நரகத்திலிருந்து வந்த எச்சரிக்கை!

நரகம் பற்றிய எச்சரிக்கைப் பதிவு:

(கொஞ்சம் நீளமான பதிவு. கண்டிப்பாக 5 நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள்.)

(அர்ச். ஆசீர்வாதப்பர் நிரந்தர ஆராதனை கன்னியர் மடம் (CIyde Missuri) வெளியிடும், Tabernacle and Purgatory என்ற பத்திரிகையில் 1949 மார்ச் இதழிலில் வெளிவந்தது)

(கேட்க செவியுடையோர் கேட்கட்டும்)

அன்னாள், கிளாரா என்ற இரு இளம் வயதுப் பெண்கள் ஒரு ஜெர்மன் கம்பெனியில் வேலை செய்தார்கள். 1933ல் அன்னாளுக்கு திருமணம் ஆயிற்று. அவள் தன் கணவன் வீட்டுக்கு சென்றுவிட்டாள். கிளாரா, கன்னியர் நடத்திய ஒரு போர்டிங் விடுதியில் தங்கியிருந்தார். 1937 செப்டம்பர் மாத விடுமுறையை கிளாரா கார்டா ஏரி என்ற இடத்தில் செலவழித்தாள். அப்போது அவள் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “உன் முந்தைய தோழி அன்னாள் கார் விபத்தில் அடிபட்டு இறந்து போனாள். நேற்று அவள் அடக்கம், உட்லண்ட் கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்றது" என குறிப்பிட்டிருந்தது. அன்னாள் உலகச் சார்புடன் வாழ்ந்தவள். இச்செய்தியைக் கேட்ட கிளாரா அதிர்ச்சியடைந்தாள். மறுநாள் திருப்பலி பூசை கண்டு நற்கருணை வாங்கி அன்னாள் ஆன்மாவிற்காக ஒப்புக்கொடுத்தாள்.

அன்றிரவு நடுச்சாமத்திற்கு சற்றுப்பின், கிளாராவின் அறைக்கதவைத் தட்டுவது போல் பெரும் சத்தம் கேட்டது. அவள் விழித்து விளக்கைப் போட்டாள். ஒருவரும் இல்லை. அன்னாளைப் பற்றிய செய்திதான் தன்னை இப்படிக் குழப்புகிறது என்று எண்ணினாள். அவள் ஆன்மாவுக்காக பரலோக மந்திரம் சொல்லிவிட்டு படுத்தாள். அப்பொழுது கிளாரா ஒரு கனவு கண்டது போல் இருந்தது. அதில் அவள் பூசைக்குப் போக கதவைத் திறக்கிறாள். காலில் ஒரு கடிதம் தட்டுப்படுகிறது. கையொப்பம் இல்லை. ஆனால் அது நிச்சயமாக அன்னாளின் எழுத்துதான். ஒரு தனியிடத்தில் போய் அதை வாசிக்கிறாள். அவள் கனவில் கண்டெடுத்த கடிதம் பின்வருமாறு:

நரகத்தில் இருந்து அன்னாள் சொல்கிறாள்!

"கிளாரா! எனக்காக ஜெபிக்காதே. நான் நரகத்தில் இருக்கிறேன். நீயும் இங்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். இங்கே நாங்கள் யாரையும் நேசிப்பதில்லை. எங்கள் மனம் தீமையில் நிலை பெற்றுவிட்டது. நரகத்தைப் பற்றி உனக்கு கூறி உன்னை எச்சரிக்கிறேனென்றால் அது நல்ல நோக்கத்துடன் அல்ல. கட்டாயப்படுத்தப்படுவதாலேயே.

“ஓ, நான் பிறவாதிருந்தால் நலமாயிருந்திருக்கும்! நான் மட்டும் என்னை இப்பொழுதே நிர்மூலமாக்கிக்கொள்ள முடியுமானால்! இந்த ஆக்கினை! ஆ என்னையே சாம்பலாக்கி அழித்துவிட மாட்டேனா! இல்லை. நான் இந்த நிலையில் நித்தியத்திற்கும் இருந்தே ஆகவேண்டும். கேள்.

“என் தாய் வருடத்தில் சில நாட்களில்தான் பூசைக்கு செல்வாள். அவள் எனக்கு ஜெபிக்க கற்றுத் தரவில்லை. இங்கே நரகத்தில் நாங்கள் கோவில், பூசை, ஜெபம் எல்லாவற்றையும் வெறுக்கிறோம்; வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் வெறுக்கிறோம். நினைத்த ஒவ்வொரு நினைவும், இழந்த ஒவ்வொரு வரப்பிரசாதமும் எங்களை எப்படி ஆக்கினைப் படுத்துகிறது! நாங்கள் இங்கே உண்பதில்லை, உறங்குவதில்லை. பாழாகிவிட்ட எங்கள் வாழ்வைப் பார்த்துப் பார்த்துப் பல்லைக் கடித்து ஊளையிட்டு அலறுகிறோம். பகையைப் பானம் போல் உட்கொள்கிறோம். ஒருவரொருவரைப் பகைக்கிறோம். கடவுளைத்தான் மிக அதிகமாகப் பகைக்கிறோம்.

“மோட்சத்தில் புனிதர்கள் கடவுளை நேரில் பார்க்கிறார்கள், அவரை நேசியாமலிருக்க அவர்களால் முடியாது! எங்களுக்கு இது தெரியும். இது எங்களை கோபத்தால் நிரப்புகிறது. உலகத்திலிருக்கிறவர்கள் கடவுளை நேசிக்க முடியும். ஆனால் கட்டாயமில்லை.

ஆ! சிலுவையில் அறையப்பட்டிருக்கிற கிறீஸ்துவை ஒருவன் நினைத்துப் பார்ப்பானானால், அவரை அவன் கண்டிப்பாக நேசிப்பான். ஆனால் அவரை நீதிபரராகக் காண்கிற நாங்கள், எங்கள் முழு மனதாலும் அவரைப் பகைக்கிறோம். எங்கள் சுயவிருப்பமாக கடவுளிடமிருந்து திரும்பிக்கொண்டோம். அந்நிலையில் உயிர் துறந்தோம். அதை திரும்பப் பெறமாட்டோம். எங்கள் பிடிவாதத்தில் நித்தியத்திற்கும் நாங்கள் தளரவே மாட்டோம்!

ஆனால் கடவுள் எங்கள் மட்டில் இரக்கமாகவே இருக்கிறார். என் ஆயுளை திடீரென்று குறைத்தது அவருடைய இரக்கமே. இல்லாவிட்டால் நாங்கள் எங்கள் தீய நடத்தையில் தொடர்ந்து வாழ்ந்து, நரக வேதனையைப் பெருக்கிக் கொண்டிருப்போம். இங்கேகூட அவரை நெருங்கி வரும்படி கட்டாயப்படுத்துவதில்லை. அவரை அணுகினால் எங்கள் ஆக்கினை அதிகரிக்கும்.

கிளாரா கேள். நீயும் மார்த்தாளும் என்னை மாதா சபையில் சேரச் சொன்னீர்கள். அந்த சபையில் கூறப்பட்ட ஞான போதனைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சபையாரோடு உல்லாசப் பயணம் போவதை விரும்பினேன். விளையாட்டுக்களை ரசித்தேன். சில சமயம் பாவசங்கீர்த்தனம் செய்தேன். நன்மையும் வாங்கினேன். ஆனால் பாவசங்கீர்த்தனம் எனக்கு அவசியமில்லை, அப்படி ஒன்றும் நான் கெட்டுப்போகவில்லை என்றே நினைத்தேன்.

நீ ஒரு நாள் கூறினாய்: “அன்னாள் நீ ஜெபி, ஜெபிக்காவிட்டால் நரகத்திற்குப் போக நேரிடும்” என்று. இது எவ்வளவு உண்மை ! இங்கு எரிகிற எல்லோருமே ஒன்று,ஜெபிக்காதவர்கள் அல்லது போதிய ஜெபம் செய்யாதவர்களே.

ஜெபிக்கிறவர்கள் விசேஷமாய் கடவுளின் தாயிடம் (மாமரி அன்னை) - (அவர்களுடைய பெயரை நாங்கள் யாரும் உச்சரிக்க மாட்டோம்) - மன்றாடுகிறவர்கள் பசாசின் கைக்குத் தப்பி விடுவார்கள். என் வாழ்வின் இறுதி வருடங்களில் நான் போதிய அளவு ஜெபிக்கவில்லை. அதனால் இரட்சண்யத்திற்கு அவசியமான வரப்பிரசாதங்களை என்னால் அடைய முடியவில்லை

“ஒருவன் உயிர் பிரியும்வேளை வரையிலும் கடவுள் பக்கமாக திரும்பமுடியும் என்பது உண்மையே. ஆனால் அந்தக் கடைசி மூச்சு சமயத்தில், உயிரோடிருக்கும் போது இருந்த பழக்கமே, வென்று விடுகிறது. எனக்கு இப்படித்தான் நடந்தது. வருடக்கணக்காக கடவுளிடமிருந்து பிரிந்து வாழ்ந்த நான், கடைசி நேரத்தில் அவரிடம் போக முடியவில்லை. இறுதி வரப்பிரசாதம் வந்தபோது அதை மறுத்து, கடவுளை எதிர்த்து என் முடிவைச் செய்தேன்.

“பசாசுக்கள் கேடு செய்யும் என்பதை நான் ஒரு போதும் நம்பியதில்லை. ஆனால் எனக்கே அவை எவ்வளவு கேடு செய்துள்ளன! நான் அதிகம் ஜெபித்து பரித்தியாகங்களும் செய்திருந்தால், பசாசுக்களிடமிருந்து தப்பியிருக்கலாம். சிலரைத்தான் வெளிப்படையாக பேய்கள் பிடிக்கின்றன. ஆனால் பசாசுக்கள் கூட்டங்கூட்டமாய் மனிதர்களை கெடுக்க அலைகின்றன. கொசுக்கள் கூட்டம் போல கோடானகோடிப் பசாசுக்கள் அப்படித் திரிகின்றன.

சபிக்கப்பட்ட மனித ஆன்மாக்களாகிய நாங்கள், உலக மனிதர்களை சோதித்துக் கெடுக்க குறிக்கப்படவில்லை. அது கெட்டுப்போன சம்மனசுக்களுடைய வேலை. அவர்கள் பாழாக்கும் ஒவ்வொரு மனித ஆத்துமத்துக்கும், அவர்களுடைய வேதனையைக் கடவுள் அதிகரிக்கிறார். நானும் சாத்தானைப் பகைக்கிறேன் தான். ஆனால் அவன்` உங்களை இங்கு இழுத்து வர முயல்வதால், இந்த விஷயத்தில் அவனை எனக்குப் பிடிக்கும்.

“கடவுள் என்னைத் தம் பக்கம் இழுக்க எப்படி எல்லாம் முயற்சி செய்தார்! அவர் என்னைப் பின் தொடர்ந்து வந்தார். ஒரு தடவை நீ என்னை அழைத்துச் சென்ற ஆஸ்பத்திரி, கோவிலில் என்` வாழ்க்கையை நினைத்துப் பயந்து அழுது விட்டேன். அப்பொழுதே நான் திருந்தியிருக்கலாம். ஆனால் வேலை செய்யுமிடத்தில் மதம் என்பதெல்லாம் உணர்ச்சிவசமாவது` தான் என்று சொல்லக்கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. இந்த: அழுகை அப்படித்தான் என்று, அந்த வரப்பிரசாதத்தை தூர ஒதுக்கிவிட்டேன். நான் சரியாக நற்கருணைக்கு முழந்தாளிடவில்லை என்று நீ கடிந்து கொண்டாயே.

உண்மை என்னவென்றால் நற்கருணையில் நான் நம்பிக்கை: இழந்து விட்டேன். என் உடன் அலுவலர் பேசுவதையே கேட்டு, நான் ஒரு தனி மதத்தையே எனக்காக உண்டாக்கி` கொண்டேன் இறந்த பிறகு ஆன்மா தீர்வை கிடையாது; அது மறுபிறப்படையும் என்று நானும் நம்பி ஆன்ம இரட்சண்யத்தை அலட்சியப்படுத்தினதால் தான். அந்நேரம் எனக்கு ஒரு கடின வியாதி வந்திருந்தால், ஒருவேளை நான் திருந்தியிருப்பேன்.

"அப்போது தான் நான் ஒரு வாலிபனோடு தொடர்பு கொள்ளத் தொடங்கினேன். நீ மாதா சேத்திரத்திற்கு ஒரு திருயாத்திரை செல்ல அழைத்தாய். நான் அவனுடன் உல்லாசப் பயணம் சென்றேன். மறுபடி என்னைக் கண்டதும் “நீ பூசை கண்டாயா?" என்று கேட்டாய். பைத்தியக்காரி! என்று நான் கூறினேன்: கடவுள் உங்கள் சுவாமிமாரைப் போல் குறுகிய புத்தியுடையவரல்ல என்று! ஆனால் உண்மையில் கடவுள் கருணையுடையவராயினும் மிகவும் கண்டிப்புள்ளவருமாயிருக்கிறார்.

அந்த வாலிபனுடன் தொடர்பு ஏற்பட்ட பின், சினிமாக்களுக்கும் நடனங்களுக்கும், உல்லாச யாத்திரைகளுக்கும் சென்றோம். அவன் முன்பு நேசித்த பெண்ணை அவன் மறக்கும் அளவுக்கு அவளைப்பற்றி நான் அவனிடம் கோள் சொன்னேன். இறுதியில் அவன் எனக்கே சொந்தமாகி விட்டான். அதிலிருந்து அவனே எனக்கு கடவுளானான். அவனையே நான் ஆராதித்தேன் என்றே சொல்ல வேண்டும் அதுவே எனக்கு மத வழிபாடாயிற்று.

"அந்த வாலிபனுடன் எனக்குத் திருமணம் நடந்தது. கோவில் திருமணந்தான். ஆனால் நாங்கள் இருவருமே வேத அநுசாரங்களை நம்பவில்லை. முறையைக் கழிப்பதற்காக பாவ சங்கீர்த்தனம் செய்தேன். நன்மையும் வாங்கினேன். நீங்கள் இதை தேவ துரோகம் என்கிறீர்கள். அதென்ன தேவ துரோகம்? என் மனம் இதற்குப்பின் அமைதிப்பட்டு விட்டது. அதற்கு மேல் கோவில் பக்கமே போனதில்லை.

"என் கணவனும் நானும் எல்லாவற்றிலும் ஒரே கருத்து கொண்டிருந்தோம். குழந்தை வேண்டாமென்று முடிவு செய்தோம். எங்களுக்கு போதிய வசதி இருந்தது. ஆகவே அழகான வீடு, சௌகரியமான வாழ்க்கை , விருந்துகள், கலைநிகழ்ச்சிகள்` இன்பமான பொழுதுபோக்குகள் - என் திடீர் மரணமாயிலும் ஒரே உலக இன்பமய வாழ்வு தான். ஆயினும், என் இருதய ஆழத்தில் என்னை ஒரு புழு அரித்துத் தின்றது.` வெளியே உரத்துச் சிரித்தேன். உள்ளே நிம்மதி இல்லை. அனுபவிப்போம்; செத்த அன்று முடிந்து போகட்டும் என்று நினைப்பேன். அந்த சாவு இப்போது வரக்கூடாது என்றும் விரும்புவேன்.

ஆனால் எனக்குத் திடீர் மரணம் வந்தது ஒரு வாரத்திற்கு முன், கடந்த ஞாயிறன்று என் கணவனும் நானும் உல்லாச யாத்திரைக்குப் புறப்பட்டோம். அன்று நான் குதுகலத்துடன் விழித்தேன். பயணம் திரும்பி வரும்போது காரை ஓட்டிவந்த என் கணவன் எதிரே வந்த வாகனம் ஒன்றால், பார்வை மறைக்கப்பட்டு விபத்து நேர்ந்தது. 'கிரீச்' என்ற சத்தம் - நான் நொறுங்கி நசுங்கிச் செத்தேன்.

“என் ஆவி பிரிந்த நொடியிலேயே என் வாழ்வு முழுவதையும்` தெளிவாகக் கண்டேன். ஆ. என் பாவங்கள் அனைத்தும் அங்கு நின்றன! காலையில் நான் கொடுத்த மறுப்புவரை அனைத்தும்! தான் கொலை செய்தவனுடைய பிணத்தின் முன் நிற்பது போல் இருந்தது. வருத்தமா? இல்லை. வெட்கமா? இல்லை. நான் புறக்கணித்த கடவுள் முன்னிலையிலிருந்து ஓடினேன். கண்காணா நீதிபரர் கூறினார், “என்னை விட்டு அகன்று போ' என்று. நான் எரியும் கெந்தகப் புகைபோல் முடிவில்லா நெருப்புக்குள் விழுந்தேன்.

கிளாரா, ஒருநாள் நரகத்தைப்பற்றி நீ சொன்ன போது நான் தீக்குச்சியைப் பற்ற வைத்து உன் நாசிக்கடியில் காட்டி, அது இப்படி இருக்குமா? என்று கேட்டேன், சிரித்தேன். இப்பொழுது தெரிகிறது. தீ என்றால் தீ தான். உருவகமல்ல, உண்மையான நெருப்பு! எங்கள் மிகப்பெரிய வேதனை கடவுளை இழந்துவிட்டது தான். இதை உலகில் நீங்கள் உணர்வதில்லை. கூரிய கத்தியைக் கண்டால் வேதனை இல்லை. ஆனால் அது சதையில் குத்தப்பட்டவுடன் எப்படி அதை உணர முடிகிறது! அது போலவே இதுவும். நான் போகிறேன் கிளாரா!" என்று கூறியபடியே அன்னாள் மறைந்தாள். கிளாராவின் கையில் இந்த கடிதம் புகையாகி அதுவும் மறைந்தது.

கிளாரா கனவினின்று விழிக்கவும் திரிகால மணி அடித்தது. அன்றுபோல் திரிகால ஜெபத்தை அவ்வளவு பக்தியுடன் அவள் சொன்னதேயில்லை.

ஆமென்!

நன்றி: www.catholictamil.com