக்கும்போது மற்றவர்கள் போல் ஏன் செயல்படவேண்டும். அப்படியானால் நம்முடைய பாரம்பரிய பக்தி என்னவாவது?

கொஞ்சம் யோசிப்போம். தயவு செய்து நாம் தொலைத்தவைகளை திரும்ப பெருவோம். தொலைத்துக் கொண்டிருப்பவைகளை தக்கவைப்போம் நம்முடையை தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்போம். மாதாவையும், நற்கருணை ஆண்டவரையும் வைத்துக்கொண்டு நாம் அவர்கள் பாணியில் ஜெபித்தால் மட்டும் அது கத்தொலிக்க வழிபாடாய் மாறிவிடாது. சில இடங்களில் மாதாவை முன்னால் வைத்து அருள் மிகப்பெற்றவளே என்று ஆரம்பிக்கிறார்கள்.

“மிகுதியாக கொடுக்கப்பட்டவர்களிடம் இன்னும் மிகுதியாக எதிர்ப்பார்க்கப்படும்“ என்று சொல்லியிருக்கிறார். மிகுதியாக கொடுக்கப்பட்டவர்கள் கத்தொலிக்கர்கள், கத்தொலிக்க குருக்கள், அருட்சகோதரிகள். மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாழ்வோம்; செயல்படவேண்டும்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !