ஜெபமாலை சிந்தனைகள் 5 : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்டின் அனுபவங்கள்... ஜெபமாலை புதுமைகள்..

புனித லூயிஸ் போன்ட்ஷட்டோ என்ற ஊரில் தேவ ஊழியம் முடித்ததும் ஓரு பெரிய சிலுவையை நாட்ட வேண்டும் என்ற திட்டத்தை புனிதர் வெளியிட்டார். மக்கள் எல்லோரும் ஆர்வத்தோடு அதற்காக உழைக்க முன் வந்தனர். அந்த ஆண்டு வெயில் காலம் மிகக் கடுமையாக இருந்தது. இருந்த போதிலும் தம்முடைய பணியை நிறுத்தவில்லை.

அப்பங்கில் நல்ல கிறிஸ்தவர்கள் பலர் இருந்த போதிலும் மதுக் கடைகள், தகாத முறையில் நடனங்கள், இவை போன்ற பாவத்துக்குரிய சந்தர்ப்பங்கள் பல அங்கே இருந்தன.

ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமாக குடிப்பதும், கூத்தாடுவதும் அதிகமாக இருந்தது. குடித்தவர்கள் தூஷனமாகப் பேசுவதும், வருகிறவர்கள் போகிறவர்களை சண்டைக்கு இழுப்பதும் சாதாரன நிகழ்ச்சிகளாக இருந்தன. இந்த முறைகேடான நிகழ்ச்சிகளைத் திருத்துவதற்கு யாரும் துணியவில்லை. நம் புனிதரோ தம் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் சரி இந்த அவல நிலையை ஒழித்துக் கட்ட வேண்டுமென தீர்மானித்தார். நேராக குடிகாரார்கள் கூடும் இடத்திற்கே சென்றார். இளைஞர்கள் பலர் குடியால் மதிமயங்கி ஆபாசமான பாடல்களைப் பாடிக்கொண்டும், பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்தார்.

இந்த மோசமான கூட்டத்தில் நுழைந்து முழந்தாளிட்டு “ அருள் நிறை மந்திரத்தை “ உரத்த குரலில் சொன்னார். பின் எழுந்து இசைக்கருவிகளை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு தரையில் வீசியெறிந்து உடைத்தார். அங்கிருந்த மேசைகளைக் கவிழ்த்து, அதன் மேல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாத்திரங்களைத் தூள்தூளாக்கினார்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

ஒரு சிலர் தங்களிடமிருந்த வாளை உருவினர்.புனிதரோ சிறிதும் அஞ்சாமல் ஒரு கையில் ஜெபமாலையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் முன்னே சென்றார். அதைக் கண்டவர்கள் எல்லோரும் பயந்து ஓடிவிட்டனர். அதன்பின் சத்திரக்காரனைப் பார்த்து,

“ இவர்கள் எல்லாரும் பாவம் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்த நீ ஒரு நாள் கடவுளுக்கு கண்டிப்பாக கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

இன்னொருமுறை ஆண்களும், பெண்களும் ஒரு நூறு பேர் தகாத முறையில் ஆடிக்கொண்டிருந்தனர். புனிதர் உள்ளே நுழைந்து ஒரு ஆறு ஏழு முறை கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தார். அவரை ஏளனம் செய்யும் நோக்கத்தோடு இளைஞர்கள் சிலர் கோவில் பாடல் ஒன்றை பக்தியின்றி பாடினார்கள். அச்சமயத்தில் தமக்கு எப்போதுமே ஒரு தெய்வீக ஆயுதமாகக் கருதியிருந்த ஜெபமாலையைக் கையில் எடுத்து உரத்த குரலில்

“ கடவுளின் நண்பர்களாய் இருப்பவர்கள் எல்லோரும் என்னோடு சேர்ந்து முழங்காலிடுங்கள்” என்று கத்தினார். உடனே எல்லோரும் அச்சத்தோடு முழங்காலிட்டார்கள். ஒரு பத்துமணி ஜெபமாலையைச் செய்தார். பின்னர் எழுந்து பாவத்திற்கு சந்தர்ப்பமாக இருக்கக்கூடிய அடக்கமற்ற நடனங்களைக் குறித்து ஆவேசமாகப் பேசினார். எதிர்பார்த்த பலன் கிடைத்தது. அங்கிருந்த எல்லோரும் மனம் திரும்பினர். கடவுளின் வரப்பிரசாதம் மீளவும் வெற்றி பெற்றது.

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் வாழ்க்கை வரலாறு நூல், மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி.

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!