மாதாவின் மகிமைகள் 4 : கிறிஸ்துவத்தின் முதல் வேத சாட்சி மாதா..

"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" – லூக்காஸ் 1 : 34

தலைப்பைப் பார்த்ததும் நிறைய பேருக்கு ஆச்சரியம் அல்லது கேள்விகள் வரலாம்.. ஆனால் அதுதான் உண்மை..

இப்போது அதற்கு முந்தைய வசனத்தைப் பார்ப்போம்..

" மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர். இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். “ லூக்காஸ் 1 : 30-31.

மாதா கன்னி. கபிரியேல் தூதர் சொல்லுகிறார். நீ உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவர் கடவுளின் மகன் எனப்படுவார் என்றெல்லாம் சொல்லிய போது மாதா கேட்ட ஒரே விளக்கம் என்ன?

“ நான் இப்போதும் கன்னி. எப்போதுமே கன்னியாகத்தான் இருக்கப் போகிறேன்” .. என்னுடைய கன்னித்தன்மைக்கும், கற்புக்கும் இடையூறு வந்துதான் நான் கடவுளைப் பெற்றெடுக்க வேண்டுமென்றால். அந்த மகிமை எனக்குத் தேவையில்லை. என் கற்பிற்கு பாதகம் வரக்கூடாது “ என்றுதான். மாதா கேட்கிறார், “ இது எங்கனம் ஆகும் ? “ என்று.. (பிதாவாகிய கடவுளுக்கு பிடித்த எதிர் கேள்வி இது மட்டும்தான்)

கபிரியேல் தூதர் விளக்கம் கொடுத்ததும் மாதா சொல்லிய ஒரே வார்த்தை.

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" லூக்காஸ் 1: 38.

இந்த வார்த்தைக்குப் பின்தான் பிதா மீட்பின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த உலகப்படி மாதா கேட்டிருக்க வேண்டிய கேள்விகள்..

1. இது தெரிந்தால் எனக்கு மண ஒப்பந்தம் ஆகியிருக்கும் சூசையப்பர் என்னை விலக்கி விடுவாரே?

2. திருமணம் ஆகாமலே நான் கருவுற்றதை யூதர்களிடமும், தலைமைக்குருக்களிடம் சொல்லி விடுவாரே..?

3. எல்லாரும் என்னைப் பழிப்பார்களே? கேவலமாகப் பேசுவார்களே?

4. யூதர்கள் என்னைக் கல்லால் எரிந்து கொன்று விடுவார்களே..?

ஆனால் மாதா தன்னைப் பற்றியோ.. தன் உயிரைப் பற்றியோ சிறிது கூட கவலைப்படவில்லை.

“ இதோ ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “

ஆதாவது கடவுளின் சித்தப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும் நேரட்டும்.. அது உயிரே போவதாக இருந்தாலும். எல்லாம் கடவுளின் விருப்பம். இந்த கடவுளின் அடிமையை அவர் எப்படி வேண்டுமானாலும் அவர் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளட்டும்..

ஆண்டவரின் இறைவார்த்தை அறிவிக்கப்பட்டபோது.. மோயிசன் முதல் எத்தனையோ இறைவாக்கினர்கள் தயங்கியதைப் பார்க்கின்றோம்..

“ நான் எம்மாத்திரம்? நான் எப்படி போவேன்? பேசுவேன்? அவர்கள் என்னைக் கொல்வார்களே ? என்று எத்தனையோ பேர் எதிர்க் கேள்வி கேட்டதுண்டு. ஏன் ஓடிப்போனதும் உண்டு. உயிருக்குப் பயந்து..

அவர்கள் அத்தனை பேரும் ஆண்கள். மாதா ஒரு பெண். அதுவும் சிரிய பெண். ஆனாலும் மாதா கேட்ட ஒரே விளக்கம் கற்பு சம்மந்தப்பட்டதே தவிர உயிர் சம்மந்தப்பட்டது அல்ல “

"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். மத்தேயு 10 : 28..

இயேசு சுவாமி சொல்லிய வார்த்தையை அவர் சொல்லுவதற்கு முன்பே செய்து காட்டினார்கள் மாதா.

அப்படியென்றால் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முதல் வேத சாட்சி மாதா இல்லாமல் வேறு யார்?

மாதா விசுவாசத்திற்கும், தைரியத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பேறுபோனவராயிற்றே..

“எலிசபெத் முதிர்ந்த வயதில் கருத்தரித்திருக்கிறாள். அவளுக்கு இது ஆறாவது மாதம் “ என்று சொல்லியதும் மாதா என்ன செய்தார்கள்..

“அந்நாட்களில், மரியாள் புறப்பட்டு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,

சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். “ லூக்காஸ் 1 : 39-40

பாருங்கள்.. மாதா நாசரேத்திலிருந்து யூதா மலை நாட்டுக்கு தனியே அதுவும் விரைந்து சென்றார் என்று வேதாகமம் சொல்லுகிறது.. சிருஷ்ட்டிக்கப்பட்ட இந்த ஞானம் அசைவுகளுக்கெல்லாம் விரைவானதுதானே..

கடவுள் என் வயிற்றில் இருக்கிறார். நான் ஏன் பயப்பட வேண்டும்? என்ற துணிச்சல் மாதாவுக்கு..

நாம் எப்போதாவது ஆண்டவர் என்னோடு இருக்கிறார். நான் ஏன் பயப்பட வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா?

அதே போல் ஆண்டவரின் சிலுவைப்பாடுகளின் போது ஆண்டவரின் முன்னே சென்று அவரை சந்தித்தாரே.. இறுதிவரை அவர் உடன் இருந்தாரே இதற்கு எத்தனை துணிச்சலும், உள்ள உறுதியும் இருந்திருக்க வேண்டும்..

ஆண்டவரை அடித்து உதைத்து இழுத்துச் செல்லும்போது அவர் தாயாரை சும்மாவா விட்டிருப்பார்கள்..

எத்தனை பேர் வசைமொழி கூறியிருப்பார்கள்.. தள்ளியிருப்பார்கள். பெண்கள் அடித்தும் இருக்கலாம், துப்பியிருக்கலாம். என்னென்னலாமோ பேசியிருக்கலாம்..

எல்லாவற்றிற்கும் மேலாக.. தான் பத்துமாதம் சுமந்து பெற்று 33 ஆண்டுகள் வளர்த்த தன் ஒரே மகனின் கோலம் எப்படியிருந்தது..

மனித உருவோ அமைப்போ அவரிடமா இல்லை என்று வேதாகமம் சொல்லி இருக்கிறது.. இரத்தவெள்ளத்தில் சிலுவை சுமந்துகொண்டு பலியிட கொண்டு செல்லப்படும் ஆட்டுக்குட்டி போல் அவர் இழுத்துச்செல்லப்பட்டபோது.. நம் பரிசுத்ததாயாரின் உள்ளமும், உடலும் எத்தனை வேதனையும், களைப்பும் அடைந்திருக்கும்?

ஆதுவும் மாதா முன்னாலேயே அவர் மகனை பலியிட்டபோது எப்படித் துடித்திருப்பார்..

வேதனைகளின் மொத்தம், துன்பங்களின் எல்லை, யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்..

அத்தனையையும் தாங்கிக் கொண்டு வியாகுல வீர மங்கையாக நின்றாரே அன்று கல்வாரியில் இதைவிட வேதசாட்சிக்கு என்ன தகுதி வேண்டும்..

பலிப்பொருளாக தன் மகன்.. பலி ஆன்மாவாக தான் நின்றாரே.. மனுக்குலத்தை மீட்க இணை இரட்சியாக..

மாதா தன் வாழ்நாளில் ஒரு போதும் உயிருக்கு பயந்தவர் அல்ல.. விசுவாசத்தில் கொஞ்சமும் தளர்ந்தவரும் அல்ல..

அதனால் யூதர்களுக்கு பயந்தோ, யூத சட்டங்களுக்கு பயந்தோ மனுக்குலத்தை மீட்க வந்த வாய்ப்பை மாதா தள்ளவில்லை..

மனுக்குல மீட்பிற்க்காக தன்னை பலியாக்கி, தன்னை பலிப்பொருளாக்கி, தன்னை முழுமையாக அர்ப்பணித்து “ இதோ ஆண்டவருடைய அடிமை.. ஆண்டவரின் வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “ என்று சொல்லிய மாதாவே முதல் கிறிஸ்தவத்தின்.. முதல் வேத சாட்சி..

இன்று மாதாவின் வியாகுலத்தை தியானித்து இன்றைய நாளில் பயணிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !