பாத்திமா காட்சிகள் பகுதி- 30

ஆகஸ்ட் 13 மாதாவின் நான்காம் காட்சி நடைபெறவில்லை..ஏன்? – தொடர்ச்சி..

இப்படி இக்குழந்தைகள் மிக உருக்கமாக ஜெபிப்பதையும், அவர்களின் மாசற்ற வதனங்களையும், அவர்களின் களங்கமில்லாத பேச்சையும் கவனித்த கைதிகள் முழங்காலிலிருந்த அவர்களைச் சுற்றி கூடிவிட்டார்கள்.

எதற்காக நகர அதிகாரி அவர்களைச் சிறையில் அடைத்தார் என்று சுருக்கமாக கேட்டறிந்த அவர்களில் ஒருவன்,

“ அதிகாரி அந்த இரகசியத்தைக் அறிய மிக விரும்புகிறார்தானே. அதைச்சொல்லிவிட்டால் அதுவே நீங்கள் வெளியேறுவதற்கு எளிதான வழி “ என்றான்.

“ நாங்கள் சொல்வதை அந்தம்மா விரும்பவில்லை “  என்றாள் லூசியா.

“ அந்தம்மா விரும்பாவிட்டால் உங்களுக்கென்ன “ என்று அவன் மீண்டும் கூறினான்.

“ அதைவிட நான் சாவேன் “ என்றாள் ஜெசிந்தா. மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.

“ நாம் ஜெபமாலை சொல்வோம் “ என்று கூறி, மூவரும் தங்கள் ஜெபமாலைகளை எடுத்தார்கள்.

ஜஸிந்தா கழுத்தில் ஒரு மாதா சுரூபமுள்ள செயின் கிடந்தது.அதை சுவரில் இருந்த ஒரு ஆணியில் தொங்க விடுமாறு கேட்டுக்கொண்டாள் அவள். அந்த மனிதன் இன்முகத்தோடு அதை தொங்க விட்டான்.

இந்தக் குழந்தைகள் என்னதான் செய்யப்போகிறார்கள் என்பதை என்று எல்லார் கண்களும் ஆவலுடன் நோக்கின! அவர்கள் சுவரில் தொங்கிய அந்த சுரூபத்தின் முன் முழங்காலிட்டபடியே பக்தியுடன் தங்கள் ஜெபத்தை ஆரம்பித்தார்கள்.

“ பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்துவின் பெயராலே...பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த... பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே... அருள் நிறைந்த மரியாயே வாழ்க...”

சிறைக்கூடம் ஜெபக்கூடமாயிற்று! போர்த்துக்கல்லில் இந்த ஜெபங்களை கேட்டிராத மக்கள் செவிகள் இருக்க முடியாது. எவ்வளவு கடின மனமாயினும் இந்த ஒலிக்குத் திறக்காத காதுகள் அங்கில்லை. குழந்தைகளின் மழலை போல இச்செபங்கள் திரும்ப திரும்ப ஒலித்தன. அங்கிருந்த கைதிகளின் செவிகள் வழியாக இருதயங்கள் திறந்தன. வெகு விரைவில் சிலர் குழந்தைகளை சுற்றி முழங்காலிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நின்று கொண்டிருந்தவர்களும் தங்களையும் மீறி, “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று மெதுவாக சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் அவ்வார்த்தைகளை சொல்லி எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ?.

ஒரு மனிதன் தொப்பியை கழற்றாமலே ஜெபம் சொன்னது பிரான்சிஸின் கண்ணில் பட்டது. “ ஜெபிக்கும்போது தொப்பி வைத்திருக்கக்கூடாதே “ என்றான் அவன். உடனே அத்தொப்பி பறந்து தரையில் விழுந்தது. பிரான்சிஸ் அதை எடுத்து பெஞ்சின் மீது வைத்துவிட்டு, மீண்டும் ஜெபத்தைத் தொடர்ந்தான்...

ஜெபமாலை முடிந்தது.சற்று நேரம் அமைதி நிலவியது. அதற்குள் மீண்டும் விம்மலும், அழுகைச்சத்தமும்! ஆம், ஜஸிந்தாதான்..

“ என்ன ஜஸிந்தா இதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க நீ விரும்பவில்லையா?” என்றால் லூசியா,

“ விரும்புகிறேன். ஆனால் எங்கம்மாவை நினைத்ததும் அழுகை வருகிறது ” என்றாள் ஜஸிந்தா. 

இந்தக் காட்சி கைதிகளின் உள்ளத்தைத் தொட்டு விட்டது. இச்சிறுமியின் மீது அவர்களுக்கு ஒரு அன்பு கூட உண்டாயிற்று. அவர்களுன் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த ஒரு சிறு ஊதும் ஆர்மோனியத்தை (மவுத் ஆர்கன்) எடுத்து ஒரு இராகம் வாசித்தான். குழந்தைகளுக்கு உற்சாகமூட்டி விளையாட்டு காட்டுவதற்காக அப்படிச்செய்தான். சிலர் அந்த இராகத்தில் பாடத்துவங்கினார்கள். பாட்டும் இசையும் பொருந்தி ஒலித்தன. ஜஸிந்தாவின் கண்ணீர் நின்றது. அவள் கண்கள் ஜொலித்தன. அவளுக்கு அந்த இசை ஒலி குதூகலமாயிற்று.முகத்தில் சிறு மகிழ்ச்சி தோன்றியது.

“ உங்களுக்கு நடனமாடத் தெறியுமா? “ என்றான் ஒருவன் குழந்தைகளைப் பார்த்து.

“ எங்களுக்கு பண்டாங்க் (ஒரு வகை நடனம்) ஆடத்தெறியும், வீராவும்(இன்னொரு வகை நடனம்) ஆடத்தெறியும் “ என்றார்கள். சிறைச்சாலை ஒரு சிறிய நடன சாலையாக மாறியது. களவுக் கைதி ஒருவன் ஜஸிந்தாவுடன் ஆடத்துவங்கினான். அவள் மிகவும் சிறு பிள்ளையாக இருந்ததால் அவளைத் தூக்கி தோள் மேல் வைத்துக்கொண்டு ஆடினான். பாட்டும், ஆட்டமும், ஆர்மோனிய நாதமும் சேர்ந்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தின. ஏதோ ஒரு கலா நிகழ்ச்சியே நடப்பது போலிருந்தது.

கொஞ்சநேரம் வரை யாரும் சிறையில் இருப்பதாக யாருக்கும் நினைவில்லை. இசையின் வசப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திருந்தபோது, திடீரென்று சிறைக்கதவு திறந்தது..

-தொடரும்…

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, சகோ. ஜேசுராஜ் : 9894398144.

சிந்தனை : மிக மோசமான சிறைச்சாலையின் சூழ்நிலையில் நம் பாத்திமா சிறுமிகள் அகப்பட்டபோதும் அந்த வேதனையையும் பரித்தியாகமாக மாற்றி பாவிகள் மனந்திரும்ம ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். அதே போல் அந்தச் சூழ்நிலையில் அவர்கள் செய்த ஜெபமாலை அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, கைதிகளுக்கு மகிழ்ச்சியையும், மனமாற்றத்தையும் கொடுத்தது.. அதுதான் ஜெபமாலை.. தினந்தோறும் ஜெபமாலை ஜெபிப்போம்... குடும்ப ஜெபமாலை தவறாது ஜெபிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !