அன்னைக்காக செய்த ஒரு சிறிய சனிக்கிழமை பக்திமுயற்சிக்காக, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய உதவி புரிந்த நமதாண்டவள்

ஒருமுறை இறையருட்பணிக்காக குருக்கள் குழுவாக சென்றிருந்த போது, வழக்கம் போல் அன்னையைக் குறித்த பிரசங்கம் முடிந்த பின்னர், மிகவும் வயதான மனிதர் ஒருவர் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று குருவானவர் ஒருவரிடம் வந்தார். 

ஆறுதல் நிறைந்த உள்ளத்தோடு அவர் கூறியதாவது,” தந்தையே, பரிசுத்த நமதாண்டவள் என்னக்கு ஒரு அருள் புரிந்துள்ளார்” அதற்கு குருவானவர்,” அப்படி என்ன அருள் வரத்தை அளித்தார்??” என்று கேட்டதற்கு அந்த வயதானவர்,” நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும், கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக நான் செய்த ஒரு பாவத்திற்காக மனம் வருந்தி அறிக்கையிட வெட்கப்பட்டு நமதாண்டவருக்கு உகந்த நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யாமல் இருந்தேன். நான் இந்த காலங்களில் பலமுறை பல்வேறு ஆபத்துக்களைக் கடந்து வந்துள்ளேன், பலமுறை சாவின் விளிம்பில் சென்று வந்துள்ளேன். அந்த சமயங்களில் நான் மரித்திருந்தால், கண்டிப்பாக இறை இரக்கத்தைப் பெற்றிருக்க மாட்டேன். ஆனால் இப்போது நமதாண்டவள் அவளது அருளிரக்கத்தால் எனது மனதை தொட்டு என்னை அறிக்கயிடச் செய்தார்” என்று பதிலுரைத்தார். 

இதனை அவர் தேம்பித் தேம்பி கண்ணீர் வடித்துக்கொண்டே, அன்னையின் இரக்க உணர்ச்சியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். அவரது பாவ அறிக்கையைக் கேட்டு, குருவானவர் அன்னைக்காக அவர் என்ன பக்தி முயற்சிகள் செய்தார் என வினவினார். 

அதற்கு அவர், அன்னையின் மகிமைக்காக சனிக்கிழமைகளில் பால் சார்ந்த அனைத்து பொருட்களையும் தவிர்த்து உபவாசம் செய்ய தவறியதில்லை என்றும் அதன் காரணமாகவே பரிசுத்த கன்னிமரியாள் தனக்கு இரக்கம் காட்டினார் என்றும் கூறினார். அதே நேரத்தில் குருவானவருக்கு இந்த  உண்மையை வேண்டுமென்றால் பிறருக்கு அறிவிக்கும் அனுமதியும் அளித்தார். 

****சிந்தனை******

பாவசங்கீர்த்தனம் என்பது விளையாட்டான அருட்சாதனம் அல்ல. நமது தாயின் கருவில் உருவாகும் முன்னரே நம்மை அறிந்த அவருக்கு நாம் புரிந்த பாவங்கள் தெரியாமலா இருக்கும்???? அதனை நாம் அவரிடம் மறைப்பதால் நமக்கு என்ன பயன்???

குருவானவர் வழியாக நமக்காக சிலுவையில் தொங்கிய நமதாண்டவர் நமது பாவங்களை கேட்டு, அந்த பாவங்களில் நாம் மீண்டும் விழாமல் இருக்க வேண்டிய வழிகளையும் பரிகாரங்களையும், அதற்கான மன்னிப்பையும் நமக்கு அருளுகிறார் என்பது எவ்வளவு பெரிய கொடை!!!! அதனை நாம் சரியாக பயன் படுத்துகிறோமா???சிந்திப்போம்.

இந்த அருட்சாதனம் நமதாண்டவரை நோக்கி நாம் செல்லும் நீண்ட நெடிய பயணத்திற்காக, நம்மை தயார் செய்ய, நமது பாவங்களை நாம் உணர்ந்து, அதற்காக மனம் வருந்தி பாவப் பரிகாரம் செய்து சாத்தானின் சோதனைகளை தூய ஆவியின் வழியாக வெற்றி கொள்ள நமதாண்டவர் அளித்த அருங்கொடை. நமது மன அமைதிக்கும் ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்குமான முதன்மையான படிக்கட்டு.

பாவ அறிக்கையின் போது, நமது அற்ப பாவங்களுக்கு முக்கியத்துவம் தராமல்,  பத்து கட்டளைகளைக் கடைபிடிக்காமல், ஏழு தலையான பாவங்களுக்கு அடிமையாகி, திருச்சபையின் கட்டளைகளைக் கடைபிடிக்காமல், நாம் புரிந்த சாவான பாவங்களுக்காக உண்மையாக மனம் வருந்தி அறிக்கையிட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் பெற்று நமது ஆன்மீக வாழ்வில் முன்னேறிச் செல்லும் அருள் வரத்தை நமது பாத்திமா அன்னையின் வழியாக கெஞ்சி மன்றாடுவோமாக!!!!! 

இயேசுவுக்கே புகழ் !!!! மாமரித்தாயே வாழ்க!!!

நன்றி பிரதர் : மரிய ஜெரால்டு ராஜன்