தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"-இல் உயர்த்தினார்.இந்த பேராலயம் ஆனது ஏழு ஊரில் வாழும் பரதவர் குல மக்களுக்கும்(தூத்துக்குடி,புன்னைக்காயல்,வேம்பார்,வைப்பாறு,வீரபாண்டியபட்டினம்,மணப்பாடு மற்றும் ஆலந்தலை) மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பதியப்பட்டது
வரலாறு தொகுப்பு
முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே முத்துகுளிதுறை பரதவர்கள் மதம் மாறினார்கள்.முதலில் பரதவர்களின் ஜாதி தலைவர்களின் தலைமையில் 85 பரதவர் முதலில் மதம் மாறி அதன் பிறகு சுமார் 20000 பரதவர்கள் மதம் மாறினார்கள்.உலகில் முதன்முதலா அதிக அளவில் மக்கள் ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதத்துக்கு மதம் மாறி கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. திருத்தந்தை 3-ம் சின்னப்பரால் இயேசு சபை குருக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இக்குருக்கள் 1579-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர். தூத்துக்குடியில் ஏற்கனவே புதிய பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தை அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் என்பவர் 1538-ம் ஆண்டில் கட்டினார். இவ்வாலயம், கொச்சி மறைமாவட்டம் 1600-ம் ஆண்டில் உருவாகும் வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவர்களுக்கு முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் கொச்சிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
முதல் ஆலயம் உருவான தொகுப்பு
ஆரம்பத்தில் இயேசு சபைக் குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்குப் பொறுப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களுக்கென்றே தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் ஆரம்பத்தில் இரக்கத்தின் மாதா (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டுது.
தூத்துக்டியில் இயேசு சபைக் குருக்கள் எழுப்பிய முதல் மாதா ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என்றும் அழைத்தனர். இயேசு சபைக் குருக்கள் கோவாவில் அமைத்த தங்களின் நிர்வாக தலைமை செயலகத்தை சம்பவுல் என்றும் புனித பவுலுக்கு அர்பணித்திருந்தனர். இதனால் மக்கள் அவர்களை சம்பவுல் குருக்கள் என்றும் அழைப்பதுண்டு, மேலும் தூத்துக்குடியில் இயேசு சபைக் குருக்கள் அமைத்த தங்களின் முதல் தலைமை இல்லத்தை புனித பவுலுக்கே அர்பணித்தனர். அதனால் சம்பவுல் கல்லூரி (St. Pauls’ College) என வழங்களாயிற்று அத்துடன் இணைந்திருந்த இரக்கத்தின் பனிமயமாதா ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என அழைக்கலாயினர்.
தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா நாளான ஆகஸ்டு 5ஆம் தேதி அன்று அர்ச்சிக்கப்பட்டது. அன்றே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.