ஒரு ஆயரின் செபமாலைக்கான அர்ப்பணிப்பு

ஒரு இஸ்பானிய உயர்குடிச் சீமாட்டி, புனித டொமினிக்கின் வழியாக  செபமாலையின் மகிமையை அறிந்து, நாள்தோறும் உண்மையுடன் அதனை செபித்து வந்தார். அதன் மூலன் அவரது ஆன்மீக வாழ்வில் வியத்தகு முன்னேற்றம் கண்டார். 

ஆன்மீக வாழ்வில் முழுநிறைவு பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வந்ததால், பிரசங்கத்திற்கு மிகவும் புகழ்பெற்ற ஆயர் ஒருவரிடம் ஆன்மீக முழுநிறைவு  பெற உதவும் சில பயிற்சிகளை தனக்கு கற்று கொடுக்க வேண்டினார்.     

அதற்கு அந்த ஆயர், ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், அச்சீமாட்டியின் ஆன்ம நிலை மற்றும் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகளை தான் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்க்கு அச்சீமாட்டி, பரிசுத்த செபமாலை செபிப்பது தான் தனது மிக முக்கியமான பயிற்சி என்றும் நாள்தோறும் தவறாமல் மகிழ்ச்சி, துக்க மகிமை மறையுண்மைகளை தியானிப்பதாகவும், அப்பயிற்சியானது தனது ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும்  பதிலுரைத்தார்.         

மறையுண்மைகளில் அடங்கியுள்ள விலைமதிப்பில்லா படிப்பினைகளை அச்சீமாட்டி விளக்கியத்தைக் கேட்டு ஆயர் மிகவும் பரவசமடைந்தார். அவர் மிகவும் வியந்து," நான் கடந்த இருபது வருடங்களாக இறையியல் முனைவராக இருக்கிறேன். பல்வேறு வகையான பக்தி முயற்சிகள் குறித்த மிகவும் அருமையான புத்தகங்களை படித்துள்ளேன். ஆனால் நல்ல கனியை மட்டுமே தரக்கூடிய, கிறிஸ்துவத்தின் அடிப்படை இயல்புகளைக் கொண்ட இதனை போன்ற பக்தி முயற்சியை எனது வாழ்நாளில் எப்பொழுதுமே கண்டதில்லை. நானும் உன்னை முன்மாதியாக எடுத்துக்கொண்டு இனிமேல் செபமாலை பக்தியை பரப்பப் போகிறேன்" என்று கூறினார்.

அவருடைய செபமாலை பரப்புதல் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது. மிகக் குறுகிய காலத்திலேயே, அவரது மறைமாவட்டம் முழுவதும் நல்ல முறையில் மாறியது. மறைமாவட்டதில் அனைத்து வகையான உலகப்பற்றுள்ள சூதாட்டம் போன்ற செயல்கள், தீய பழக்கவழக்கங்கள்  குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்தது. 

அநேக மக்களை விசுவாச வாழ்விற்க்குள் மீட்டெடுத்தது, பாவிகளை  தனது குற்றங்களை கைவிட்டு  மனந்திரும்பி வரச்செய்தது, மற்றவர்களை மன உறுதியுடனும் உண்மையுடனும்  பாவ வாழ்க்கையைக் கைவிட்டு தூய வாழ்வு வாழச் செய்தது போன்ற அநேக மனத்தைக் கவரும் நிகழ்ச்சிகள் அரங்கேறின. மதத்தின் மேல் தணியாத ஆர்வம் மற்றும் கிறிஸ்தவர்களின் பிறருக்கு உதவும் மனப்பாங்கு வேர்விட்டு வளர்ந்தது. இவை அனைத்தும் ஏன் மிகவும் குறிப்பிடத்தக்கது மிகவும் என்றால், கொஞ்ச காலமாகவே ஆயர் தனது மறைமாவட்டத்தை மனம் மாற்ற எவ்வளோவோ முயற்சித்தும் பலன் கிடைக்காத நிலையில், அவரின் முயற்சி செபமாலை பக்தியின் வழியாக கைகூடியது.           

செபமாலை பக்தி அனைவரின் மனதிலும் ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காக, ஆயர் தன்னோடு எப்பொழுதும் ஒரு அழகிய செபமாலையை அணிந்து இருந்தார். அதனை அவரின் போதனை சமயங்களில் மக்கள் கூட்டத்திற்கு காண்பித்தார். 

அவர் அடிக்கடி,"கிறிஸ்துவுக்குள் எனதருமையான சகோதர, சகோதரிகளே, நான் ஒரு இறையியல் முனைவர், திருச்சபையின் சட்டம் மற்றும் உரிமையியல் சட்டத்தில் முனைவர் ஆனால் நான் உங்களுடைய ஆயராக கூறுவது என்னவெனில் எனது கல்வித்தகுதிக்கான ஆடைகளை அணிவதைக்காட்டிலும் நமதன்னையின் செபமாலை அணிவதையே மிகவும் பெருமையாக நினைக்கிறேன்" என்று கூறுவார்.

****சிந்தனை****

நாமும் நமதன்னையின் செபமாலை வழியாக நமது பங்கிலுள்ள   அனைவரையும் ஒப்புக்கொடுத்து, தீய பழக்கவழக்கங்கள், உலகப்பற்றுதல் பாவிகள் மனந்திரும்ப, பிரிந்து சென்ற மக்கள் அனைவரையும் தாய் திருச்சபைக்கு மனம் திரும்பி வர தேவதாயின் வழியாக நமதாண்டவரிடம் இறைஞ்சி மன்றாடுவோமாக. 

இயேசுவுக்கே புகழ் !!! மாமரித்தாயே வாழ்க!!!!