✠ புனிதர் ஃபிடேலிஸ்

புனிதர் ஃபிடேலிஸ், கப்புச்சின் (Capuchin friar) சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளரும், கல்வியில் சிறந்த பேரறிஞரும், மறைசாட்சியும் ஆவார். இப்புனிதர் தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாட்டின் "சீவிஸ் இம் ப்ரட்டிகவ்" (Seewis im Prättigau) எனுமிடத்தில் தமது எதிர்ப்பாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

“மார்க் ராய்" (Mark Roy) என்ற இயற்பெயர் கொண்ட ஃபிடேலிஸ், தற்போதைய ஜெர்மனி நாட்டின் சிக்மரிங்கன் என்ற நகரில் கி.பி. 1577ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் "ஜான் ரே" (John Rey) ஆகும். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஃபிடேலிஸ், "பிரைபெர்க்" (University of Freiburg) பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் தத்துவம் ஆகியன கற்றார். தாம் பயின்ற பல்கலையிலேயே தத்துவம் கற்பித்த இவர், சட்ட கல்வியில் முனைவர் பட்டம் வென்றார். தமது மூன்று ஆசிரியர் நண்பர்களுடன் இணைந்து இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு புதிய மொழிகளை கற்று ஆழ்ந்த அறிவை பெற்றார்.

ஏழைகளின் வழக்கறிஞர்:

மார்க் ராய், தனது வழக்கறிஞர் பணியை 'என்சிசீம்' நகரில் "ஏழைகளுக்கு நீதி" என்ற இலட்சியத்துடன் தொடங்கினார். செல்வந்தர்களால் ஏமாற்றப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட ஏழை மக்களின் வழக்குகளை எடுத்து நடத்தி நீதியை நிலைநாட்டினார். எவ்வித இலாபத்தையும் எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தியதால் சக வழக்கறிஞர்களின் இன்னல்களுக்கு உள்ளாகி மனமுடைந்தார்.

கப்புச்சின் துறவி:

பணம், பொருள், பதவி என்ற உலகத்தின் போக்கும், நீதிமன்றங்களில் நீதிக்கு தண்டனை கிடைப்பதையும், ஏழைகள் அநியாயமாக நசுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து, தனக்கு உகந்த பணி இதுவன்று என உதறித் தள்ளி, செபத்திலும், தபத்திலும், தனது பாதையை செலுத்தினார். ஏழைகளுக்கு பணி செய்ய கப்புச்சின் சபையை நாடினார், ஆனால், இவரது செல்வ செழிப்புடைய குடும்பப் பின்னணி, மிகப்பெரிய படிப்பு ஆகியவை தடையாக இருந்தாலும் தொடர்ந்து போராடி கப்புச்சின் சபையில், கி.பி. 1612ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 4ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

மறைபரப்பு பேராயத்தின் முதல் மறைச்சாட்சி:

பிரிவினை சபையினருக்கு சுவிஸ், பிரிகாளியா, பிரட்டிக்காவு, மேயன்பெல்ட் மற்றும் சுவபேயா பகுதிகளில் நற்செய்தியை முழங்கி பலரை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் திருப்பினார். இதனால் பிரிவினை சபையினரின் கடும் கோபத்துக்கு உள்ளானார்.

கி.பி. 1622ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 24ம் நாளன்று, சீவிஸ் என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் சில ஆஸ்திரிய அரசு சிப்பாய்களின் பாதுகாவலுடன் மறையுரையாற்றுகையில் கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) தாக்குதலுக்கு ஆளானார். அவரை நோக்கி வெடித்த துப்பாக்கி குண்டிலிருந்து அதிசயமாக தப்பினார். உடனே அவர் அங்கிருந்த ஆஸ்திரிய சிப்பாய்களாலும் சில கத்தோலிக்க மக்களாலும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். எதிர் சபை நண்பர் ஒருவர் அவருக்கு தங்க இடம் தர முன்வந்தார். ஆனால், தமது வாழ்க்கை கடவுள் கைகளில் உள்ளது என்று கூறி மறுத்த ஃபிடேலிஸ், தமது இருப்பிடத்துக்கு திரும்பும் வழியில், ஆயுதம் தாங்கிய சுமார் இருபது கால்வினிஸ்ட் கிளர்ச்சியாளர்களால் (Calvinist agitators) வழி மறிக்கப்பட்டார். அவர்கள் அவரை கத்தோலிக்க விசுவாசத்தை கைவிட வற்புறுத்தினர். ஆனால், ஃபிடேலிஸ் தமது விசுவாசத்தை கைவிட மறுத்ததால் இரக்கமற்று கொலை செய்யப்பட்டார்.

கி.பி. 1746ம் ஆண்டு, புனிதர் பட்டமளிக்கப்பட்ட இப்புனிதர், ஆறு மாதங்களின் பின்னர் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.