அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-28

சந்தியாகப்பரைப் பற்றி புனித சின்னப்பரின் திருமுக சான்றுகள்…

சந்தியாகப்பர் ஸ்பெயின் தேசத்தில் நற்செய்தி அறிவித்ததற்கான சான்று..

“ கிறிஸ்துவின் பெயர் கேள்விப் படாத இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிப்பதே பெருமையெனக் கருதினேன்; ஏனெனில், வேறொருவர் இட்ட அடிப்படை மீது கட்டிடம் எழுப்ப நான் விரும்ப வில்லை”.

“ஆகையால், நான் உங்களிடம் வரப் பல முறை நினைத்தும், அது தடைப்பட்டது.”

“இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும் போது உங்களைக் காணலாம் என்கிற பேரவா கடந்த பல ஆண்டுகளாக எனக்கு இருந்து வருகிறது;”

உரோமையர் 15 : 20, 22-23

திருச்சபையின் தூண்களில் ஒருவர் யாகப்பர்..

“அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோர், நட்புறவின் அடையாளமாக, எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர்;” – கலாத்தியர் 2 : 9

“நான் புறவினத்தாரிடையே அறிவிக்கும் நற்செய்தியை அங்கே விளக்கிக் காட்டினேன்; அதாவது, செல்வாக்குள்ளவர்களுக்குத் தனிமையில் எடுத்துரைத்தேன்” – கலாத்தியர்  1 : 2

உயிர்த்த ஆண்டவரின் காட்சி சந்தியாகப்பருக்கும் தனிமையில் வழங்கப்பட்டிருக்கிறது..

மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.

“அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

கோபாவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார்.

பின்பு ஒரே சமயத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுக்குத் தோன்றினார் அவர்களுள் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்; ஒரு சிலர் இறந்து போயினர்.

பின்னர் யாகப்பருக்கும், அடுத்து அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்.,

எல்லாருக்கும் கடைசியாக, காலாந்தப்பிய பிறவி போன்ற எனக்கும் தோன்றினார்.”

1கொரி 15 : 3-8

மேலும் ஆண்டவர் உயிர்த்தெழுத்த பின்பு  7 சீடர்களுக்கு மட்டும் காட்சி தருவார்.. அதிலும் நம் யாகப்பர்..

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு மூன்றாம் முறையாக காட்சி கொடுத்தபோதும், கடற்கரையில் தீ மூட்டி மீன்களையும் அப்பத்தையும் இயேசுவோடு உணவருந்திய ஏழுவரில் நம் புனிதரும் ஒருவர். 

பின்னர், இயேசு சீடருக்குத் திபேரியாக் கடலருகே மீண்டும் தோன்றினார்; தோன்றியது இவ்வாறு:

சீமோன் இராயப்பர், திதிமு என்ற தோமையார், கலிலேயா நாட்டுக் கானாவூர் நத்தனயேல், செபெதேயுவின் மக்கள், இயேசுவின் சீடர்களுள் வேறு இருவர் ஆகிய இவர்கள் கூடியிருந்தார்கள்.

( அருளப்பர் : 21:1-2 )

யாகப்பர் உரை :

அவர்கள் பேசி முடித்தபின் யாகப்பர் கூறியதாவது:

"சகோதரரே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். புறவினத்தாரிடையே தமக்கென மக்களைத் தேர்ந்து கொள்ளக் கடவுள் முதன் முறையாக அவர்களை நாடி வந்த செய்தியை அவர்களுக்குச் சிமெயோன் எடுத்துக்கூறினார்.

இதற்கொப்ப இறைவாக்கினர்கள் எழுதியுள்ளதாவது:

'அதன்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவேன், அதில் பாழடைந்து போனதை மீண்டும் கட்டி எழுப்புவேன்.

அதைப் பார்த்து மற்ற மனிதர்களும், எனக்கு அர்ச்சிக்கப்பட்ட புறவினத்தார் எல்லாரும் ஆண்டவரைத் தேடுவர்,

என்று தொன்று தொட்டு இவற்றை வெளிப்படுத்தும் ஆண்டவர் கூறுகிறார்.

ஆதலால், கடவுள்பக்கம் மனந்திரும்புகிற புறவினத்தாருக்குத் தொல்லை கொடுத்தலாகாது.

என் முடிவு இதுவே”.

அப்போஸ்தலர் பணி 15 : 13-20.

( இதில் ஆதி திருச்சபையின் முதல் போப் ஆண்டவரான புனித இராயப்பருக்கு சந்தியாகப்பர் எவ்வளவு உறு துணையாக இருந்தார் என்பதும், சந்தியாகப்பரின் திடமான போதனையும், உறுதியான முடிவும் தெரிகிறது).

ஜெபம் : தூய சந்தியாகப்பரே ! உம்முடைய உறுதியான திடமான நற்செய்திப் பணியை பார்க்கும்போது உம்மைப் போல எங்களுக்கும் அக மகிழ்ச்சி ஏற்படுகிறது.. அதே போல் நீர் ஆண்டவர் இயேசு சுவாமியோடு நெருக்கமாக வாழ, இருக்க  அனுமதிக்கப்பட்டது எவ்வளவு பெரிய பாக்கியம்.. இயேசு ஆண்டவரை முகமுகமாக தரிசிக்க பாக்கியம் பெற்ற அப்போஸ்தலர்களே !

நாங்களும் இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் ஒரு நாள் மோட்சகரை சேர்ந்து உம்மோடு சேர்ந்து ஆண்டவர் இயேசுவை முகமுகமாக தரிசிக்க, இவ்வுலகில் நாங்கள் வாழும் போது சந்திக்கின்ற ஆன்ம சோதனைகளை பசாசின் திட்டங்களை முறியடித்து நாங்கள் நல்ல உறுதியுள்ள, விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ எங்களுக்காக இறைமகனிடம் பரிந்து பேசி எண்ணற்ற வரங்களையும், பாதுகாப்பையும் தந்து வழி நடத்திட தூய்மையான அப்போஸ்தலரே ! உம்மிடம் மன்றாடுகிறோம். 

உம் வாழ்க்கை பயணத்தில் நாங்களும் பயணிக்க வரம் தாரும் – ஆமென்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !