திவ்ய நற்கருணை நாதர் பகுதி-16

“ இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

மத்தேயு 28 : 20

“விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும் “

மாற்கு 16 : 16

மேலே உள்ள நம் இயேசு ஆண்டவரின் உயிருள்ள இரண்டு வார்த்தைகளைத்தான் நாம் இப்போது தியானிக்க இருக்கிறோம்..

இரண்டு வார்த்தைகளுமே ஆண்டவர் விண்ணகம் செல்லும் முன் மண்ணுலகில் வைத்து கடைசியாக சொல்லப்பட்ட வார்த்தைகள்..

ஒன்று மத்தேயு நற்செய்தியின் முடிவில்.. இன்னொன்று மாற்கு நற்செய்தியின் முடிவில்..

முதல் இறைவார்த்தையின் பொருள் நம் எல்லாருக்கும் நன்றாக தெரியும்.. சமீபத்தில் புது நன்மை வாங்கிய சிறுவன்- சிறுமிக்கு கூட தெரியும்..

ஆண்டவர் எங்கே..? எப்படி..? நம்மிடையே உலகம் முடிவு வரை இருக்கிறார் என்றால் அவர்கள் கூட திவ்ய நற்கருணையைக் காட்டுவார்கள்.. அல்லது நற்கருணை ஆண்டவர் இருக்கும் மூடப்பட்டிருக்கும் பேழையைக் காட்டுவார்கள்..

ஆனால் ஆண்டவரின் இரண்டாவது வார்த்தைக்கு பொருள் என்ன? இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே..

பாவம் செய்கிறவனுக்குத்தானே தண்டணைக் கிடைக்க வேண்டும்.. ஆனால் விசுவசிக்காதவனுக்குக் கூட தண்டணை கிடைக்கும் என்கிறாரே..

இது நானோ.. நீங்களோ சொல்லியிருந்தால்.. அதை விவாதிக்கலாம்.. பரிசிலிக்கலாம்..  அதற்கும் கூட வேறு விளக்கம் கூட யாரும் சொல்லலாம்..

ஆனால் நம் ஆண்டவரே சொல்லுவதால் ஏற்கனவே அது “ Aprroved C.O” – ஆகிவிட்டது..  அனுமதி பெற்ற அறிக்கையாகிவிட்டது..

அதை யாரும்.. பரிசீலிக்கவோ.. மறு பரிசீலனை செய்யவோ முடியாது..

விசுவசித்தவர்களால் என்னென்ன செய்ய முடியும்.. அதாவது விசுவசித்து ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று சொல்கிறார்..?

“என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.

மாற்கு 16 : 17-18

இதற்கு முன்னால்.. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் “முதன்மையான விசுவாசம் என்ன? “

திவ்ய நற்கருணையில் ஆண்டவர் இருப்பது.. இப்படி சொல்வதை விட திவ்ய நற்கருணையே சேசு ஆண்டவர்தான்..

விசுவசித்தவர்கள் கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கை வைப்பர் அவர்களும் நலமடைவர்..

பிணியை.. பிணியாளர்களை சுகமாக்குபவர்.. பிணியை பரப்புவார் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அபத்தம்.. விசுவாசத்திற்கு எதிரான பேச்சு.. நடத்தை.. இதுவே கத்தோலிக்கத்திற்கு எதிரான பேச்சு.. மற்றும் கடவுளுக்கே எதிரான பேச்சு.. மற்றும் செயல்..

அப்படியென்றால் ஆண்டவர் இப்படிச் சொல்வது.. நடக்கப்போவதைத்தானே சொல்கிறார்..

“ விசுவசியாதவனுக்குத் தண்டணை கிடைக்கும்”

அப்படியானால் நாம் அந்த தண்டனையை எதிர்கொள்ளத் தயாரா?

இப்போது தற்காலிகமாக ‘நாம எதோ தப்பிக்கொண்டோம்’ என்று நினைத்து செய்யும் செயல்களை.. நாளை ஆண்டவர் வெளிப்படையாக..

“ நான்தான் சொல்லியிருக்கிறேனே.. ‘இது என் உடல்’ ‘ இது என் இரத்தம்’ ‘நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு’, எனது சதையைத் தின்று இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது’ ‘ இதோ உலகம் முடியும் வரை என்னாளும் உங்களோடு இருக்கிறேன்’.. அந்த வார்த்தைகளையெல்லாம் நான் என்ன சும்மா சொன்னேனா? நேரம் போக்குக்கு சொன்னேனா?.. என் வார்த்தையையே நீ நம்பலன்னா நீ என்ன கிறிஸ்தவன்.. என்ன நடிக்கிறியா?” னு கேட்டார்னா அதற்கு நம் பதில் என்ன?

ஆண்டவருடைய ஒவ்வொரு வார்த்தையும்.. இரு புறமும் கருக்குள்ள கூர்மையான வார்த்தைகள்தான் நாளை நமக்கு எதிராக வந்து நிற்கப்போகின்றன..

நாம் எந்த முக்கியமான விசயத்தில் நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமோ அதைக் காத்துக் கொள்ளவில்லையென்றால்.. அதன்பின் நான் கிறிஸ்தவன் என்றும் சொல்ல முடியாது.. எவ்வளவு பெரிய செயல்களை நான் செய்துவிட்டேன் என்று எதைக்குறித்தும் பெருமையடித்துக் கொள்ளவும் முடியாது..

அத்தனையும் பூஜ்ஜியமே ! ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத காரியம்..

திவ்ய நற்கருணை ஒரு பொருள் அல்ல.. என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரை நான் உரிய விதத்தில் தகுந்த மரியாதையோடு என்னை தயாரித்து முழங்காலில் நின்று தைரியமாக நாவில் வாங்குவேன்.. யாரும் கொடுக்க தயாரில்லையென்றால் நான் ‘ஆசை நன்மை’ தான் வாங்குவேன்…அதுபோல அவரைக் கையாள்போரும்.. என் ஆண்டவர் சுகமாக்கும் ஆண்டவர்.. நோய் பரப்பும் ஆண்டவர் அல்ல என்று விசுவாசத்தோடு அவரை கையாண்டால் அவர்களும் தப்புவர் தண்டனையிலிருந்து..

இல்லையென்றால்.. பயந்துகிட்டு… பயத்திலேயே…. போய் நரகத்தில் விழவேண்டியதுதான்.. கடவுளும் நம்மை காப்பாற்ற மாட்டார்..

“ அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே.. அன்புப் பாதையில் வழி நடந்தே.. அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் “

நம் நேசப் பிதா வாழ்த்தபெபெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !