தவக்கால சிந்தனைகள் 28 : ஆண்டவருடைய சிலுவைப்பாதை... வேதனைப் பயணம்... கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து... அவருடைய வேதனைப் பயணம் தொடங்குகிறது...

அவருடைய வேதனைப் பயணம் தொடங்குகிறது...

சேசு கைது செய்யப்பட்ட திறந்த வெளியிலிருந்து கெதிரோன் ஓடைக்குப் போகிற கல் பதித்த முடுக்குப் பாதை வழியாகப் புறப்படுகிறது. அதன் பின் இன்னொரு தெரு வழியாக ஜெருசலேம் பட்டணம் நோக்கிப் போகிறது. இகழ்ச்சிப் பரிகாசங்களும், சித்திரவதைகளும் உடனே ஆரம்பமாகின்றன.

ஒரு ஆபத்தான பைத்தியக்காரனைப் போல் சேசு கட்டப் பட்டிருக்கிறார். அவருடைய மணிக்கட்டுகளும் அவருடைய இடுப்பும்கூட கயிறுகளால் கட்டப்பட்டிருக்கின்றன. பகை முற்றி வெறி கொண்டவர்களிடம் கயிற்றின் நுனிகள் கொடுக்கப் பட்டுள்ளன. நாய்க்குட்டிகளின் கோபத்திற்கு விடப்பட்டு விட்ட கந்தல் துணியைப் போல சேசு இங்குமங்கும் சுண்டியிழுக்கப் படுகிறார். இப்படி நடந்து கொள்கிறவர்கள் நாய்களாயிருந்தால் அவர்களை மன்னித்து விடலாம். ஆனால் அவர்கள் மனிதர்கள்.

அவர்களிடம் மனித தோற்றம்தான் இருக்கின்றது. அவருக்குக் கூடுதலான வேதனையைக் கொடுக்க வேண்டுமென்றே இப்படி ஒன்றுக்கொன்று எதிராக கயிறுகளால் அவரைக் கட்டத் தீர்மானித்தார்கள். ஒரு கயிறு அவருடைய மணிக்கட்டுகளை மேலும் இறுக்க மட்டுமே பயன்படுகிறது. அது மணிக்கட்டுகளை முரடாக உராய்ந்து அறுத்து உட்செல்கிறது. அவருடைய இடுப்பைச் சுற்றிய கயிறு அவருடைய முழங்கைகளை நெஞ்சுக் கூட்டோடு அழுத்தி, மேல் அடிவயிற்றை நசுக்கி அவருடைய ஈரல், சிறுநீரகங்களை வேதனைப்படுத்துகிறது. அந்த இடத்தில் ஒரு பெரிய கயிற்று முடிச்சு உள்ளது.

கயிறுகளைப் பிடித்திருக்கிறவர்கள், அதே இடத்தில், கயிற்றாலேயே அடிக்கிறார்கள். “ஏய்! நட! தொலையடா! எவ்வி நட கழுதை!” என்று சொல்லியபடியே உதைக்கிறார்கள். முழங்கால்களின் பின்புறமாக அடிக்கிறார்கள். சேசு நிலை தடுமாறுகிறார். அவர் கீழே விழாதிருப்பது, இரண்டு கயிறுகளும் அவரை இழுத்துப் பிடித்திருப்பதனால்தான். ஆனால் சித்திரவதைப்படுகிற சேசு தாழ்ந்த சுவர்கள் மேலும், அடிமரங்கள் மீதும் மோதுகிறார்.

மணிக்கட்டின் கயிற்றைப் பிடித்திருக்கிறவன் வலது புறமாய் இழுக்க, இடுப்புக் கயிற்றை மற்றவன் இடப்புறமாய் இழுக்கிறான். அவர்கள் கெதிரோன் பாலத்தைக் கடந்து வரும்போது ஒரு கயிற்றை அதிக வலுவாக வெட்டியிழுத்ததால் சேசு பாலத்தின் கைப்பிடிச் சுவரில் கனமாக மோதி விழுகிறார். அதிலே காயப்பட்ட அவருடைய வாயிலிருந்து இரத்தம் வடிகிறது. சேசு தம் தாடியை நனைக்கும் இரத்தத்தைத் துடைக்க கட்டுண்டிருக்கும் தம் கைகளைத் தூக்குகிறார். அவர் எதுவும் பேசவில்லை. தன்னை வதைப்பவனைக் கடியாத மெய்யான செம்மறி அவரே.

இதற்கிடையில் சிலர் ஓடையின் படுகையிலிறங்கி கூழாங்கற்களையும் வேறு கற்களையும் எடுத்து கீழே நின்றபடியே சேசு மேல் எறிகிறார்கள். அந்த ஒடுக்கமான பாதுகாப்பில்லாத சிறிய பாலத்தில் ஜனக்கூட்டம் ஒருவரையொருவர் தடுப்பதால் மெதுவாகவே நகருகிறது. எறியப்பட்ட கற்கள் சேசுவின் சிரசையும், தோள்களையும் தாக்குகின்றன. சேசுவை மட்டுமல்ல, அவரை வதைக்கிறவர்களையும் அவை தாக்குகின்றன. அவர்கள் கம்புகளையும் அதே கற்களையும் திருப்பி வீசுகிறார்கள். அதனால் சேசுவின் தலையிலும் கழுத்திலும் அடிபடுகிறது.

அதற்குள் பாலத்தின் மறுகரைக்கு வந்து சேருகிறார்கள். அந்த ஒடுங்கிய சந்தில் வரவும் அதன் நிழல் அந்த சச்சரவுக் கும்பலின் மேல் படிகிறது. ஏனென்றால் அஸ்தமிக்கப் போகிற நிலாவின் வெளிச்சம் வளைவான இச்சந்தில் புகமுடியவில்லை. மேலும் பல கைப்பந்தங்களும் அந்தக் குழப்பத்தில் அணைந்து விட்டது. அதனால் பகையானது பரிதாபத்திற்குரிய வேதசாட்சியைப் பார்க்கும் வெளிச்சமாக ஆகிறது. அவருடைய உயரமான உருவத்தின் காரணமாகவும் அவர் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறார். அவர்கள் அனைவரிலும் அவரே உயரமாயிருக்கிறார்.

அதனால் அவரை அடிக்கவும் அவருடைய தலைமுடியைப் பிடித்து வலுவந்தமாய் அவர் சிரசை பின்னோக்கி இழுக்கவும், அந்தச் சிரசிலே கை நிறைய அசுத்தங்களை அள்ளிப் போடவும் அவர்களுக்கு எளிதாயிருக்கிறது. அந்த அசுத்தங்கள் அவருடைய வாய்க்குள்ளும் கண்களுக்குள்ளும் போய் விழுகின்றன. அவருக்குக் குமட்டலையும் வேதனையையும் வருவிக்கின்றன.

இப்பொழுது அவர்கள் ஓபெல் என்னும் புறநகர்ப் பகுதி வழியாகப் போகிறார்கள். அங்கே சேசு எவ்வளவோ நன்மைகள் செய்து எவ்வளவோ அன்பு காட்டியிருந்தார். இவர்களின் பெரிய சத்தமும் கூச்சலும் ஜனங்களுக்கு விழிப்பை உண்டாக்கி, அவர்கள் கதவுகளுக்கு ஓடி வருகிறார்கள்.

பெண்கள் துயர ஓலம் எழுப்பியபடி என்ன நடக்கிறதென்று கண்டதும் பயந்து ஓடிப் போகிறார்கள். சேசுவால் குணப்படுத்தப்பட்டு உதவி பெற்று அன்பான வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்டிருந்த ஆண்கள், நிர்க்கவலையாய்த் தலைகளைக் கவிழ்ந்து கொள்கிறார்கள். அவரோடு தங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது போல் பாவனை காட்டுகிறார்கள்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479