தவக்கால சிந்தனைகள் 4 : பலியாகிற ஆன்மாக்களுக்கு அழைப்பு!

"இப்போது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷித்து, கிறீஸ்துவின் பாடுகளில் குறைவாயிருப்பதை, அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் மாமிசத்தில் நிறைவேற்றி வருகிறேன்" (கொலோ. 1:24).

பலியாகும் ஆன்மாக்கள் யார்?

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் ஒரு பலியாகும் ஆன்மா என்பவர் யார் என்பதைத் தமது வார்த்தைகளால் விவரித்து விட்டார். கிறீஸ்துவின் ஞான சரீரமாகிய திருச்சபைக்காக, கிறீஸ்துவின் பாடுகளை அவரோடு இணைந்து தங்களது சரீரத்தில் மகிழ்ச்சியோடு அனுபவித்து வருபவர்களே பலியாகும் ஆன்மாக்கள். அர்ச். சின்னப்பர் தாமே ஒரு பலியாகும் ஆன்மா என்பதை இதன் மூலம் தெளிவாக விவரிக்கிறார்.

பலியாகும் ஆன்மாக்கள் என்பவர்கள் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், ஆன்மாக்களை மனந்திருப்பவும் சேசுவின் பாடுகளோடு இணைந்து வேதனையும், பரித்தியாகமும் செய்ய அவரால் அழைக்கப்படு பவர்கள் ஆவர். கிறீஸ்துவின் கொடிய பாடுகளா லும், மரணத்தினாலும் அவர் சம்பாதித்த மீட்பின் பேறுபலன்கள் உலகின் கடைசி மனிதனின் இரட்சணியம் வரைக்கும் போது மானதாயிருக்கிறது. ஆனாலும், சர்வேசுர னின் அளவிட முடியாத இரக்கத்தினாலும், அறிந்து கொள்ள முடியாத பரம இரகசியத் திட்டத்தாலும் தமது பாடுகளில் - தமது மீட்பின் அலுவலில் சில தேர்ந்தெடுக்கப் பட்ட ஆன்மாக்களை அனுமதிக்கிறார். அவர்களைத் தமது மானிட சகோதரர்களின் மீட்புக்காக - மனந்திரும்புதலுக்காக தம்மோடு சேர்ந்து, தமது பாடுகளை, துன்பங் களை தங்களது அவயவங்களில் அனுபவிக்கச் சித்தம் கொள்கிறார். இதனாலேயே அர்ச். சின்னப்பர் "கிறீஸ்துநாதருடனே கூட சிலுவையிலே அறையப்பட்டவனாயிருக்கிறேன்..."

(கலாத். 2:19) என்று கூறுகிறார். இத்தகைய தயாளமான ஆன்மாக்களே "பலியாகும் ஆன்மாக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

பழைய ஏற்பாட்டில் பலிப் பொருள்!

பிறருடைய பாவங்களுக்கு நிவாரணப் பலியாக விலங்குகளைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுக்கும் வழக்கம் பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே இருந்துள்ளதை நாம் லேவிய ராகமம், 16-ம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். அன்று இளங்காளைகளையும், ஆட்டுக் கடாக்களையும் பாவப் பரிகாரப் பலியாக ஒப்புக்கொடுத்தார்கள். புதிய ஏற்பாட்டில் தேவ சுதனான கிறீஸ்து, தம்மையே உலக மக்கள் அனைவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பலியாக்கினார். அவரது பலி நித்திய சர்வேசுரனுக்கு உகந்ததாகி உலகில் மீட்பு இறங்கி வந்தது. கிறீஸ்துவின் மீட்பின் பலனின் ஊற்று பெருக்கெடுத்தோடி உலகில் பாவங்களை நிர்மூலமாக்கி, ஆதாமின் பாவ சந்ததியை மீண்டும் கடவுளோடு ஒப்புர வாக்கியது. யார் யாரெல்லாம் கிறீஸ்துவோடு ஒன்றிக்கிறார்களோ, அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அவர் சம்பாதித்திருக்கும் மீட்பின் பலனின் சுனையில் அருந்தும் பாக்கியம் பெறுகிறார்கள். இதுவே நமது விசுவாசம்.

பலியாகும் ஆன்மாக்கள் - துணை மீட்பர்களாகிறார்கள்.

கிறீஸ்துவின் மீட்பின் பேறுபலன்கள் ஆன்மாக்களைச் சென்றடைய திருச்சபையின் தேவத் திரவிய அனுமானங்களை ஏற்படுத்திய சர்வேசுரன், அவற்றைப் பெற்றுக் கொள்ள ஆன்மாக்களைப் பயன்படுத்தச் சித்தமாகிறார். கெட்டுப் போன - பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் சுயாதீனமுள்ள ஆன்மாக்களைத் தமது மீட்பின் பேறுபலன்களின் சுனைக்குக் கொண்டு வர தமக்குப் பிரமாணிக்கமுள்ள ஆன்மாக்களைப் பயன்படுத்துகிறார். அவர்களைக் கெட்டுப் போன - பாவத்தில் உழலும் தங்கள் மானிட சகோதரர்களுக்காகத் துன்பப்பட அழைக்கிறார். கிறீஸ்து தாம் தமது திருச் சரீரத்தில் அனுபவித்த பாடுகளின் சிறு பாகத்தை அவர்களும் தங்கள் அவயவங்களில் அனுபவிக்க அனுமதிக்கிறார். இதன் மூலம் மன்னிப்பின் வரப்பிரசாதங்களை அவர்கள் மூலமாய்க் கொடுத்து, பாவிகளை மனந் திருப்புகிறார். இதற்கு பலியாகும் ஆன்மாக்களைப் பிணையாகத் தம்மோடு நிறுத்தி, தண்டனையைக் கேட்கும் தேவ நீதியை சாந்தப்படுத்தி, அவர்களையும் மீட்பின் பேறுபலன்களைப் பெறச் செய்து, இரட்சிக்கிறார். இதனை விளக்கும்படி யாகத்தான் அர்ச். சின்னப்பர் "... கிறீஸ்து வின் பாடுகளில் குறைவாயிருப்பதை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் மாமிசத்தில் நிறைவேற்றி வருகிறேன்" என்று கூறுகிறார். ஆக, பலியாகும் ஆன்மாக்கள் சேசுவுடன் பிணைநிற்கும் ஆன்மாக்கள், அவர்கள் சேசுவுடனான துணை மீட்பர்கள்.

பலியாகும் ஆன்மாக்களுக்கு சேசுவின் அழைப்பு!

திருச்சபையின் வரலாற்றிலே துவக் கத்திலிருந்து இன்று வரை அவ்வப்போது - காலங்களில் எண்ணற்ற ஆன்மாக்கள் சேசுவின் பலியாகும் ஆன்மாக்களாகத் துணைபுரிய அழைக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பிந்திய காலம் என்று அழைக்கப்படும் நமது 20-ம் மற்றும் 21-ம் நூற்றாண்டுகளில் பலியாகும் ஆன்மாக்களின் தேவை அதிகமாகிறது. ஏனெனில் உலகில் பாவம் மிஞ்சி தேவ கோபம் உலகில் இறங்கி வரும் நிலை இன்று உள்ளது. இக்காலங்களில் தமது தாய் மரியாயின் மாசற்ற இருதயத்தை நமக் குப் பாதுகாவலாகக் கொடுத்தாலும், சர்வேசுரன் பலியாகும் ஆன்மாக்களையும் அழைக்கிறார். 1901-ல் அர்ச். ஜெம்மா கல்கானியிடம்,

"எனது மகளே, எனது தெய்வீகப் பிதாவின் கோபத்தை அமர்த்துவதற்கு எனக்குப் பலிப் பொருட்கள் தேவை - உறுதியான பலியாகும் ஆன்மாக்கள் தேவை. தங்களது துயர சோதனைகளாலும், பரித்தியாகங்களாலும் பாவிகளை அவர்களது நன்றிகெட்டதனத்திலிருந்தும், பாவ வாழ்விலிருந்தும் மனந்திருப்பிக் கொண்டு வர எனக்கு ஆன்மாக்கள் தேவை. ஆ! இந்த அசுத்த உலகால் எனது நித்திய பிதா எவ்வளவு சினமடைந்துள்ளார் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள முடிந்தால்...!" என்று சேசு வேதனையோடு கூறியதை 1901-ம் ஆண்டில் கேட்டோம். அன்றே உலகத்தின் நிலை அப்படியிருந்தால், இன்று 2021-ல் இன்றைய உலகின் நிலையைக் கேட்கவே வேண்டாம்! உலகம் எந்த நேரத்திலும் தேவ நீதியால் தண்டிக்கப்பட முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆகவே, உலகின் பரிதாபமான நிலையைக் கருதி, பலியாகும் ஆன்மாவாக நமதாண்டவர் அழைக்கும் அழைப்பிற்கு கத்தோலிக்க விசுவாச மக்கள் செவிமடுக்க வேண்டும். குறிப்பாக மாதாவின் அப்போஸ்தலர்கள் சேசுவின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வார்களாக! பலியாகும் ஆன்மா என்றால் கடினமான உடல் நோய் - துன்ப, துயர, வருத்த, வேதனைகளை, இழப்புகளை அனுபவிக்க வேண்டுமே என்று அஞ்ச வேண்டாம். அவற்றை நமதாண்டவர் சித்தம் கொண்டால், அவற் றிற்கான சக்தியையும், தாங்கும் வரப் பிரசாதங்களையும் தருவார். அந்தக் கடின வாழ்வு அர்ச்சிஷ்டதனத்திலும், வீர வைராக்கிய விசுவாசத்திலும், தேவ சிநேகத்திலும் உச்சத்தை அடைந்த (பெரிய) ஆன்மாக் களுக்கு உரியது! ஆனால் எளிய மக்களான நமக்கு, பாத்திமாவில் மாதா கேட்டுக் கொண்டபடி நமது வாழ்வில் - நமது கடமைகளைச் செய்வதில் நேரிடும் வருத்தங்கள், துன்பங்களை சேசுவின் அன்பிற்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஏற்று ஒப்புக் கொடுப்பது என்பதே போதும். அதுவே நம்மையும் பலியாகும் ஆன்மாவாக வளரச் செய்யும்!