மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட்.

மான்ட்ஜூக்ஸ் நகர புனிதர் பெர்னார்ட் ஒரு இத்தாலிய துறவியும், மறைப்பணியாளருமாவார். இவர், (Hospice) எனப்படும் புகழ்பெற்ற நல்வாழ்வு மையம் மற்றும் துறவு மடத்தின் நிறுவனரும் ஆவார். இது, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலமாக, மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் அடைக்கலமாகும் மலையேறும் பயணிகளை மீட்கும் பணி சேவை செய்திருக்கிறது. இவர்களது மீட்புப் பணி முழுதுமே, இவர்களது சபையினராலேயே செய்யப்பட்டு வந்துள்ளது. குளிர்கால புயல்களின் போது மீட்புப் பணிக்காக இவர் வளர்த்துவந்த புகழ்பெற்ற ஒருவகை இன நாய்கள், இவற்றின் சிறப்புக்காகவே, இவரது பெயராலேயே - "புனித பெர்னார்ட் நாய்கள்" (St. Bernard dogs) என்று அழைக்கப்படுகின்றன.

அக்கால "ஆர்லெஸ்" (Kingdom of Arles) இராச்சியத்தின் ஒரு பகுதியான "கௌன்டி சவோய்" (County of Savoy) எனப்படும் தூய ரோம மாநிலத்தின் "சேட்டோ டி மெந்தன்" (Château de Menthon) எனும் நகரில் பிறந்த பெர்னார்ட், ஒரு பணக்கார மற்றும் உன்னத குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். பாரிஸ் (Paris) நகரில் தமது முழுமையான கல்வியைப் பெற்றார். அவர் இளமைப் பருவத்தை அடைந்ததும், திருச்சபையின் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவுசெய்தார். தனது தந்தை ஏற்பாடு செய்த கெளரவமான திருமணத்தை மறுத்துவிட்டார்.

(பிரபலமான புராணக்கதை ஓன்று, இவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு முந்தைய இரவில் அவர் கோட்டையிலிருந்து வெளியேறினார் என்றும், ஜன்னலிலிருந்து தன்னைத் தூக்கி எறிந்து, தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கோட்டையிலிருந்து பறக்கும்போது, தேவதூதர்களால் பிடிக்கப்பட்டு மெதுவாக, பாதுகாப்பாக இறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் (Italian Alps) உள்ள இருமொழிப் பகுதியான "ஆஸ்டா பள்ளத்தாக்கின்" (Aosta Valley) "ஆஸ்டா" (Aosta) நகரின் தலைமை திருத்தொண்டரான (Archdeacon of Aosta) "பீட்டரின்" (Peter) வழிகாட்டுதலின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் அவர் வேகமாக முன்னேறினார். ஒரு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பெர்னார்ட், மலை கிராமங்களில் மிஷனரியாக பணியாற்றினார். பின்னர், அவரது கற்றல் மற்றும் நல்லொழுக்கம் காரணமாக, அவர் தனது ஆலய தலைமை திருத்தொண்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நேரடியாக ஆயரின் கீழே, மறைமாவட்டத்தின் அதிகார பொறுப்புகளை வழங்கினர்.

42 ஆண்டுகளாக, அவர் தொடர்ந்து இந்த மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். இத்தாலியின் வடமேற்குப் பிராந்தியமான லோம்பார்டியின் பல மண்டலங்களுக்குள் கூட, ஏராளமான மாற்றங்களைச் செய்தார். மற்றும் பல அற்புதங்களையும் செய்தார். புனித பெர்னார்ட்டின் வாழ்க்கையின் கடைசி செயல் இரண்டு பிரபுக்களின் இடையே இருந்த வேற்றுமைகளை அகற்றிச் சமரச நல்லிணக்கமாகும். அவர்களிடையே இருந்த சண்டை ஒரு அபாயகரமான அச்சுறுத்தியதலை விளைவிக்கக் கூடியதாய் இருந்தது.

அவர் கி.பி. 1081ம் ஆண்டு, ஜூன் மாதம், நோவாரா இம்பீரியல் சுதந்திர நகரில் இறந்தார். புனித லாரன்ஸ் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

நியூயார்க் (New York) நகர "சரனாக்" (Saranac Lake) ஏரியில் உள்ள புனித பெர்னார்ட் கத்தோலிக்க தேவாலயம் (Saint Bernard's Catholic Church) அவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.