அர்ச்சியசிஷ்டவன் ஆக முதலாவதும், மிக எளிதும், நிச்சயமுமான வழி கடவுளை நேசிப்பதாகும். நாம் கடவுளின் நேசத்தை முழுமையாக அறிய வேண்டும். கடவுளை நேசிப்பது தான் நம் வாழ்வின் மாபெரும் அலுவலாகவும், நம் ஒரே ஒரு அலுவலாகவும் இருக்கிறது.
ஒரே ஒரு சிறு தேவசிநேகச் செயலின் மதிப்பு விலை மதிக்கப்படாதது. ஒரு தேவ சிநேகச் செயல் மற்ற புண்ணியங்களின் ஓராயிரம் செயல்களைவிட அதிக மதிப்புள்ளது. நித்திய வெகுமானத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு நேசச் செயலை எந்த ஒரு சாதாரணக் கிறீஸ்தவனும் ஒரே கணத்தில் செய்துவிட முடியும் என்று ஆண்டவர் பெனிஞ்ஞா கொன்ஸோலாத்தாவிடம் கூறினார். நாம் எந்தக் கஷ்டமுமின்றி தினமும் எண்ணற்ற நேசச் செயல்களைச் செய்ய முடியும். மேலும், ஓராயிரம் பயங்கர தேவ தூஷணங்கள் தரும் வேதனையை விட ஒரே ஒரு நேசச் செயல் தமக்கு அதிக மகிமையையும், இன்பத்தையும் தருவதாகவும் அவர் அவளிடம் கூறினார். இது தவிர, தேவசிநேகம் நம் பாவங்களை அகற்றுகிறது. ஒரு சுருக்கமான தேவசிநேக ஜெபம் நல்ல கள்ளனுக்கு அன்றே கிறீஸ்து நாதரோடு பரகதியில் இருக்கும் வாக்குறுதியைப் பெற்றுத் தந்தது.
ஆனால், தேவசிநேகமின்றி வேறு நோக்கத்திற்காக நாம் செய்யும் எந்தக் காரியமும் மதிப்பற்றதாக இருக்கிறது. நாம் பல வருடங்கள் கடுமையாக உழைக்கலாம், அதனால் மனிதர்களிட மிருந்து பெரும் புகழ்ச்சியையும், மரியாதை வணக்கத்தையும் பெறலாம், ஆனால் அது தேவ அன்பிற்காகச் செய்யப்படவில்லை என்றால், அது மதிப்பற்றதாகவே இருக்கும்.
கடவுளை நேசிப்பது மிக எளிது, ஏனெனில் தம்மை நேசிக்கவும், நம் முழு இருதயங்களோடும், ஆன்மாக்களோடும் தம்மை நேசிக்கவுமே அவர் நம்மைப் படைத்தார். அளவற்ற சகல நன்மைச் சுரூபியும், இனியவரும், நம்மைக் கனிவோடும் பாசத்தோடும் நேசிப்பவரும், அனைவரிலும் அதிகப் பிரியமும், அதிக நேசமும் கொண்ட நம் தந்தையும், அனைவரிலும் மிகச் சிறந்த, மிக உண்மையான நண்பருமான கடவுளை நேசிப்பது அதிக எளிதான காரியம்.
அவரை நேசிக்க நமக்குத் தேவைப்படுவதெல்லாம் அவரது நன்மைத்தனத்தைப் புரிந்துகொள்வது மட்டுமே. நம் முழு இருதயத்தோடும். ஆத்துமத்தோடும், பலத்தோடும், மனதோடும் சர்வேசுரனை நேசிப்பது, முதலாவது தேவ கட்டளையும், நம் பரிசுத்த வேதத்தின் சாரமுமாக இருக்கிறது. பரிபூரண இரக்கமும், ஞானமுமுள்ள சர்வேசுரன் கடினமானதும், மிகச் சிரமமானதுமான
ஒன்றைத் தம் பரிசுத்த வேதத்தின் முதல் நிபந்தனையாக ஒருபோதும் ஆக்கியிருக்க மாட்டார்.
தங்களால் கடவுளை நேசிக்க இயலாதென்று கூறும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நேசச் செயலைச் செய்து, "என் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்லும்போது, தேவசிநேகத்தை அவர்கள் தங்கள் இருதயங்களில் உணர்வதில்லை. அவர்களுடைய வார்த் தைகள் உள்ளே வெறுமையாக ஒலிக்கின்றன.
இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன:
(1) அவர்கள் கடவுளை நேசிப்பதற்கு அவரது உதவியை அவரிடம் கேட்பதில்லை.
(2) கடவுள் யார் என்பதையும், அவருடைய மட்டற்ற நன்மைத்தனத்தையும், அவருடைய இனிமையையும், இரக்கத்தையும், நேசத்தையும் அவர்கள் உணர்வதில்லை.
(3) அவர் தங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
(4) அவர் தங்களுக்காகச் செய்துள்ள எதையும் அவர்கள் அறிவதில்லை.
உணர்ச்சிபூர்வமான ஓர் அன்பைப் பற்றியல்ல, கடவுள் எவ்வளவு நல்லவரும் இனியவருமாயிருக்கிறார் என்பது பற்றிய தெளிந்த அறிவிலிருந்து எழும் திடமான தேவசிநேகத்தைப் பற்றியே நாம் பேசுகிறோம். தேவசிநேகத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் வழிகள்: (1) ஜெபம். கடவுளின் மீது உண்மையான, உருக்கமான நேசத்தை நமக்குத் தருமாறு, ஒவ்வொரு நாளும், நாம்
சொல்லும் ஒவ்வொரு ஜெபத்திலும் அவரிடம் மன்றாடுவோமாக. இதற்காகவே நாம் செய்யும்
ஒவ்வொரு நற்செயலையும் ஒப்புக்கொடுப்போமாக. நம் காலை, மாலை ஜெபங்களிலும், நம் ஜெப
மாலையிலும், திவ்ய பலிபூசையிலும், நாம் உட்கொள்ளும் திவ்ய நன்மைகளிலும், தேவசிநேக
வரமே நமது மிகுந்த ஏக்கமுள்ள மன்றாட்டாக இருக்கட்டும். இதைத் தனிப்பட்ட விருப்பமாகவும், கருத்தாகவும் கொண்டிராத எந்த ஜெபத்தையும் நாம் ஒருபோதும் சொல்லாதிருப்போமாக.
நம் ஆண்டவர் தமது நேசத்தைப் போல வேறெதையும் அவர் நமக்கு மிகுந்த விருப்பத்தோடும், தாராளத்தோடும் தருவதில்லை. நம் விருப்பத்திற்கும் அதிகமாகவே இந்த மாபெரும் வரப்பிரசாதத்தை நமக்குத் தர அவர் விரும்புகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இடை விடாமல் அதை மன்றாடிக் கேட்பது மட்டுமே. இதைச் செய்வோம் என்றால், நம் இருதயங்கள் எவ்வளவுதான் குளிர்ந்து போயிருந்தாலும், அவை அவருடைய நேசத்தில் படிப்படியாக வளரும். தங்கள் முழு பலத்தோடும் அவை அவரை நேசிக்கும், தேவ சிநேகத்தால் நிரம்பி வழியும். அவை தேவசிநேகம் என்ற வார்த்தையின் பரிபூரணப் பொருளில் அவரை நேசிக்கும்.
(2) கடவுளை நேசிக்க, நாம் அவரை அறிய வேண்டும். அவர் அளவற்ற இனிமையும், இரக்கமும், அன்பும் உள்ள கடவுள், நம்மைத் தூக்கியெடுத்து, நம் ஆன்மாக்களிலிருந்து பாவக் கறைகளைக் கழுவிப் போக்க விரும்பும் கடவுள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை நாம் அனைவரிலும் அதிக அன்புள்ள தந்தையாகவும், அனைவரிலும் அதிகப் பிரியமுள்ள நண்பராகவும் காண வேண்டும். அவரில் நாம் மட்டற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும், நம் பிரச்சினைகள் அனைத்திலும் அவரிடமே செல்ல வேண்டும், நம் எல்லாத் தேவைகளிலும் அவருடைய உதவியை நாம் நாட வேண்டும். நாம் ஊழியர்களாக அன்றி, அவருடைய பிரியமுள்ள குழந்தைகளாக அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். நாம் கடவுளை ஆராதிக்கிறோம். ஆயினும் நேச அக்கினிச் சுவாலைகளால் பற்றியெரியும் பரலோக சம்மனசுக்களின் ஆராதனையைப் போல நம் ஆராதனை அன்பின் ஆராதனையாக இருப் பதில்லை. அவர்கள் சர்வேசுரனை அவர் இருக்கிறபடியே காண்கிறார்கள், அப்படி அவரைக் காண்பது சந்தோஷம், மகிழ்ச்சி ஆகியவற்றின் பெருங்கடலால் அவர்களை நிரப்புகிறது.
தேவதூதர்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் பரலோகத்தில் தரிசிக்கிற கடவுளை ஒரே ஒரு கணம் நாம் பார்த்தாலும் நம் ஆத்துமங்கள் எத்தகைய பேரின்பத்தால் ஆக்கிரமிக்கப்படும் என்றால், அவை நம் சரீரங்களிலிருந்து தங்களைப் பிய்த்தகற்றிக்கொண்டு அவரை நோக்கிப் பறந்தோடும். பரலோகவாசிகளைப் போலவே நாமும் விரைவில் அவரைக் காண்போம், ஆனால் தற்போதைக்கு நாம் நம் விசுவாசத்தைப் பயன்படுத்துவோம், அதை அனுபவித்து மகிழ்வோம், இவ்வாறு பரலோகப் பேரின்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.