புனித சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் :பகுதி-29 – நிறைவுப்பகுதி (இப்போதைக்கு)

சாத்தானின் பரம எதிரி புனித சந்தியாகப்பர்..

கடவுளின் மறைந்த நகரம் (Mistical City of God) என்றொரு புத்தகம் இருக்கிறது.. மாதாவின் அருமை பெருமைகளை சொல்லும் புத்தகம்.. அந்த புத்தகத்தை எழுதிய பிரான்சிஸன் சபை அருட்சகோதரி மேரி சேசு அக்ரிடா ( Mary of Jesus of Agreda) அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.. அவருக்கு நிறைய ஆலயங்கள் உள்ளன.. 17- நூற்றாண்டில் எழுதப்பட்டது அந்த புத்தகம்.. 

அதில் சந்தியாகப்பர் பற்றிய சில பகுதிகளை படித்தேன்.. ஆச்சரியம் மற்றும் வியப்பு..

அதாவது புனித சந்தியாகப்பரின் நற்செய்திப்பணியின் தீவிரத்தால் ஏராளமான ஆன்மாக்கள் மனம் திரும்பின. அவரின் பேச்சு, துணிச்சல், சொல்வளம், நெருப்பு மயமான போதனையால் நிறைய மக்கள் கவரப்பட்டு கிறிஸ்தவர்களானார்கள். திருச்சபைக்கும், புனித இராயப்பருக்கும் உறுதுணையாக இருந்து சிறப்பாக, சுறுசுறுப்பாக ஆர்வமாக செயல்பட்டார்..

அதாவது அவர்மேல் கடுங்கோபம் கொண்டு நரகத்தலைவனான லூசிபர் தன்னுடைய படையைத் திரட்டிகொண்டு எப்படியாவது யாகப்பரைத் தீர்த்துகட்டவேண்டும் என்று பூமிக்கு வந்ததாம்.. தலைமைக்குருக்கள், பரிசேயர், சதுசேயர்களை அவருக்கு எதிராக தூண்டி விட்டதாம்.. நாம் ஏற்கனவே முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.. அதாவது யூதத்தலைமைக் குருக்கள் பல மந்திரவாதிகளை அவருக்கு எதிராக செயல்பட வாடகைக்கு அமர்த்தும் அளவிற்கு சென்றார்கள் என்று பார்த்தோம்..

அதற்கெல்லாம் அசருபவரா நம் சந்தியாகப்பர்.. அசரவே இல்லை.. ஆண்டவர் இயேசுவிற்காக மரிக்கவும் மகிழ்சியோடு தயாராக இருந்தார்.. அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாததால் ஆண்டவர் இயேசுவைக் கொல்ல சூழ்ச்சி செய்தது போல் செய்து கடைசியில் பொய்ச்சாட்சியை தயார் செய்து அவருக்கு எதிராக திருப்பிவிட்டார்கள்..

“ ஏரோது அகரிப்பா யூதர்களை மகிழ்சிப்படுத்த புனித யாகப்பரைத் தேர்ந்தெடுத்தான்.. திருச்சபையின் தலைவரே இருக்கும் போது சந்தியாகப்பரை ஏன் அவன் முதலில் கொல்ல வேண்டும்.. இதிலிருந்து புனித யாகப்பர் செய்த நற்செய்திப்பணி எந்த அளவிற்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்..

“அக்காலத்தில் ஏரோது அரசன் திருச்சபையினர் சிலரைத் துன்புறுத்த முற்பட்டான். அருளப்பரின் சகோதரரான யாகப்பரை வாளால் கொன்றான்.அது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததைக் கண்டு, இராயப்பரையும் கைது செய்தான்”. – அப்போஸ்தலர் பணி 12 : 1-2

சந்தியாகப்பர் இரத்தம் பூமியைத் தொட்டதும் ஏராளனமான அற்புதங்கள் நடந்தது என்றும், மக்கள் எல்லாரும் பொருத்தனை செய்து சந்தியாகப்பரை வணங்கும் அளவுக்கு சென்றது என்றால் அது எவ்வளவு பெரிய தாக்கமாக இருந்திருக்க வேண்டும்.. அப்போது ஒரு கிறிஸ்தவ புரட்சி ஏற்பட்டது என்றும் பார்த்தோம்.. இப்போதும் நரகத்தின் தலைவனுக்கு தோல்வியே.. வெற்றி நம் சந்தியாகப்பருக்கே.. சந்தியாகப்பர் மூலமாக நம் நேச பிதாவிற்கே..

சந்தியாகப்பர் பாதையில் பயணம் செய்த நாம் அவர் பாதையை சற்று திரும்பிப்பார்ப்போம்..

1. தந்தை வலைகளை மட்டுமல்ல சகலத்தையும் விட்டுவிட்டு இயேசு ஆண்டவரை பின் சென்றார்..

2. “ இதோ இறைவனின் செம்மரி “ என்று புனித ஸ்நாபக அருளப்பர் சொல்ல அவரையும் விட்டுவிட்டு இயேசு சுவாமியை பின்சென்றார்.

3. முக்கியமான தருணங்களில் ஆண்டவர் இயேசுவுக்கு நெருக்கமாக, அருகில் இருக்கும் பேறு பெற்றார்..

4. “ ஆண்டவர் இயேசுவின் வலப்பக்கம் அமர ஆசைப்பட்டார்”

5. “ ஆண்டவரின் கிண்ணத்தில் குடிப்பேன்” என்று துணிச்சலோடு பதில் சொன்னார்; குடித்தும் காட்டினார்.

6. “ ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத சமாரியர்களுக்கு எதிராக பொங்கி எழுந்தார்“

7. “ ஜெப தவ பரிகாரம் செய்தாலும் ஆற்றலோடும், தூய உள்ளத்தோடும் நற்செய்திப் பணி செய்தார்.

8. தேவமாதா உயிரோடு இருக்கும்போதே காட்சி கொடுக்கும் பேறு பெற்றார்.

9. முதல் கிறிஸ்தவ ஆலயம் அதுவும் அன்னைக்காக தூன் மாதா கோவிலைக் கட்டினார்.

10. மந்திரவாதிகளை மனம் திருப்பினார்.

11. இறந்த இளைஞனை 5 வாரங்களுக்குபின் உயிரோடு எழுப்பினார்.

12. அப்போஸ்தலர்களில் முதல் வேத சாட்சியானார்..

13. படை மிரட்டியாக பல முறை வெண்குதிரையில் வந்து எதிரிகளை துவசம் செய்து வெற்றி தேடித்தந்தார்..

14. பல புதுமைகள் செய்தார்..

15. தூய்மையான புனிதர்.

16. இயேசுவுக்காக தன்னையே உருக்கினார்..

இப்படி எத்தனையோ பார்த்தோம்.. அவர் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் என்ன ?

அவர் பாதையில் நாமும் பயணம் செய்து இயேசுவை அடைவதுதான்..

புனித சந்தியாகப்பரிடம் இருந்த மிகப்பெரிய அரிய குணாதிசயம் (Special Quality) கண்டுபிடித்தலே.. ஸ்நாபக அருளப்பரை கண்டுபிடித்தார், இயேசு சுவாமியைக் கண்டுபிடிதார், மாதாவைக் கண்டுபிடித்தார் இறுதியாக அவரையே அவர் கண்டுபிடித்தார்.. இயேசுவில்.. இதுதான் நமக்கு முக்கியம்..

நாமும் கண்டு பிடிக்க வேண்டும்.. இயேசு சுவாமியை கண்டு பிடிக்க வேண்டும்.. மாதாவைக் கண்டுபிடிக்க வேண்டும்.. பின்பு புனித யாகப்பரைப் போல இயேசுவில் நம்மை கண்டுபிடிக்க வேண்டும்..

அப்படி கண்டு பிடிக்க புனித யாகப்பர் நடந்து சென்ற பாதையில் நாமும் கொஞ்ச தூரம் நடப்போமா..

ஜெபம் : புனித சந்தியாகப்பரே ! உம்முடைய பாதையில் வீரத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், துணிச்சலோடும், மகிழ்ச்சியோடும் நடக்கவேண்டிய வரத்தைப் பெற எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்- ஆமென்.

“ படை மிரட்டி புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ! “

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !