தவக்கால சிந்தனைகள் 29 : ஆண்டவருடைய சிலுவைப்பாதை.. வேதனைப்பயணம் தொடர்கிறது.. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து..

சேசுவால் குணப்படுத்தப்பட்டு உதவி பெற்று அன்பான வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்டிருந்த ஆண்கள், நிர்க்கவலையாய்த் தலைகளைக் கவிழ்ந்து கொள்கிறார்கள். அவரோடு தங்களுக்குச் சம்பந்தம் இல்லாதது போல் பாவனை காட்டுகிறார்கள். அல்லது, வினோதப் பிரியத்திலிருந்து அவர் மீது பகையுணர்வுக்கு வந்து ஏளனமாக இகழ்ச்சிப் பார்வை பார்க்கிறார்கள். பயமுறுத்தும் சயிக்கினைகளைச் செய்கிறார்கள். அல்லது, அவரை வதைப்பதற்காக அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போகிறார்கள். ஏற்கெனவே சாத்தான் அலுவலாயிருக்கிறான்...

ஒரு கணவன் சேசுவை நிந்திப்பதற்காக அவரைப் பின்தொடர்ந்து போக வேண்டுமென்கிறான். அவன் மனைவி ஓலமிட்டபடி அவனைப் பிடித்து நிறுத்தி:

“கோழை மனிதா, உம்முடைய உயிரே அவர் தந்த பிச்சையல்லவா? அழுகல் நிறையும் அசுத்தனே, அதை நினைத்துப் பாரும்” என்கிறாள். ஆனால் அம்மனிதன் அவளை மேற்கொண்டு, மிருகத்தனமாய் அவளை அடித்துத் தரையில் தள்ளிவிட்டு ஓடிப் போய் வேதசாட்சியின் தலையை ஒரு கல்லால் அடிக்கிறான்.

ஒரு வயதான ஸ்திரீ, தன் மகன் கழுதைப் புலி போல் விழித்து சேசுவை அடிக்க கையில் கழியுடன் ஓடுவதைத் தடுக்க முயல்கிறாள். அவள் அவனைப் பார்த்து:

“என் உயிர் இருக்கும் வரை இரட்சகரின் கொலைகாரனாக நீ இருக்க நான் விட மாட்டேன்” என்று கத்துகிறாள். ஆனால் அவன் அவளை அடிவயிற்றில் மூர்க்கத்தோடு உதைத்துவிட, அவள்:

“கடவுள் கொலை! தாய்க் கொலை! என் உதரத்தை இரண்டாம் தடவையாகக் கிழித்து மெசையாவைக் காயப் படுத்துவதற்காக நீ சபிக்கப்படுவாய்” என்று கூறி தரையில் சுருண்டு விழுகிறாள்.

கூட்டம் பட்டணத்தை நெருங்க நெருங்க அதன் வன்முறைகள் அதிகமாகின்றன.

அவர்கள் இன்னும் மதில்களுக்கு வந்து சேருமுன்பே வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன. உரோமை போர்ச் சேவகர்கள் முழு ஆயுத பாணிகளாய் நின்று இக்குழப்பம் எங்கே எப்படி உருவாகி வருகிறதென்று கவனிக்கிறார்கள். உரோமையின் கெளரவம் பாதிக்கப்பட்டால் உடனே தலையிடத் தயாராக இருக்கிறார்கள். அங்கே இராயப்பருடன் அருளப்பர் காணப்படுகிறார்.

நான் நினைக்கிறேன், அவர்கள் ஒரு குறுக்குப் பாதை வழியாக கெதிரோனை அதன் பாலத்திற்கு வராமல் முன்கூட்டியே கடந்து ஜன நெருக்கடியால் மெல்ல வரும் கூட்டத்திற்கு முந்திக் கொண்டு ஓடி வந்திருக்க வேண்டும். பட்டணத்தின் மதில்களுக்கு முன்பாக இருக்கிற ஒரு சிறிய சதுக்கத்தின் பக்கத்திலிருக்கிற அரை வெளிச்சமுள்ள ஒரு முற்றத்தில் நிற்கிறார்கள். அவர்கள் தங்கள் முகங்களை மறைக்கும்படி மேல் வஸ்திரங்களால் தலையை மூடியிருக்கிறார்கள். சேசு அந்த இடத்திற்கு வந்தபோது அருளப்பர் தன் மேல் வஸ்திரத்தை நீக்கி மெலிந்து கலங்கிய தம் முகத்தை தெளிவான நிலா ஒளியில் காட்டுகிறார். நிலா வெளிச்சம் அந்த இடத்தில் இன்னும் உள்ளது. பட்டணம் மதிலுக்கப்பாலுள்ள குன்றில் அது மறையும். அந்தக் குன்றின் பெயரை தோபெட் என்று சேசுவைக் கைது செய்த முரடர்கள் சொல்லக் கேட்டேன்.

இராயப்பர் தன் முகத்தைக் காட்டத் துணியவில்லை. ஆனால் தான் காணப்படும்படி முன்வருகிறார்.

சேசு அவர்களைப் பார்க்கிறார்... அளவில்லா கருணையோடு சிறுநகை புரிகிறார். இராயப்பர் திரும்பி முந்திய இருண்ட மூலைக்குப் போகிறார். அவர் தம் கைகளால் தம் கண்களை மூடி கூனிப் போய் வயது சென்றவர் போல் சோர்வுற்ற உள்ளத்தோடிருக்கிறார். அருளப்பர் திடமாக தாம் இருந்த இடத்திலேயே இருக்கிறார். கூச்சலிடும் கும்பல் கடந்து போன பிறகே இராயப்பரிடம் வருகிறார். இராயப்பரை முழங்கையில் பிடித்தபடி ஒரு சிறுவன் தன் பார்வையற்ற தகப்பனை வழிநடத்துவது போல் நடத்திக் கொண்டு போகிறார். அவர்கள் அந்தக் கூட்டத்தின் பின்னால் பட்டணத்திற்குள் செல்கிறார்கள்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479