✠ புனிதர் இஸிடோர்

புனிதர் இஸிடோர் ஒரு ஸ்பேனிஷ் பண்ணைத் தொழிலாளியும் ஏழைகள் மற்றும் கால்நடைகள் மீது கொண்ட அன்பின் காரணமாக நன்கு அறியப்பட்டவரும் ஆவார். இவர் "மேட்ரிட்" (Madrid) நகர் மற்றும் விவசாயிகளின் பாதுகாவல் புனிதர் ஆவார்.

ஸ்பெய்ன் நாட்டின் "மேட்ரிட்" (Madrid) நகரில் சுமார் கி.பி. 1070ம் ஆண்டு ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவர், கிறிஸ்தவ விசுவாசம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், "மேட்ரிட்" நகரின் புறநகர் பகுதியில் "ஜுவான் டி வர்காஸ்" (Juan de Vargas) எனும் பணக்கார நிலச்சுவான்தாரின் பண்ணையில் பண்ணைத் தொழிலாளியாக பணிபுரிந்தார்.

நடுத்தர வயதைக் கடந்த இஸிடோர், "மரியா டொர்ரிபியா" (Maria Torribia) எனும் இளம்பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஒருமுறை, இவர்களது குழந்தை மிகவும் ஆழமான ஒரு கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இஸிடோர் மற்றும் மரியா இருவரும் செய்த செபத்தின் பலனாக கிணற்றின் நீர் மேலெழுந்து குழந்தை மேலே வந்ததாகவும் அது காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. தமது செபத்தினால் குழந்தை பிழைத்துக்கொண்டதற்கு நன்றி கூறும் விதமாக, அவர்களிருவரும் பாலியல் உறவைத் தவிர்ப்பதற்காக தனித்தனி வீடுகளில் வாழ்ந்தனர். அவர்களது மகன் பின்னர் இளம் வயதில் மரித்துப்போனான்.

இஸிடோர் ஏழைகளின் மீதும் கால்நடைகளின் மீதும் மிக்க அன்பு கொண்டவராக இருந்தார். தன்னிடம் உள்ள உணவு எதுவாகினும் அதனை ஏழைகளுக்கு கொடுத்தே தாமும் உண்பார்.

இஸிடோர் கி.பி. 1130ம் ஆண்டு, மே மாதம், 15ம் நாளன்று, மேட்ரிட் நகரினருகே மரித்தார்.