ஞானமில்லாத பெற்றோர்களே ! ஐயோ உங்களுக்கு கேடு

உங்கள் பிள்ளைகளுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறீர்களா ? ஜெபமாலை சொல்லக் கற்றுக்கொடுக்கிறீர்களா? கடவுளைப்பற்றி சொல்லிக்கொடுக்கிறீர்களா? புனிதர்கள் வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு பற்றி சொல்லிக்கொடுக்கிறீர்களா? நமக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டு. அதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறீர்களா?. மோட்சம், நரகம் பற்றி சொல்லிக்கொடுக்கிறீர்களா?

உங்கள் குழந்தைகள் பாடம் படிக்கவேண்டும். டியூசன் போக வேண்டும். மியூசிக், நீச்சல், கராத்தே, அதைக்கற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு மார்க் எடுக்க வேண்டும். அப்படி ஆக வேண்டும். இப்படி ஆக வேண்டும். வெளி நாடு சென்று படிக்க வேண்டும். etc,etc,etc...என்று எத்தனையோ ஆசைகள், கவலைகள் உங்களுக்கு.. இது எதுவுமே தவறு இல்லை. ஆனால் கடவுளோ, ஜெபமோ, திருப்பலியோ, ஜெபமாலையோ, ஆன்மாவைப் பற்றிய அக்கரையோ, பொதுவாக கடவுள் காரியங்கள் இரண்டாம் பட்சமே என்று ஒதுக்கி விட்டு உலக காரியங்களில் மட்டும் கவலை கொண்டீர்கள் என்றால் ஐயோ உங்களுக்கு கேடு வந்தே தீரும்.

சிட்டிகளில் ( அநேக இடங்களில்) சிறு பிள்ளைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் ஏன் தாய்மார்கள் (பல) கூட திருப்பலியிலும், ஜெபமாலையிலும் பதில் ஜெபங்கள் சொல்ல வாய் திறப்பதே இல்லை.கடவுள் நமக்கு ஏன் வாயைப்படைத்தார் என்று தெறியவில்லை. சாப்பிடுவதற்கும் வெட்டி பேச்சு பேசுவதற்கும், புறணி பேசுவதற்குமா? கடவுளுக்காக வாய்திறக்கவில்லை

என்றால் அது எதற்காக திறந்தும் என்ன பயன்?

திருப்பலி நடக்கும்போது அருகில் உள்ளவர்களிடம் பேச எப்படித்தான் மனம் வருகிறதோ தெறியவில்லை. ஆர்வமாக சீரியல் பார்க்கும்போதோ, சினிமா பார்க்கும்போதோ பேசுவார்களா இவர்கள். ஒரு ஐந்து யோசித்துப்பார்ப்போம். தினமும் எவ்வளவு நேரம், எவ்வளவு வார்த்தைகள் பேசுகிறோம். அதில் வீனாக பேசுவதையும், பிறரைப்பற்றி பேசுவதையும் கழித்துவிட்டால் மிச்சம் இருக்கும் வார்த்தைகள் எவ்வளவு. ????.

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஞானத்தை போதிப்பதில்லை. அதிலும் இறைவனைப்பற்றிய ஞானத்தை போதிப்பதே இல்லை. எல்லா பெற்றோரையும் சொல்லவில்லை.ஆன்மீக காரியங்களில் அக்கரையற்ற போக்கு, ஒரு பிடிப்பு இல்லாத போக்கு, சோம்பேரித்தனமான போக்கு, மெத்தனப்போக்கு, சபைக்கும், கடமைக்கும், சம்பிராயத்திற்க்கு மட்டுமே திருச்சடங்குகள் என்ற போக்கு, தன் ஸ்டேட்டசை மட்டுமே காட்டும் போக்கு.

இப்படியே போனால் உங்களின் ஆன்மாவிற்கும், மிக முக்கியமாக உங்கள் பிள்ளைகளின் ஆன்மா மீட்படையாவிட்டால் அதற்கும் பெற்றோர்களாகிய நீங்களே பொறுப்பு.நாளை உங்கள் பிள்ளைகளிடம் கணக்கு கேட்கப்படும்போது அவர்கள் சொல்வார்கள். “ என் பெற்றோர் எனக்கு மியூசிக் கற்றுக் கொடுத்தார்கள், நீச்சல் கற்றுக்கொடுத்தார்கள், கராத்தே கற்றுக்கொடுத்தார்கள், பெரிய பெரிய படிப்பெல்லாம், படிக்க வைத்தார்கள். ஆனால் உம்மைப் பற்றி மட்டும் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அதற்கு நாங்கள் காரணம் அல்ல. எங்களுக்குப்பதிலாக எங்கள் பெற்றோரை நரகத்தில் தூக்கி போடுங்கள் “ அதை உங்களால் தாங்க முடியுமா?

இன்னுமொரு ஆபத்தான போக்கு நம் பெற்றோரிடம் நிலவுகின்றது. பிள்ளைகள் மேல் மிதமிஞ்சிய பாசம். அவர்கள் ஒரு சிறு கஷ்ட்டங்கள் கூடப் படக்கூடாது என்று பிள்ளைகளை மனவலிமை குறைந்த பிள்ளைகளாகவும், அளவுக்கதிகமாக செல்லம் கொடுத்து பிடிவாதமும், முரட்டுத்தனமும் உள்ள பிள்ளைகளாக வளர்க்கிறார்கள். பிற்காலத்தில் அதே பெற்றோர்கள், பிள்ளைகளிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி, கண் கலங்கி, சிக்கித்தவக்கிறார்கள் இல்லையென்றால் முதியோர் மடம் படை எடுக்கிறார்கள்..

இந்த நிலை ஏன்? கடவுளைப்பற்றிய ஞானம், கிறிஸ்தவம், மனிதாபிமானம், ஆன்மாவைப்பற்றிய அறிவு இருந்தால் அப்படிச் செய்வார்களா? மோட்சம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் இவைற்றை அறிந்திருந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? இயேசு, அன்னை மரியாள், அப்போஸ்தலர்கள் வாழ்க்கை, புனித வாழ்க்கை இவைகள் தெறிந்தால் தப்பு செய்வார்களா? அந்த காலத்தில் பிள்ளைகள் தப்பு செய்தால், “ சேசு அடிப்பார். அப்படிச்செய்யக்கூடாது “ “ தப்பு செஞ்சா கடவுள் நம்மளை நரகத்தில் தூக்கி போடுவார். என்ணெய் சட்டியில் போடுவார். தீயில் தூக்கி போடுவார்” என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.

எங்கே போச்சு இந்த அறிவுரைகள்?

இப்போது சொல்லுங்கள். தப்பு யார் மீது இருக்கிறது? ஆகவே ஞானமில்லாத பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கடவுளைப்பற்றிய ஞானம் கொடுக்கவில்லை என்றால் ஐயோ உங்களுக்கு கேடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !