உத்தரிக்கும் ஸ்தலம் 5 : புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்...

“ பாத்ரே பியோ வாழ்க“

1944-ல் ஒரு நாள் இரவில் மடத்தின் தரைத்தளத்திலிருந்து “ பாத்ரே பியோ வாழ்க! பாத்ரே பியோ வாழ்க !” என்று சிலர் உரத்த சத்தமாகக் கூறிக்கொண்டிருந்ததை துறவிகள் கேட்டார்கள். அதிபர் குரு.பியாஸினியின் ரஃபேல் டா எலியா வாயிற்காவலரான சகோதரர் ஜெரார்டோ டெலிசேட்டோ என்பவரை அழைத்து கீழே சத்தம் போட்டுக்கொண்டிருப்பவர்களை வெளியே அனுப்பி கதவை ஒழுங்காக தாழிடும்படி அவருக்கு உத்தரவிட்டார்.

அந்தச் சகோதரர் கீழே இறங்கிச் சென்றபோது அங்கே யாரையும் காணவில்லை. கதவின் தாழ்ப்பாழ்கள் இரண்டும் நன்றாக சாத்தப்பட்டிருந்ததை அவர் கண்டார். ஆகவே அவர் அதிபரிடம் திரும்பிச் சென்று விசயத்தைக் கூறினார். குழப்பமடைந்த அதிபர் நேராக பாத்ரே பியோவைக் காணச் சென்று இது தொடர்பாக அவருக்கு ஏதாவது தெறியுமா என்று கேட்டார். தந்தை பியோ மிகச் சாதாரனமாக,

“ அவர்கள் போர்க்களத்தில் இறந்த போர் வீரர்கள். அவர்களுடைய இளைப்பாற்றிக்காக நான் ஜெபித்ததற்காக எனக்கு நன்றி சொல்ல வந்தார்கள் “ என்று சொல்லி அதிபரை அதிர வைத்தார்.

ஒரு நாள் பாத்ரே பியோ தம் மருத்துவரிடம், “ என் முப்பாட்டனாரின் நல் மரணத்திற்காக நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் “ என்றார். “ ஆனால் அவர் இறந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே ! “ என்றார் மருத்துவர் வியப்போடு. தந்தை பியோ பதிலுக்கு, “ கடவுளுக்கு கடந்த காலமில்லை. எதிர்காலமுமில்லை என்பதை நினைவில் வையுங்கள். அவருக்கு எல்லாமே நிகழ்காலம்தான். ஆகவே நான் இப்போது என் முப்பாட்டனருக்காக சொல்லும் ஜெபங்களை அவர் அந்த சமையத்தில் பயன்படுத்திக் கொண்டார் “ என்று சொல்ல மருத்துவர் அதிசயித்துப் போனார்!.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

நம் குடும்பத்தில் மரித்த ஆன்மாக்கள் யாரும் நினையா ஆன்மாக்களுக்காக நாம் அடிக்கடி திருப்பலி பூசை ஒப்புக்கொடுப்போம்.நம் அனுதின ஜெபமாலையில் ஒரு பத்துமணிகளாவது அவர்களுக்காக ஒப்புக் கொடுப்போம்.. நாம் பங்கேற்கும் அத்தனைத் திருப்பலிகளிலும் அவர்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.. நம்மால் மோட்சம் செல்லும் ஆன்மாக்கள்… நன்றி உணர்வோடு நமக்காக ஜெபிப்பார்கள்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !