பூண்டி மாதாவின் புதுமைகள் தொடக்கம்!

பூண்டி மாதா திருத்தலத்தில் அருட் பிரசன்னம் இருப்பது வெளிப்பட தொடங்கியது. இரவு நேரங்களில் புதுமையான ஒளி ஆலயத்தில் பிரகாசித்தது. இதுபோன்று பலமுறை தெரியவே ஆலயத்தை திறந்து பார்த்தனர். அங்கு விளக்கும் இல்லை. நெருப்பும் எரியவில்லை. இறையருள் இல்லாமல் வெளிச்சம் இருக்க முடியாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வலுவாக தோன்றியது. பூண்டி அன்னையின் பொற்காலம் துவக்கம்: 1955 செப்டம்பர் மாதம் பூண்டியின் பங்கு குருவாக வி.எஸ்.லூர்துசேவியர் சுவாமிகள் பொறுப்பேற்றார். இவரது காலம் ஆலயத்தின் பொற்காலமாகும். இவரது தன்னலமற்ற சேவையும், அயராத உழைப்பும், பக்தியும் பூண்டி மாதாவின் பெருமைகளை உலகறியச் செய்தன. 1956 நவம்பர் மாதம் ஆலய நடுச்சாலையின் பளுவான மேற்சுவர் பகுதி எந்த நேரத்திலும் இடிந்து விழும்  நிலை ஏற்பட்டது. இதை அகற்ற பெரும் செலவாகும் என்று கட்டிட தொழில் வல்லுநர்கள் கூற லூர்துசேவியர் சுவாமிகள் அன்னையிடம் வேண்டினார். 

22.11.1956 வெள்ளிக்கிழமை மதியம் ஆலயத்தின் உட்பகுதியில் பேரொலி கேட்டது. முகப்பு வளைவும், பீடமும், விதானமும் எவ்வித சேதமின்றி இருக்க அகற்றப்பட வேண்டி நடுச்சாலைப் பகுதி மட்டும் இடிந்து உள்ளே விழுந்திருந்தது. மாதாவின் புதுமையை  காண மக்கள் வெள்ளமென வந்தனர். நன்கொடைகள் அளித்தனர். மீண்டும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு குடந்தை ஆயர் பவுல்அருள்சாமி 1964 மே மாதம் புனிதப்படுத்தி அன்னைக்கு அர்ப்பணித்தார். 17 ஆண்டுகள் தன்னலம் பாராது இறைபணி செய்த லூர்துசேவியர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் 16.04.1972ல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் பூண்டிக்கு கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் அவரது கல்லறையில் வேண்டுபவர்கள் நன்மைகளை பெற்று வருகின்றனர். திருச்சிலுவை அருளிக்கம்: 1.9.1972ல் பங்கு குருவாக பொறுப்பேற்ற ராயப்பர் சுவாமிகள் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் இளவரசர் எனப்படும் கர்தினால்.

டி.எஸ்.லூர்துசாமி ஆண்டகையின் உதவியோடு இயேசு ஆணிகளால் அறையப்பட்ட சிலுவையிலிருந்து ஒரு சிறு மரத்துண்டு பூண்டி மாதா பேராலயத்தில் வைத்து மக்கள் வழிபட புனித பூமியில் இருந்து 1977ம் ஆண்டு தவக்காலத்தின் 6ம் வெள்ளியன்று கொண்டு வரப்பட்டு திருச்சிலுவை அருளிக்கம் கதிர் பாத்திரத்தில் வைக்கப்பட்டு பூண்டிமாதா பீடத்தில் மாதா சொரூபத்தின் முன்புறம் எழுந்தேற்றம் செய்யப்பட்டது. நிரந்தர அன்னையின் திருத்தலம், திருத்தல பேராலயம்: 15.6.1991ல் பங்கு குருவாக பொறுப்பேற்ற சூசை அடிகள் காலத்தில் பூண்டி தனிபங்காகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 22.1.1995 அன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வாட்டிகன் இளவரசர் கர்தினால்.லூர்துசாமி ஆண்டகையின் முன்னிலையில் பூண்டியை நிரந்தர அன்னையின் திருத்தலமாக குடந்தை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் பிரகடனம் செய்தார்.   20.8.1997 பங்கு குருவாக பொறுப்பேற்ற தங்கசாமி அடிகள் காலத்தில் தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 3.8.1999 அன்று திருத்தல பேராலயமாக (பசிலிக்கா) பிரகடனம் செய்யப்பட்டது.  

பிரதான ஆலய விரிவாக்கம்: 8.6.2003ல் பங்கு குருவாக பொறுப்பபேற்ற குழந்தைசாமி அடிகள் பிரதானஆலயத்தின் மண்டபத்தை விரிவுபடுத்தி சுமார் ரூ.ஒரு கோடி செலவில் நவீன மாற்றங்கள் செய்து 3.1.2005ல் குடந்தை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் புனிதப்படுத்தி திறந்து வைத்தார். ரூ.35 லட்சம் செலவில் உணவகம் திறக்கப்பட்டது. பக்தர்கள் தங்குவதற்கு  அறைகள் கட்டப்பட்டன.  ஆண்டு பெருவிழா: பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் மே மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14ம் தேதி தேர்பவனியும், 15ம் தேதி திருவிழா திருப்பலி நடைபெற்று நிறைவடையும். விழாவைக் காண பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். பூண்டிமாதா புதுமை இரவு வழிபாடு: தற்போது பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான ரெக்டர் அமிர்தசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் ஆகியோர் முயற்சியால் 8.12.15 முதல் பூண்டிமாதா புதுமை இரவு வழிபாடு துவக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதம் 8ம் தேதியும் இந்த வழிபாடு நடைபெறும். மாலை 5.15 மணிக்கு அருள் பொழிவுத்திருப்பலியும், 6.15 மணிக்கு சிறப்பு செபமாலைத் தேர்பவனியும், 7.15 மணிக்கு சிறப்பு ஆராதனையும், 8 மணிக்கு உணவு நேரம், 9 முதல் இரவு 12.30 மணிவரை இரவு செப வழிபாடும் நடைபெறும். -  ஆமென்