தவக்காலச் சிந்தனைகள் 3 : புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாள் நாள் நாள் தோறும் செய்த ஒறுத்தல் முயற்சிகள்..

1. அதிக தாகமெடுத்து, தண்ணீர் அருந்தும் தேவை வரும்போதெல்லாம் உடனே நீர் அருந்தாமல், சில நிமிடங்கள் கழித்து நீர் அருந்துவாள். (இந்த ஒறுத்தல் முயற்சி நம் பாத்திமா புனித சிறுமிகளான லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் இவர்களாலும் அதிகமாக செய்யப்பட்டது).

2. தன்னுடைய மடத்துத் தலைவியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மனதால் முறுமுறுத்ததில்லை. எல்லாவற்றையும் பரித்தியாகமாக ஏற்றுக்கொண்டு, அவற்றை ஆண்டவரின் பாடுகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுப்பாள். ( நம்முடைய துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள், வாங்கும் திட்டுகள் இவற்றை ஆண்டவரின் பாடுகளோடு இனைத்து ஒப்புக்கொடுப்பது ஆண்டவருக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு பலனும் அதிகம்)

3. மிகத் தாழ்மையான வேலைகளையும் கூட புன்முறுவலோடு செய்து வந்தாள். கொடுக்கப்பட்ட வேலைகளை சிரமேற்கொண்டு சரியாகச் செய்து முடிப்பாள்.

4. மற்ற சகோதரிகள் தன்னை ஏளனமாகப் பேசினால் பொறுத்துக் கொள்வாள்.

5. தந்தையின் செல்லப் பெண்ணாய் சந்தோசமாக முன்பு வாழ்ந்திருந்தாலும், மடத்துத் தரித்திரத்தை மனதார, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, எளிய சுவையற்ற உணவுகளை எந்த முறைப்பாடுமின்றி உண்டு வந்தாள். பிறர் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவுப்பண்டங்களை மட்டும் உண்பதில் ஆர்வம் காட்டினாள்.

6. காச நோயால் வந்த கடும் வேதனைகளை மிகப்பொறுமையாய் ஏற்றுக் கொண்டாள்.

7. கடுகடுப்போ எரிச்சலோ அவளிடம் ஒரு போதும் இருந்ததில்லை. தன் மடத்து சகோதரிகளுக்கு அன்பு காட்டுவதைத் தவிர வேறு எதுவும் அவளிடமிருந்து வெளிப்பட்டதில்லை.

8. தேவாலய பீடத்தின் மீது எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்து, அதை மிக அழகாகவும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வதில் அவள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தியதில்லை.

மேலும் ஒருத்தல் முயற்சிகள் செய்ய வழிகள் ..

10. உணவை மருந்தைப் போல உண்ண வேண்டும். மருத்துவர் சொன்ன அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ யாரும் மருந்தை உட்கொள்வதில்லை. அதுபோல உணவையும் ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது ஒரு தவ முயற்சி.

11. பசிக்காக உண்பதும், ருசிக்காக உண்ணாதிருப்பதும் ஒரு தவ முயர்சி.

12. இரு உணவு வேளைகளுக்கு மத்தியில் நொறுக்குத் தீனியைத் தவிர்ப்பது ஒரு தவ முயற்சி.

13. உங்களுக்கு ஆண்டவர் எதைத் தருகிறாரோ அதைப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று பிரிக்காதீர்கள். ஆண்டவருக்குத் தரப்பட்ட கசப்பான காடியை விட அதிக கசப்பான ( நமக்குப் பிரியமில்லாத) எந்த உணவையும் ஆண்டவர் நமக்குத் தரவில்லை.

14. எப்போது எழுவது, எப்போது தூங்குவது என்பதை முடிவு செய்து கண்டிப்பாக செயல்படுத்துங்கள்.

15. சும்மா படுத்திருப்பது தீமைக்கு வழிவகுக்கும்.

16. ஏதேனும் சிறிதளவு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்து நம்மைச் சுற்றி இருப்போரை தொந்தரவு செய்யாதிருப்பது ஒரு தவ முயற்சி.

17. சுகவீனம் என்ற ஒரு நிலை வருமானால் அதை அமைந்த மனதுடனும், தாழ்மையுடனும், பொறுமையுடனும் தாங்குவது ஒரு தவ முயற்சி. ஆனால் உரிய மருத்துவம் செய்வது நம் கடமை.

18. தெருவில் எதிர்படும் ஒருவர் எவ்வளவு அழகாக இருக்கிறார், அல்லது அழகற்றவராயிருக்கிறார் என்று உற்றுப் பார்க்காதீர்கள்.

19. யாராவது உங்களைப் புகழ்ந்தால் அல்லது பிறரைப் பற்றி உங்களிடம் குறை சொன்னால் காதைப் பலமாக மூடிக்கொள்ளுங்கள்.

20. உங்கள் அருகில் இருப்பவரிடம் இருந்து நோய் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக ஒரு துர்வாடை வருகிறதென்றால் மூக்கை மூடாதீர்கள், அவரது ஆன்மா கடவுள் முன்னிலையில் மதிப்பு மிக்கது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

21. அநாவசியமாக யாரையும் தொடாதீர்கள்.

22. குளிர் காலத்திலும் சரி கோடை காலத்திலும் சரி, தரையில் படுத்தாலும் சரி பாயில் படுத்தாலும் சரி வசதி குறைவு பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள்.

23. எதிர்காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றி கற்பனை செய்யாதீர்கள். ஆண்டவரின் பராமரிப்பை முழுவதுமாக நம்புங்கள்.

நன்றி : ஆன்ம இரட்சணியத்திற்குரிய எளிய பக்தி முயற்சிகள் புத்தகம், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. சகோ. பால்ராஜ் : 9487257479

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !