பாவசங்கீர்த்தனம்: கத்தோலிக்கத்தின் பொக்கிஷம்…

(இன்று தலைவெள்ளி ஒரு சந்தி சுத்தபோசனம் கடைப்பிடிப்போம்)

பாவசங்கீர்த்தனம் என்னும் இந்த தேவ திரவிய அனுமானத்தை நம் சேசு நாதர் சுவாமி ஏற்படுத்தவில்லை என்றால் கோடிக்கணக்கான ஆன்மாக்கள் நரகத்தில் விழுந்திருப்பது உறுதி..

நரகம் எப்படி இருக்கும் என்று பல்வேறு புனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்.பல்வேறு புனிதர்கள் தங்கள் காட்சியில் கண்டிருக்கிறார்கள்.. சில புனிதர்களை கடவுளே நரகத்தை சுற்றிப்பார்க்க கூட்டி சென்றிருக்கிறார்..

இறுதியாக பாத்திமாவின் புனித சிறுமிகளான லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தாவுக்கு நம் தேவமாதாவே நேரடியாக காட்சி கொடுத்து பூமியை பிளந்து நரகம் எப்படி இருக்கும் என்று இந்தக் குழந்தைகளுக்கு காட்டியிருக்கிறார்கள் (பாத்திமா காட்சிகள் பக்கம்-61, மாதாவின் மூன்றாம் காட்சி (ஜுலை 13, 1917)

(கடவுள் கொடுத்த இறுதி உபாயம், எச்சரிக்கை, வாய்ப்பு எல்லாமே இந்த பாத்திமா காட்சியில்தான் இருக்கிறது.. அது உதாசீனப்படுத்தப்படுவது அல்லது சரியாக வலியுறுத்தப்படாதது நல்லதல்ல)

இப்படி நரகத்தைப் பற்றி பல காட்சிகள் இருந்தாலும் நரகம் எப்படி இருக்கும் என்பதை ஒரே வரியில் சொல்லலாம்.. அந்த வரியே நரகம் எவ்வளவு பெரிய பயங்கரம் என்று புரிய வைக்கும்..

“ நரகம் என்பது கடவுள் இல்லாத இடம் “

இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறா?

கடவுள் இல்லாத இடம் என்பது எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடிகிறதா?

நம் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு அது அதி பயங்கரம்..

ஓரு நொடிப்பொழுது கூட கடவுள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது; வாழவும் கூடாது..

இப்போது இதை ஒரே வரியில் சேசு நாதர் சுவாமியே சொல்லிவிட்டார்..

“ உங்களுக்குள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும் “

மத்தேயு 6 : 23

இதைவிட நரகம் எப்படியிருக்கும் என்று யாரும் சொல்லிவிட முடியாது..

ஆக இந்த கொடுமையான நரகத்திற்கு நாம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்..

உன்னத மகிமையில் பிதாவோடு மகிழ்ச்சியாக இருந்த சுதனான சர்வேசுவரன் நமக்காக மனிதனாக பிறந்து தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி சொல்லிடங்கா பாடுகள் பட்டு நம்மை மீட்டார்.

அப்படி இருக்கும்போது..

அந்த நரகத்தைப்பற்றிய பயம் நமக்கு இருக்க வேண்டாமா?

நாம் ஒருக்காலும் அந்த இடத்திற்கு சென்றுவிடக்கூடாது என்ற ஒரு எச்சரிக்கை உணர்வு நமக்கு இருக்க வேண்டாமா?

தாம் பாடுபட்டு இந்த மக்களை மீட்டாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் பாவம் செய்வார்கள்… அவர்களை எப்படிக்காப்பாற்றுவது..

என்று நம் இரக்கமுள்ள இறைவன்நினைத்துதானே இந்த பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்தினார்…

ஒரு மனிதன் கிறிஸ்தவனாக பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. அதிலும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாக அவன்(ள்) ரொம்பவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

அப்படியிருந்தும் நாம் அதை அலட்சியப்படுத்தி வாழ்ந்தால் என்ன பயன்?

பாவத்தோடு மரித்தால் நரகம்.. அதுவும் முடிவில்லாத நரகத்தில் அவியா நெருப்பில் நித்தியமும் உடலோடும் ஆத்துமத்தோடும் வேக வேண்டும் என்றால்.. அது எவ்வளவு பெரிய பயங்கரம்..

நரகத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி “பாவசங்கீர்த்தனம்தான்”

முடிந்தவரை வாரம் ஒருமுறை அப்படியில்லையென்றால் மாதம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்தே ஆக வேண்டும்..

அப்படிச் செய்யாமல் இருந்தால் நாம் நம் ஆன்மாவைக் குறித்து அக்கரையில்லாமல் இருக்கிறோம் என்று அர்த்தம்..

“ மனுமகன் வரும் நேரமும் நமக்குத் தெரியாது; மரணம் வரும் நேரமும் நமக்குத் தெரியாது “

அப்படியிருக்க நம் ஆன்மா விசயத்தில் அக்கறையில்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு? 

இதில் வேறு கத்தோலிக்கர்களில் பலர் எந்த அச்ச உணர்வும் இல்லாமல் பிரிவினை சபைக்கு செல்கின்றனர்..அது அதிக ஆபத்து இருக்கிறது..

திவ்விய திருப்பலி தவிர்த்து கத்தோலிக்கர்கள் மறக்க கூடாத விசயங்கள்..

பாவசங்கீர்த்தனம், உத்தரியம், ஜெபமாலை..

இந்த விசயத்தில் மறதி, அசட்டை, நேரம் ஒதுக்காமை மிக மிக தவறு...

கத்தோலிக்களான நாம் நம் திருச்சபை கொடுத்திருக்கும் தேவ திரவிய அனுமானங்களை அசட்டை செய்து வாழலாமா?

குறிப்பாக பாவசங்கீர்த்தனம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !