திவ்ய நற்கருணை நாதர் பகுதி-6

திவ்ய நற்கருணை ஆண்டவரின் ஒப்பிட முடியா பரிசுத்தத்தையும், மேன்மையையும், நம்முடைய தாழ்மையான நிலமையையும் எவ்வளவு அழகாக சொல்கிறார் அருட்தந்தை தாமஸ் கெம்பீம்ஸ்..

ஆண்டவரே ! உமது தயவின் பேரிலும் மிகுந்த இரக்கத்தின் பேரிலும் நம்பிக்கை வைத்து, உம்மையண்டி வருகிறேன். வியாதியஸ்தனான (பாவ வியாதி) நான் என் இரட்சகரிடத்திலும், பசியும் தாகமுமாயிருக்கிற நான், சீவியத்தின் ஊற்றினிடத்திலும், ஏழையாகிய நான் பரலோக இராஜாவிடத்திலும், அடிமையாகிய நான், என் ஆண்டவரிடத்திலும், சிருஷ்ட்டியாகிய (படைப்பாகிய) நான் சிருஷ்டிகரிடத்திலும் (படைத்தவரிடத்திலும்) துன்பங்களால் வருந்துகிற நான், எனது நேச தேற்றுகிறவரிடத்திலும் அண்டி வருகிறேன்.

ஆனால் நீர் என்னிடத்தில் எழுந்தருளி வர நான் பாக்கியம் பெற்றது எப்படி? 

நீர் உம்மைத்தாமே தந்தருளுவதற்கு நான் யார் ? 

பாவியாவன் உமது சமூகத்தில் நிற்கத் துணிவது எப்படி? நீரும் பாவியிடத்தில் வர சித்தமாவது எப்படி ?

நீர் அடியேனை அறிந்திருக்கிறீர்; நீர் எனக்கு கிருபை செய்கிறதற்கு என்னிடத்தில் நன்மையானது ஒன்றும் கிடையாது என்பதை நீர் அறிவீர். ஆகையால் என் நீசத்தனத்தை ஏற்றுக்கொள்கிறேன். உமது தயாளத்தை அறிந்து கொள்கிறேன். உமது இரக்கத்தைப் புகழுகிறேன். உமது அளவிறந்த நேசத்தைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். ஏனெனில் என் பேறுபலனைப்பற்றியல்ல, ஆனால் உம்மைப்பற்றியே, அதாவது உமது தயாளம் அதிகதிகமாய் எனக்கு விளங்கும்படியாகவும், தாழ்ச்சியைக் குறையற நான் அனுசரித்து வரும்படியாகவும், அந்த உபகாரம் செய்கிறீர். அப்படிச் செய்வது உமக்கு பிரியமும், சித்தமுமாயிருக்க நீர் செய்தருளும் நன்மையைச் சந்தோசத்துடன் பெற மனதாயிருக்கிறேன். ஆகையால் என் அக்கிரமம் இதற்குத் தடையிராமல் இருந்தாலல்லவோ தேவலை.

நன்றி : கிறிஸ்துநாதர் அணுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்

எனக்காக, இந்த பாவிக்காக மோட்சத்தில் உமக்கு உள்ள சகல மகிமையோடு, அடியேன் என் நெஞ்சுக்குள் வர நான் வாய்ப்பு பெற்றதெப்படி? என் கடவுள் எனக்காக இந்த வெண்சிறு அப்பத்தில் தன்னையையும், தன் மகிமையையும் மறைத்து ஆண்டவரும் சர்வேசுவரனுமான அவர் எனக்கு உணவாக என்னில் எழுந்தருளி வர நான் தகுதி பெற்றது எப்படி?  நான் என்றோ ஒரு நாள் மோட்சத்திற்கு வந்து உம்மை வாழ்த்தும் வரை காத்திராமல் நித்தமும் என்னைத் தேடிவந்து எனக்கு மோட்ச சந்தோசத்தை இன்னும் சொல்லப்போனால் மோட்சத்தை விட பெரிய சந்தோசத்தை பெற அனுபவிக்க நான் வாய்ப்பு பெற்றதெப்படி? உம் அளவற்ற இரக்கத்தினாலும் அன்பினாலும் அல்லவோ..

நாம் நம்மால் முடிந்தவரை நம்மைத் தயாரித்து வாய்ப்பு கிடைக்கும் போதும், வாய்ப்பை தேடி வரவழைத்தும் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து தூய உள்ளத்தோடு தூயவரை நாம் பெற்று மகிழ்வோம்…

உன்னத தேவனை, நற்கருணை ஆண்டவரை தகுதியான உள்ளத்தோடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !