தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயம் உருவான வரலாறு டச்சுக்காரர்களின் வருகை தொகுப்பு பகுதி -3 ( இறுதி பகுதி )

1655-ம் ஆண்டில் டச்சுப் படையின் தளபதியாக இருந்த வன்கோவன்ஸ் என்பவர் போர்த்துக்கீசியப் படையினரை தோற்கடித்துத் தூத்துக்குடியைக் கைப்பற்றினார். இதனால் போர்த்துக்கீசியப் படை வீரர்கள் தூத்துக்குடி மற்றும் கடுலோர ஊர்களிலிருந்து வெளியேறினர். முத்துக்குளித்துறை முழுவதும் டச்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அடுத்து வந்த டச்சுத் தளபதி வன்ரீஸ் என்பவர் தூத்துக்குடியின் பிரதான பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் எழுப்பினார். இப்போது புனித இராயப்பர் ஆலயமும், இயேசு சபையினரின் தலைமை இல்லமும், அதனைச் சேர்ந்த பனிமய மாதா ஆலயமும் டச்சுக் கோட்டைக்குள்ளேயே இருந்தன. எனவே டச்சுப் படையினர் புனித இராயப்பர் ஆலயத்தைத் தங்களின் தங்கும் விடுதியாக மாற்றினர். உள்ளே போர்க் கருவிகளையும் குவித்து வைத்தனர். பனிமய மாதா ஆலயத்தைத் தங்களின் கால்வீனிய வழிபாட்டுத் தலமாக மாற்றினர். இந்நிலையில் புனித பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை சிவந்தாகுளம், கொற்கை போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று அதனை மக்கள் பாதுகாத்து வந்தனர்.  டச்சுக்காரர்கள் தூத்துக்குடி வாழ் மக்களைத் தங்களின் கால்வீனிய மத வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு பலவந்தப்படுத்தினர். இந்த முயற்சியில் தோல்வி கண்டதால் கோபமடைந்த டச்சுப் படை வீரர்கள், முத்துக் குளித்துறை ஊர்களில் பணியாற்றி வந்த இயேசு சபைக் குருக்களை கடுலோர ஆலயங்களிலிருந்து வெளியேற்றி உள் நாட்டுப் பகுதிகளுக்கு விரட்டியடித்தனர். மேலும் நாகப்பட்டினம், வேம்பாறு, வைப்பாறு, மணப்பாடு போன்ற ஊர்களிலிருந்த மாதா ஆலயங்களை இடித்துத் தரைமட்டுமாக்கினர். இறுதியில் தூத்துக்குடியில் டச்சுக் கோட்டைக்குள்ளிருந்த இயேசு சபைத் தலைமை இல்லத்தையும், அதனோடு இணைந்த பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டுமாக்கி, அந்த இடத்தைத் இறந்தோரை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டமாக மாற்றினர். இதுவே இன்று வரை “கிரகோப்” என்று அழைக்கப்படுகிறது. “கிரகோப்” என்றாலே டச்சு மொழியில் கல்லறைத் தோட்டம் என்று பொருள்.

புதிய கற்கோவில் அமைந்த தொகுப்பு

மீண்டும் 1699-ம் ஆண்டில் தூத்துக்குடியில் புதிய இடிக்கப்பட்ட ஆலயங்களையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதி அளித்தனர் டச்சுக்காரர்கள். அச்சமயத்தில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக இருந்த இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி என்பவர், டச்சுக்கதாரர்களால் வெளியேற்றப்பட்டு தூத்துக்குடிக்கு வெளியேயுள்ள துப்பாஸ்பட்டி என்ற இடத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியாரின் பெயரால் ஒரு குடிசைக் கோவிலும், பங்கு இல்லமும் அமைத்து பணி செய்து வந்தார். டச்சுககாரர்களின் அனுமதிக்குப்பின் அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே மிகவும் எளிய முறையில் ஒரு பங்கு இல்லத்தை அமைத்து அங்கே குடியிருந்தார். சீர்குலைந்து கிடுந்த புனித இராயப்பர் ஆலயத்தையும் கட்டியெழுப்பினார். அது மீண்டும் தூத்துக்குடியின் பங்கு ஆலயமாக மாறியது. கொற்கையில்  இருந்த பனிமயத் மாதாவின் சுருபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனைத் தனது பங்கு இல்லத்தின் மேல்மாடியில், பெட்டுகப் பீடம் (almare) ஒன்று செய்து, அதன் உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்தார்.  1707-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் இடியும், மின்னலும் கூடிய பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி அன்னையின் சுருபமிருந்த பெட்டகப் பீடத்தின் முன் மண்டியிட்டு ஜெபித்துக்கொண்டிருந்த போது அவ்வில்லத்தின் கூரையைக் கிழித்துக் கொண்டு பயங்கரமான ஓர் இடி பனிமய அன்னையின் சுருபத்தின் மீது விழுந்தது. அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி இடியின் அதிர்ச்சியில் உணர்வற்றுப் போனார். அவர் மீண்டும் தனது சுய நினைவுக்கு வந்ததும், அன்னையின் சுருபத்தின் மீது இடி விழுந்தும் அது யாதொரு சேதமுமின்றி அப்படியே இருந்ததாகவும் இடியின் கந்தகப் புகையால் மட்டும் அது கருநீல நிறமாக மாறியிருந்ததாகவும் கூறுவர். மேலும் சுருபத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தும் அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி இடியிலிருந்து தாம் உயிர் தப்பி பிழைத்திருப்பது அன்னை செய்த அற்புதமாக நம்பினார். அங்கு விழுந்த இடியானது அவர் சுவரில் தொங்க விட்டிருந்த சில புனிதர்களின் படங்களையும், கதவு நிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இதானால் பனிமய அன்னைக்குப் பெரிய புதியதோர் கற்கோவிலை எழுப்ப அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி அன்றே தீர்மானித்தார்.  இடியினால் கறை படிந்து போன அன்னையின் அற்புத சுருபத்தை மக்களின் பார்வைக்கு வைக்கும்படியாக அருட்தந்தை அதனை மாடியிலிருந்து கீழே இறக்கி புனித இராயப்பர் ஆலயத்தில் வைத்தார். பனிமய மாதாவுக்குப் புதிதாக கற்கோவில் அமைக்கும் தனது திட்டத்தை அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி உடனடியாக செயல்படுத்த முனைந்தார். இடிவிழுந்த அதே இடத்திற்கு நேர் எதிலே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார். கற்கோவில் எழுப்ப டச்சுத் தளபதியிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் போர்க் காலங்களில் எதிரிகள் கோவிலை அரணாகப் பயன்படுத்தக்கூடும் என அஞ்சியதால் ஆலயத்தைக் கற்களால் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அருட்தந்தை விஜிலியுஸ் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு கடிதம் எழுதி, அதில் புதிய ஆலயத்தின் அளவுகளைத் குறிப்பிட்டு, அதனை கற்களால் கட்டுவதற்கு அனுமதி வேண்டினார். டச்சு ஆளுனரும் புதிய ஆலயத்தை கற்களால் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.

இறுதியில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி பனிமய அன்னையின் புதிய கற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலயத்தின் கட்டிட வேலைகள் வேகமாக நடந்து ஒரே ஆண்டில் ஆலய வேலை முற்றுப் பெற்றது. ஆலயக் கூரையில் கனரா ஓடுகளும் பதிக்கப்பட்டன.  இந்த முதல் கற்கோவில், 1713-ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி, பனிமய மாதாவின் திருவிழா என்று இவ்வாலயம் திறந்து வைக்கப்பட்டது. இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் அருட்தந்தை எம்மானுவேல் பெரைரா இப்புதிய ஆலயத்தை அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அங்கு முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றினார்.

1982-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவ்வாலயத்தைப் “பேராலயம்” (Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்

சிந்தனைக்கு

இன்று தூத்துக்குடியில் வாழும் சகல மக்களுக்கும் மட்டும் இன்றி உலகிற்க்கே அன்னையாக  திகழும் எங்கள் தூய பனிமய தாயே வற்றாத உம் தாய் அன்பில் என்றும் எங்களை காத்துக்கொள்ளும் அம்மா எங்கள்

 பனிமைய தாயே  தஸ்நேவிஸ் மாமரித்தாயே பாவிகள் எங்களை கண்னோக்கி பாருங்கள் அம்மா 

முற்றும்

இயேசுவுக்கே புகழ்  ! மாமரித்தாயே வாழ்க