“ நாம் தண்டிக்கப்படுவது முறையே “
லூக்காஸ் 23 : 41
நாம் தண்டிக்கப்படுவது முறைதானே... ஏனெனில்...
“ ஆண்டவரே இரக்கமாயிரும்... ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்...
இரக்கமாயிரும்... “
இந்த புனித வாரத்தில் ஆண்டவருடைய திருப்பாடுகளை இன்னும் அதிகமாக.. ஆண்டவருக்கு நெருக்கமாக அமந்து தியானிப்போம். அதே வேளையில் நாம் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துவோம். மனஸ்தாப வரமே ஒரு பெரிய பொக்கிஷம்..
“ நான் என்ன பெரிசா..பாவம் செய்து விட்டேன்.. " என்று ஒருவர் நினைத்து தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தாமல் இருந்தால் அவர் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்...
ஆண்டவருடைய இரக்கம் ரொம்ப பெரியது... தன் இன்னுயிர் தன்னை விட்டு கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறது.. வேதனையின் விளிம்பில் இருக்கிறார்.. ஆனால் அப்போது கூட அவரால் ஒரு பாவியை மீட்க முடிகிறது.. அவரை நோக்கி மன்றாடும் மன்றாட்டுக்கள் கேட்கப்படுகிறது... என்றால் அதற்கு யார் காரணம்..
அந்த நல்ல கள்ளனும் சாகத்தான் போகிறான்.. அவனுக்கு இரண்டு தண்டனைகள் காத்திருக்கிறது...ஒன்று மனிதனால் கொடுக்கப்படப் போகிறது... இன்னொன்று கடவுளால் கொடுக்கப்படுவது அவன் செத்தால் நரகம்தான் போக வேண்டும்...
ஆனால் அந்த நிலையில் முதலில் ஆண்டவர் யார் என்பதை கண்டு கொண்டான் அதற்கு அடுத்து தான் யார் என்பதையும் கண்டு கொண்டான்.. பாருங்கள் அவன் பேசிய வார்த்தைகளை,
“ கடவுள் மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகியிருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே.. ஏனெனில் நம் செயல்களுக்கான தண்டனையைப் பெறுகிறோம்..அவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை..”
லூக்காஸ் 23 : 41
பாருங்கள்... பிலாத்து, தலமைக்குருக்கள், பரிசேயர், சதுசேயர் கண்டுபிடிக்காததை.. ஒரு கள்ளன் கண்டுபிடித்து விட்டான்..
“ அவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதை.. மேலும் அவன் வார்த்தைகள்,
“ இயேசுவே ! நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவு கூறும் “
ஏப்பேர்பட்ட விசுவாச அறிக்கை... தன்னோடு அறையப்பட்டிருப்பவர் ஆண்டவர்...கடவுள் என்பதை அவன் கண்டுபிடித்து விட்டான்.. ஆண்டவருடைய சீடர்கள் அவர்கள் அருகிலே இருந்தும் கண்டுபிடிக்க முடியாததை ஒரு கள்ளன் தன்னருகில் இருப்பவர் கடவுள் என்பதை கண்டுபிடித்து விட்டான்.
அதற்கு ஆண்டவர் கொடுத்த பரிசு...
“ இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய் “ – லூக்காஸ் 23 : 43
பரிசு.. மோட்சம் அதுவும் நேரடி மோட்சம். உனக்கு உத்தரிக்கும் ஸ்தலம் கூட தேவையில்லை என்று..அதுவும்.. தன்னோடு மோட்சத்திற்கு வா என்று சொல்லிவிட்டார்.. கள்ளன் கடைசி நேரத்தில் ஆண்டவரைக் கண்டு கொண்டதால் புனிதன் ஆகிவிட்டான்.. மோட்ச பாக்கியத்தை சம்பாதித்து விட்டான்.
(ஆனால் இன்று எத்தனை பேர் ஆண்டவர் அருகில் இருந்தும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.. இருக்கிறோம்..)
அதற்கு என்ன காரணம் ?நல்ல கள்ளன் தான் பாவி என்று உணர்ந்தான்... மனம் வருந்தினான். தன்னுடைய சிலுவை வேதனையையும் மரணத்தையும்.. தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொண்டான்.. கடைசி நேரத்தில் பாஸ் மார்க்க வாங்கி பாஸாகி மோட்சத்திற்கே சென்று விட்டான்..
ஆனால் நாம் எப்படி இருக்கிறோம்.. நாம் செய்வதை,
பாவம் என்று உணர்கிறோமா?
அச்செயல் தீயதுதான் என்று நம் மனம் உறுத்துகிறதா?
நாம் நம் மனச்சாட்சியில் குரலுக்கு செவி மடுக்கிறோமா?
மனம் மரத்துப்போனாதால் “ இது பாவம் “ என்ற குற்ற உணர்வின்றி வாழ்கிறோமா…?
மனஸ்தாபமின்றி மன்னிப்பு இல்லை… அதே போல் ஆண்டவர் ஏற்படுத்திய திருவருட்சாதமான “ பாவசங்கீர்த்தனம் “ இன்றி மன்னிப்பு இல்லை…
இது நம் பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் நேரம்… மன்னிப்பு கேட்கும் நேரம்.. மன்னிப்பு பெரும் நேரம்…
ஒரு பாவமும் செய்யாத மாசற்ற செம்மறியான நம் பரிசுத்த பரமனின் பரிசுத்த இரத்தத்தால் நாம் கழுவப்படும் நேரம்..
“ ஆனடவருடைய பாடுகள் நமக்கானது… அவரது திரு இரத்தம் நம் பாவங்களுக்காக சிந்தப்பட்டது.. “
எத்தனையோ புனிதர்களை நாம் உதாரணமாக எடுக்கும் போது இந்த நல்ல கள்ளனையும் ஏன் உதாரணமாக எடுக்கக்கூடாது…?
“ ஏன்… நாம் தண்டிக்கப்படுவது முறையே… எனெனில் நாங்கள் பாவம் செய்தோம்… ஆண்டவரே… இரக்கமாயிரும்…"
எங்கள் பெயரில் தயவாயிரும்.. சுவாமி…எங்கள் பெயரில் தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !