புனிதர்கள் யார் ? : (அனைவருக்கும் அனைத்து புனிதர்கள் தின வாழ்த்துக்கள்)

இன்றைய கால கட்டங்களில் பிரிவினை சபையினர்; மற்றும் பிரிவினை சபையினரின் பின்னால் ஓடும் கத்தொலிக்கர்; மேலும் கத்தொலிக்கர் என்று கூறிக்கொண்டு பிரிவினை சபையின் கூட்டத்திற்கும் போய்க்கொண்டு, ஆலயத்திற்கும் சென்று கொண்டு இரட்டை வேடம் போடும் கத்தொலிக்கர் பாதி- பிரிவினை பாதி என்று வாழ்பவர்கள் எல்லாரும்,

புனிதர்களை ஏதோ பூசாரிகள் போல் பார்ப்பதும், ஏன் கடவுளிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியதுதானே ! இடையில் புனிதர்களின் பரிந்துரை எதற்கு என்று கேட்பவர்கள் எல்லாருக்கும் சொல்கிறோம்.

புனிதர்கள் யார்?

1. நம்மைப்போல ஜென்மப்பாவத்தோடு (மாதா தவிர்த்து) பிறந்து உலக இயல்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை இயேசு அழைத்து தன் திட்டத்திற்காக தேர்ந்து கொண்டதும் அவர்கள் அனைத்தையும் துறந்து இயேசுவுக்காய் வாழ்ந்து, இயேசுவை அறிவித்து இயேசுவுக்காய் பல இன்னல்கள் பட்டு முடிவில் தன் இரத்தத்தை சிந்தி இயேசுவுக்கு தன் இன்னுயிரைக் கொடுத்து அவருக்கு சாட்சியானவர்கள். ( உம்: அப்போஸ்தலர்கள், இன்னும் ஆயிரமாயிரம் புனிதர்கள்)

2. ஜென்மப் பாவத்தோடு பிறந்திருந்தாலும் நல்ல பெற்றோர்களால் அவர்கள் குழந்தைகளாயிருக்கும் போதே இயேசு அவர்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்டு, உண்மைக் கிறிஸ்தவனாய், கிறிஸ்தவளாய் வாழ பெற்றோர்களால் பயிற்சிகொடுக்கப்பட்டு பின்னாளில் பெரிய புனிதனாய், புனிதையாய் ஆனவர்களும் உண்டு ( உம்; புனித தொன்போஸ்கோ, புனித தொமினிக் சாவியோ, புனித குழந்தை தெரசாள்)

3. ஆண் புனிதர்களைப்போல் எத்தனையோ பெண் புனிதர்கள் இயேசுவுக்காய் தன் குருதி சிந்தி இன்னுயிரை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

4. முதல் மூன்று நூற்றாண்டுகள் மட்டும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் குடும்பம், குடும்மாக, கூட்டம் கூட்டமாக கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் 60 லட்சம் பேர்.

5. அரசன் முன்னால் நிறுத்தப்படுவார்கள். அரசன் “ இயேசுவை மறுதலித்து தன்னை கடவுளாக வணங்கச்சொல்லுவான். அவர்கள் மறுப்பார்கள்; பின் கொல்லப்படுவார்கள் ( உம்; கணவனை இழந்த பெண், தன் கண் முன்னாலேயே தன் ஏழு மகன்கள் கொல்லப்பட்டு முடிவில் தானும் கொல்லப்பட்டாள்.

6. எத்தனையோ போப்கள், ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், கொல்லப்பட்டுள்ளார்கள்.

7. எத்தனையோ பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள் ( உம். அவிலா தெரசம்மாள். தன் கற்பை நேசித்து அதை இறைவனுக்கு அற்பணித்து அதற்காகவே கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பெண் புனிதைகள் ஏராளம்;ஏராளம் ( உம்.பிரகாசியம்மாள், புனித மரிய கொரைற்றி,

8. முதலில் சாவான பாவத்தில் வாழ்ந்து இயேசுவால் தொடப்பட்டு மிகப்பெரிய புனிதர்களான பலர் உண்டு ( புனித மகதலேன் மரியாள், புனித அகுஸ்தின்)

9. உலகப்புகழ்தான் சிறந்தது என்று வாழ்ந்து அது அற்பம் என்று அனைத்தையும் துறந்து ஏன் அரன்மனையையே துறந்து இயேசுவுக்காய் சாட்சியானவர்களும் உண்டு ( உம்; புனித சவேரியார் மற்றும் பல மன்னர்கள், அரசிகள், இளவரசர்-இளவரசிகள்)

10. உலக வாழ்க்கையை துறந்து காட்டுக்குள் கடும் தவ வாழ்வு வாழ்ந்த புனிதர்களும் உண்டு ( உம்: புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர்)

இன்னும் நமக்கு தெறிந்த பதுவை புனித அந்தோனியார், புனித தொன்போஸ்கோ, புனித மார்கரெட் மரியாள், புனித அல்போன்சா, புனித அன்னை தெரசா உட்பட ஆயிரமாயிரம், புனிதர்கள் வரலாறு கேள்விப்பட்டுள்ளோம்.

