ஜெபமாலை சிந்தனைகள் 4 : பாத்திமா காட்சியும் ஜெபமாலையும்...

மாதாவிடமிருந்து ஏறக்குறைய ஒன்றரை மீட்டர் சுற்றுக்கு வீசிய ஒளி வெள்ளத்தினுள் குழந்தைகள் மூவரும் (பிரான்ஸிஸ், ஜெசிந்தா,லூசியா) நின்றனர்.

என்றுமே மறக்கமுடியாத இனிய குரலில் அப்பெண் கூறினார்கள் :

“ பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒரு தீமையும் செய்ய மாட்டேன் “

உடனே குழந்தைகள் திடமடைந்தார்கள். அம்மாதிடம் கேள்விகள் கேட்குமளவிற்கு லூசியாவிற்கு திடன் ஏற்பட்டது.

“ நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? “

“ நான் மோட்சத்திலிருந்து வருகிறேன் “

“ உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? “

“ நீங்கள் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் 13- தேதியில் இதே நேரத்திற்கு நீங்கள் இங்கே வர வேண்டும் என்று கேட்க வந்தேன். நான் என்ன விரும்புகிறேன் என்று பின்னால் கூறுவேன். ஏழாவது ஒறுமுறை இங்கு திரும்பவும் இங்கு வருவேன் “

“ நான் மோட்சத்திற்கு போவேனா? “

“ ஆம் போவாய் “

“ ஜஸிந்தா “

“ அவளும் போவாள்.”

“ பிரான்ஸிஸ் “

“ அவனும் அங்கு போவான். ஆனால் அதற்கு முன் அவன் அநேக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும் “ என்றார்கள்.

தன் பெயர் சொல்லக்கேட்டதும் பிரான்சிஸ் லூசியாவிடம்,

“ என்னால் அங்கே ஒருவரையும் பார்க்க முடியவில்லையே; ஒரு கல்லை எறி. அது ஒரு ஆள்தானா என்று பார்ப்போம்: லூசியா அதை மறுத்து ஆச்சரியத்துடன்:

“ பிரான்சிஸ் உங்களை ஏன் பார்க்க முடியவில்லை என்று கேட்டாள்.

“ அவனை ஜெபமாலை சொல்லச்சொல். அப்போது என்னைக் காண்பான் “

லூசியா இதை பிரான்சிஸிடம் கூறினாள். அவன் உடனே தன் ஜெபமாலையை எடுத்து ஜெபிக்கத்தொடங்கினான். ஆறு ஏழு அருள் நிறை மந்திரங்கள் சொல்லவும் தீடிரென அவனும் காட்சியைக் கண்டான்.

ஆனால் பிரான்சிஸ் காட்சியைக் கண்டானேயன்றி, தேவ அன்னை கூறிய எதையும் அவன் ஒரு போதும் கேட்கவில்லை. லூசியா பேசுவது கேட்கும். மாதா கூறியதை அவன் மற்ற இருவரிடமிருந்தே கேட்டு அறிந்து கொள்வான்.

இதற்கிடையில் லூசியா மேலும் சில கேள்விகள் கேட்டாள். மோட்சத்தைப் பற்றிய பேச்சு வந்ததால் லூசியா வீட்டில் அவள் அக்காவிடம் நெசவு கற்று சமீபத்தில் இறந்து போன இரு பெண்களைப் பற்றி அவளுக்கு நினைவு வந்தது. எனவே,

“ தஸ்நேவிஸ் மேரி மோட்சத்திலிருக்கிறாளா? ”

“ ஆம். அவள் மோட்சத்திலிருக்கிறாள். “

“ அமெலியா?”

“ அவள் உலக முடிவு வரை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பாள் “

அமெலியாவுக்கு வயது 18 முதல் 20 க்குள் இருக்கும் என லூசியா கூறுகிறாள். தஸ்நேவிஸ் மேரிக்கு வயது 16.

மீண்டும் நம் அன்னை பேசினார்கள்:

“ கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவர் உங்களுக்கு அனுப்ப விரும்பும் எல்லாத் துன்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

“ ஆம், விரும்புகிறோம் “ என்று மூவர் சார்பிலும் லூசியா பதிலளித்தாள்.

“ அப்படியானால் நீங்கள் அதிகம் துன்பப்பட நேரிடும். ஆனால் கடவுளின் வரப்பிரசாதம் உங்களைத் தேற்றும்.“ என்று கூறியபடி தேவ அன்னை தன் கரங்களை விரித்து அக்குழந்தைகள் மீது ஒரு தெய்வீக ஒளியை பாயவிட்டார்கள். அந்த ஒளி எவ்வளவு பிரகாசமுடையதாய் இருந்தது என்றால், அவர்களுடைய உள்ளத்தையும், ஆன்மாவையும் ஊடுறுவிச் சென்று அவர்கள் தங்களையே கடவுளில் காணச்செய்தது.

லூசியா கூறுகிறாள்:

“ அவ்வொளி எங்கள் இருதயங்களின் ஆழங்களையும் ஊடுறுவிச் சென்றது. எங்களையே நாங்கள் அவ்வொளியாய் இருந்த கடவுளில், கண்ணாடியில் காண்பதை விட தெளிவாகக் காணச்செய்தது. மேலும் ஒரு அந்தரங்க ஏவுதல் எங்களுக்கு கொடுக்கப்பட, நாங்கள் முழங்காலில் விழுந்து,

“ ஓ மிகவும் பரிசுத்த தமத்திருத்துவமே, உம்மை ஆராதிக்கிறேன்., என் தேவனே, என் தேவனே, மிகவும் பரிசுத்த திவ்ய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன் “ என்று எங்கள் இருதயத்தில் திரும்ப திரும்ப சொன்னோம்.

குழந்தைகள் இவ்வாறு ஜெபித்து முடியும் வரை தேவ அன்னை சற்று நேரம் காத்திருந்தபின் அவர்களைப்பார்த்து:

“ உலகிற்கு சமாதானம் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுங்கள்.” என்று கூறி கிழக்கு திசையில் சூரிய ஒளியுடன் கலந்து, “ எல்லையற்ற தொலைவில் “ மறைந்தார்கள்.

குழந்தைகள் மூவரும் அத்திசையைப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் நின்றார்கள். ஓர் ஆழ்ந்த பரவசம் அவர்கள் மீது படிந்திருந்தது. மவுனமாக சிந்தனையின் வசப்பட்டே இருந்தார்கள்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983

பாருங்கள்... குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக மோட்சம் குறித்து மாதாவிடம் விசாரித்தார்கள். மோட்சம் எவ்வளவு உன்னதமான பரிசுத்தமான மகிழ்ச்சியான இடம். அதுதானே நம் தாய்வீடு. அங்கிருந்துதானே புறப்பட்டு மண்ணுக்கு வந்தோம். மீண்டும் அங்கேதானே செல்ல வேண்டும். அதற்காக நம்மையே நாம் தயாரிக்க வேண்டாமா? அங்கு செல்ல நமக்கு தடையாக இருப்பது என்ன? பாவம்தானே.. இதுதானே நம்மையும் கடவுளையும் பிரிப்பது. நல்ல பாவசங்கீர்தனம் செய்து நம்மிடம் உள்ள பாவங்களை குப்பை கூடையில் போட்டு விட்டு நம் நற்கருணை நாதரிடம் இனைந்திருப்பதே நமக்கு நல்லது..

நம் தேவ அன்னையும் குழந்தையும் பேசியதை படிக்கும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. பேசாமல் நாமும் குழந்தைகளாகி விடுவோம். லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தாவோடு நாமும் சேர்ந்து விளையாடுவோம், ஜெபமாலை ஜெபிப்போம்... அவர்களைப் போன்று நாமும் ஒரு நாள் மோட்சம் செல்வது உறுதி..

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்” – மத்தேயு 18:3 - நம் பரிசுத்த இயேசு தெய்வம்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !