பாத்திமா காட்சிகள் பகுதி- 29

ஆகஸ்ட் 13 மாதாவின் நான்காம் காட்சி நடைபெறவில்லை..ஏன்? – தொடர்ச்சி..

மறுநாள் ஆகஸ்ட் மாதம் 14-தேதி, காலை பத்து மணிக்கு ஆர்ட்டுரோ மீண்டும் வந்தார். குழந்தைகளை ஆட்சி மன்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு நீண்ட கடுமையான விசாரணை நடைபெற்றது. மூன்றுபேரும் அது முடியும்போது களைத்துவிட்டனர். அவ்விசாரணையின் முடிவு முன்போலவேதான். அவர்கள் கோவா தா ஈரியாவில் ஓர் ஒளி பொருந்திய அழகிய மாதைக்கண்டனர். அந்தப்பெண் அவர்களிடம் ஓரு இரகசியம் ஒப்படைத்துள்ளாள். அதைச்சொல்ல முடியாது சிறை, சித்திரவதை, மரணம் எதுவானாலும் அவர்கள் ஏற்பார்களேயென்றி அந்த இரகசியத்தை சொல்ல மாட்டார்கள்.

விசாரிப்பு முடிந்து களைத்துப்போன குழந்தைகளை ஆர்ட்டுரோவின் மனைவி அன்புடன் கவனித்துக்கொண்டது குழந்தைகளுக்கு ஆறுதலாயிருந்தது. அவர்களுக்கு பரிவுடன் மதிய உணவளித்தாள் அம்மாது.

இதற்கு நேர்மாறாக ஆர்ட்டுரோ அவர்கள் அந்த இரகசியத்தை சொல்லாததால், அவர்களை நகரச் சிறைக்குள் மற்ற கைதிகளுடன் தள்ளுமாறு கட்டளையிட்டார். “ காட்சி எதுவும் காணவில்லை ” என்று அவர்களிடம் எப்படியாவது வாங்கி விட வேண்டும். இந்த மக்களின் பக்தியைஉ மூடத்தனம் என்று காட்டிவிட வேண்டும் என்பது அவரின் முடிவு.

அவ்ரம் நகர்ச்சிறை ஒரு அருவருப்பான இடம். பல அறைகளைக் கொண்டிருந்தது. ஒரு மாதிரி கெட்டவாடை வீசுமிடம். “ம்ம்ம்” என்று இரைந்து கொண்டே பல எதிரொலிகளை உறுமிக்கொண்டே இருக்கும். பெரும் இரும்புக்கம்பிகளால் பாதுகாப்புச் செய்யப்பட்டிருந்த அங்கு ஜேப்படித்திருடர்கள், குடிகாரர்கள், சூதாடிகள் போன்ற பலதரப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தார்கள். திடீரென ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டது. கைதிகள் எல்லோரும் கதவை எட்டிப்பார்த்தார்கள். அங்கே ஒரு சேவகன் மூன்று இளஞ்சிறுவர்களையும் உள்ளே தள்ளி உடனே கதவை பூட்டிவிட்டு சென்று விட்டான்.

உள்ளே நுழைந்ததும் குழந்தைகள் அவ்வறையின் ஒரு கோடியில் இரும்புக்கம்பியால் பலப்படுத்திருந்த ஜன்னல் பக்கமாக சென்று ஒதுங்கி நின்றார்கள். அதன் வழியாக அவ்ரம் சந்தைக்கடை தெருவை பார்க்க முடிந்தது. ஜஸிந்தா அதன் வழியாக வெளியே எட்டிப்பார்த்தாள். அவ்வளவுதான் ஒரே அழுகை..

லூசியா அவளை அரவணைத்துக் கொண்டாள்.

“ ஏன் அழுகிறாய் ஜஸிந்தா? “

“ எங்கம்மாவைப் பார்க்கனும். அம்மா அப்பாவைப் பார்க்காமல் சாகப்போகிறோம் “ என்று கூறி மேலும் அழுதாள்.

பிரான்சிஸ் சற்று திடமாக, “ அம்மாவைப் பார்க்க மாட்டோம். என்றால் சரி, பொறுமையாக இருப்போம். இதையும் பாவிகள் மனம் திரும்ப ஒப்புக்கொடுப்போம், அந்த நம் அம்மா இனி நமக்குத் தோன்ற மாட்டார்களோ?. அதுதான் ரொம்பக் கஷ்ட்டம். அதுதான் எனக்கு வேதனை. ஆனால் அதையும் பாவிகள் மனந்திரும்ப ஒப்புக்கொடுப்பேன்” என்றான்.

பிரான்சிஸ் இவ்வளவு திடமாக முதலில் பேசி விட்டான். ஆனால் நேரம் ஆக ஆக, தேவ தாய் மீண்டும் இங்கு வராமல் போய் விடக்கூடும் என்ற நினைவு வந்ததும் திடமிழந்து விடுவான். மற்ற இருவரும்தான் அவனைத் தேற்ற வேண்டியிருந்தது.

அங்கிருந்த கைதிகள் இக்குழந்தைகளை ஆளுக்கொரு முறையில் நோக்கினார்கள். சிலர் வெறுப்புடன் அலட்சியமாக இருந்தனர். சிலர் வேடிக்கை பார்த்தனர். இந்த வயதில் இப்படிப்பட்ட பிஞ்சுகளை ஏன் அடைக்கிறார்கள் என எண்ணினர்.

அங்குள்ள அசுத்த வாடை குழந்தைகளைத் தாக்கியது. அங்கு அடைக்கப்பட்டிருந்தவர்களின் அசுத்தம் படிந்த ஆடைகளும், சவரம் பன்னாத கோர முகங்களும், கலைந்து குவிந்த கிடந்த தலை உரோமங்களும் அவ்விடத்தை மேலும் மோசமாக ஆக்கின. நாங்கள் எங்கே, யார் நடுவே அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்ததுமே இரு சிறுமிகளும் மீண்டும் மீண்டும் கண்ணீர்ப் பெருக்கினர்.

“ அம்மாவைப் பார்க்க வேண்டும். அம்மாவிடம் போக வேண்டும் “ என்ற ஜஸிந்தாவின் குரல் பிரான்சிஸை உலுக்கியது.

“ அப்போ இதை நீ பாவிகளுக்காக ஒப்புக்கொடுக்க விரும்பவில்லை. அப்படியா? பாப்பரசருக்காக, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தை பரிகாரமாக ஒப்புக்கொடுக்க மாட்டாய் என்ன? “ என்றான் திடமாக.

“ கட்டாயம் ஒப்புக்கொடுப்பேன் “  என்றாள் ஜஸிந்தா.

உடனே பிரான்சிஸ் அந்த இடத்திலேயே முழங்காலிட்டான். லூசியாவும், ஜஸிந்தாவும் அப்படியே செய்தனர்.

மெதுவாக குரலில் அவன் இவ்வாறு சொன்னான்,

“ ஓ என் சேசுவே! இதெல்லாம் உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், பாப்பரசருக்காகவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஒப்புக்கொடுக்கிறோம்.”

இப்படி இக்குழந்தைகள் மிக உருக்கமாக ஜெபிப்பதையும், அவர்களின் மாசற்ற வதனங்களையும், அவர்களின் களங்கமில்லாத பேச்சையும் கவனித்த கைதிகள் முழங்காலிலிருந்த அவர்களைச் சுற்றி கூடிவிட்டார்கள்.

-தொடரும்

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144.

சிந்தனை : பாருங்கள் எத்தனை கொடுமையான சுழ்நிலையில் இக்குழந்தைகள் இருக்கும்போது ஒருவர் பலவீனமாக இருக்கும்போது ஒருவர் தேற்றுவதும்,, தேற்றுபவரே பலவீனமாக இருக்கும் போது முதலில் பலவீனமாக இருந்தவர் அவரைத் தேற்றுவதும்.. அழகான காணக்கிடைக்காத நமக்கு நிறைய பாடங்களை சொல்லித்தருகிறது.. உண்மையிலேயே இந்த பாத்திமாச் சிறுமிகளிடமிருந்து நாம் நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !