கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 16 : மது வழியாக சாத்தான் அநேக ஆன்மாக்களில் ஆட்சி புரிகிறான்.. அதை விரட்டுவோம்...

மது வழியாக சாத்தான் அநேக ஆன்மாக்களில் ஆட்சி புரிகிறான்.. அதை விரட்டுவோம்...

பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் சொன்னது,

“ இப்போதெல்லாம் பாவத்தைவிட தாங்கள் செய்வது பாவம் என்பதை உணராமலே அதில் வாழ்ந்து வருவது மிக ஆபத்தானது. வருத்தம் தரக்கூடியது “ என்றார்.

இப்போதெல்லாம் மது அருந்துவது ஏதோ உலகப்பொதுவுடமை மாதிரியும், அது ஒரு சர்வ சாதாரண விசயம் போலவும் மாறிவிட்டது. அது ஒரு சாவான பாவத்திற்கு இட்டுச்செல்லும் தூண்டில் என்பதைவிட அது ஒரு சாவான பாவம் என்பதே பொருத்தமாகும்.

சந்தோசம், துக்கம், உடல் வலி என்று எத்தனையோ காரணங்களை கூறினாலும் அவர்களை எளிதாக கவர்ந்து, ஆசை காட்டி நரகத்தில் தள்ளி வெற்றி சிரிப்பு, எகத்தாளச்சிரிப்பு சிரிக்கிறான் சாத்தான். அதன் மூலமாக குடும்பத்தின் சமாதானத்தை, நிம்மதியை கெடுக்கிறான். நண்பர்களுடன், ஜாலிக்காக, புரோமோசன் பார்ட்டிகள், அல்லது புது வருட சந்தோசம் அல்லது அது எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே அல்லது விரக்தி என்று எத்தனையோ வித விதமான தூண்டில்களை போட்டு எளிதாக அவர்களைப் பிடித்து நரகத்திற்கு நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்து வருகிறான். பாவம் பலர் அவனிடம் ஏமாந்து ஆன்மாக்களைத் தொலைத்து வருகிறார்கள். அவனை தொட்டபின் விட முடியாமல் தவிக்கிறார்கள்.

அதே போல ஒரு சில ஆன்மாக்கள் “ தப்பித்தோம், பிழைத்தோம் “ என்று அவனை விட்டு விட்டு ஆண்டவரிடம் ஓடி வருகிறார்கள். அதை ஒரு திரவப்பொருள் என்பதைவிட திரவ வடிவத்தில் இருக்கும் சாத்தான் என்றே சொல்லாம்.

நம் ஆண்டவராகிய இயேசுவின் ரத்தத்திற்கு நேர் எதிரானது. ஆண்டவரின் திருரத்தம் வாழ்வு அளிக்கும். மது வாழ்வையே அழிக்கும். ஒரு எழுத்துத்தான் வித்தியாசம் என்றாலும் தலையெழுத்தையே மாற்றிவிடும்.

எத்தனையோ கிறிஸ்தவ குடும்பங்கள் மதுவினால் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். கணவன்- மனைவி சண்டை ஏகப்பட்ட பிரச்சினை.. குடும்பம் என்பது ஒரு குட்டித் திருச்சபை என்பது மறைந்து அது ஒரு குட்டி நரகமாக மாறிவிடுகிறது.

சரி குடிப்பழக்கத்தை எப்படி விடுவது ? இதிலிருந்து ஆன்மாவையும் குடும்பத்தினரையும் எப்படிக் காப்பாற்றுவது. வழி சுலபம்தான். உடனே கைகளில் ஜெபமாலையை எடுக்க வேண்டும். நாள்தோறும் எவ்வளவு சோதனை வந்தாலும் நம்பிக்கையோடு ஜெபமாலை சொலுங்கள். எந்த மருந்து மாத்திரையும் செய்யாததை ஜெபமாலை செய்யும். கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தாலும் ஜெபமாலை செய்து வந்தால் நம் தாய் மாதா அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இயேசு சுவாமியிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்.

ஆன்மீகமே மதுவிலிருந்து விடுபட சரியான மருந்து இயேசுவுக்குள் வாழ ஆரம்பிக்கும் முன் இயேசுவுக்குள் வாழ ஆசைப்பட வேண்டும். அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது போதும் தானாக இயேசுவிடம் வந்து விடுவிடலாம். மேலும் அடிக்கடி “ இயேசு “ இயேசு “ என்று உச்சரிக்க வேண்டும். எப்போதெல்லாம் குடிக்க ஆசை வருகிறதோ அப்போதெல்லாம்

“ இயேசு இயேசு “ உச்சரிக்க வேண்டும். " இயேசு " என்னும் திருப்பெயரே ஒரு சிரிய ஜெபம்தான். அதோடு " மரியாயே வாழ்க" என்று சொல்லி நம் தாயையும் துணைக்கு அழைக்க வேண்டும்.

ஜெபமாலையும், “ இயேசு “ என்னும் திருநாமமும், அவரை மது என்னும் சாத்தானிடமிருந்து பிரித்து இயேசு சுவாமியிடம் கொண்டுவந்து கரைசேர்க்கும்.

சரி நான் எப்படி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட இருக்கிறேன். மது என்னும் திரவ வடிவ சாத்தானுடனா ? அல்லது இயேசுவோடா?

அதற்கு இயேசுவின் திருரத்தம் அடங்கிய நற்கருணை நாதரிடம் சரணடைந்து, தகுதியான உள்ளத்தோடு அவரை உண்டு (முழங்காலில் நின்று நாவில் வாங்கி உட்கொண்டு) அவரில் அவரோடு இனைந்து கொண்டாட இருக்கிறேனா?

அவர் நம் உள்ளத்தில் பிறக்க நம்மையே தயாரித்தலே அடையாள முறையில் கொண்டாடாமல் அர்த்தமுள்ள முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவதாகும்.

மதுப்பிரியர்களே ! சாத்தானை விட்டுவிடுகிறீர்களா ?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!