அவர்கள் தன்னுடைய மனித வாழ்வில் பாவத்தை துறந்து இயேசுவுக்காய் வாழ்ந்து சாட்சியானார்கள். முக்கியமாக நம் இயேசு தெய்வத்தை தங்கள் சிலுவைகளை தூக்கிக்கொண்டு பின் சென்றவர்கள். இயேசு சுவாமியின் பாடுகளில் பங்கேற்றவர்கள். எண்ணற்ற துன்பங்கள், சோதனைகள், இன்னல்கள், ஏமாற்றங்கள், வலிகள், வேதனைகள், நோய்களை தன் கடைசி மூச்சுவரை முனுமுனுக்காமல் ஏற்று அனுபவித்தவர்கள்..

அதற்காக இயேசு அவர்களுக்கு கொடுக்கும் மகிமையே அவர்கள் பரிந்துரையை ஏற்று அவர்களுக்கு புதுமைகள் செய்யும் ஆற்றலை கொடுத்தல். இல்லையென்றால் அவர்களை கடவுள் மறந்தாரானால் அவர் நன்றி இல்லாதவர் போல் ஆகிவிடுவார்.

மேலும் புனிதர்கள் வரலாறு நமக்கு போதிக்கும் செய்தி என்ன?

அவர்கள் நம்முடைய ரோல் மாடல்கள். அவர்களைப்போல் நாமும் புனிதர்கள் ஆகமுடியும் என்பதே. எத்தகையை வாழ்க்கை சூழல்களில் வாழ்ந்தாலும், குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும், குருக்களாக-கன்னியர்களாக இருந்தாலும், ஏன் இப்போது மோசமான பாவிகளாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களால் புனிதர்கள் ஆகமுடியும். பாவ வாழ்க்கையை விட்டு மனம்மாறி ஜெபத்திலிலும், தவத்திலும், பரிகாரத்திலும் நிலைத்து நின்று இயேசுவைப்பற்றிக்கொண்டு புனிதர்கள் ஆக முடியும் என்பதே அவர்கள் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள்.

அதற்க்காகத்தான் நம் தாய்திருச்சபை புனிதர்களுக்கு வணக்கம் செலுத்த சொல்லுகிறது. அவர்கள் பெயரில் ஆலயங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பரிந்துரையை நாடச்சொல்லுகிறது.

நம் விசுவாசப்பிரமாணம் மந்திரத்தில் “ பரிசுத்த கத்தொலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன் “ என்று சொல்லிவிட்டு “ புனிதர் சமூக உறவை விசுவசிக்கிறேன் “ என்று சொல்லித்தருகிறது.

இதை விடுத்து பிரிவினை சபையினர், நீ அவர்களிடம் கேட்காதே, இவர்களிடம் கேட்காதே !

நேரிடையாக வேண்டு என்று சொல்பவர்கள் ஏன் போதகர்களிடம் சென்று தனக்காக ஜெபிக்க கேட்கிறார்கள். அங்குமட்டும் ஏன் போதகர்கள் உதவி தேவை. அப்போதும் அவர்கள் நேரிடையாக ஜெபிக்க வேண்டியதுதானே ?

கத்தொலிக்கர்களை எதிர்க்கும் போதகர்கள் தன்னைத் தேடி ஜெபிக்க கேட்டு வருபவர்களை “ என்னிடம் வரவேண்டாம். நான் பூசாரிதான். நீங்களே நேரிடையாக இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் “ என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று குறைகளைமட்டும் பார்ப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்கவே முடியாது.

நம் தாய்திருச்சபை சரியாகத்தான் சொல்லி தந்து நம்மை விசுவாசத்தில் வளர்த்துள்ளது. ஆகவே புனிதர்கள் சமூக உறவை விசுவசிப்போம், புனிதர்கள் பரிந்துறையை நாடுவோம். நிறைய புனிதர்கள் வரலாற்றை வாசிப்போம். அவர்கள் வாழ்க்கையிலிருந்து அவர்கள் பாவத்தை எப்படி வெற்றி கொண்டார்கள் போன்ற பல பாடங்களை கற்று நாமும் புனிதர்களாக மாற முயற்சி செய்வோம்.

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !