அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-15

யாகப்பரின் தாய்..

“ எம் மக்கள் இருவருள் உம் அரசில் ஒருவன் உம் வலப்பக்கமும், மற்றவன் உம் இடப்பக்கமும் அமரச் செய்வீர் என வாக்களியும் “ மத்தேயு 20 : 21

புனித சலோமியம்மாள் : இவர் ஒரு புனிதை. இயேசுவை பின்பற்றியவர். இயேசுவுக்கு பணிவிடை புரிந்தவர். இயேசுவின் சீடர். இயேசுவின் திருப்பாடுகளின் தேவமாதாவோடு பங்கு பெற்றவர். இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பு அவருக்கு பரிமளத்தைலம் பூச மகதலேன் மரியாளோடும், சின்ன யாகப்பரின் தாய் மரியாளோடும் கல்லறைக்கு சென்று இயேசு உயிர்த்த செய்தி காவல் தூதரால் அறிவிக்கப்பட்டதை கேட்டவர். பரிசுத்த வேதாகமத்தில் புனித சலோமி மத்தேயு 20:20, மாற்கு 10:35, மாற்கு 15:40, மத்தேயு 27: 56, மத்தேயு 28:1 அருளப்பர் 19: 25, மாற்கு 15:41. என்று பல இடங்களில் வருகிறார்கள். சில இடங்களில் இவரையும் மரியாள் என்றே குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மூன்றாவது மரியாளாக இவர் பெயர் வருகிறது.

இயேசு சுவாமியின்  உயிர்ப்பிற்கு பின் நற்செய்தி பணி ஆற்றியவர். இவர் திருநாள் அக்டோபர் 22. கிழக்கு ஆர்த்தோடக்ஸ் சர்ச் (Eastern Orthodox Church ) முறைப்படி பாஸ்க்காவிலிருந்து அதாவது ஈஸ்டரிலிருந்து மூன்றாவது வாரம்.

மேலும் இவர் தேவமாதாவுக்கு சகோதரி உறவுமுறை. ஆண்டவர் இயேசுவுக்கு அத்தை உறவு. தேவமாதாவோடு சேர்ந்து குழந்தை இயேசுவை குளிப்பாட்டியவர். பரிசுத்த குடும்ப ஓவியங்களில் (Holy family paintings) காணப்படுபவர்.

இவர் ஒரு தலைமைக்குருவின் மகள். அதுவும் கடவுளுக்கு நேரிடையாக தகனப்பலிகளை ஒப்புக்கொடுக்கும் தலைமைக்குருவின் மகள். இயேசு சுவாமியின் சிலுவைப் பாதை பயணத்தில் கூட ஒரு தலைமைக்குரு பெரிய யாகப்பர் சகோதரரான அருளப்பருக்கு அறிமுகமானவர் ( அருளப்பர் 18 : 16) என்று வரும். இவரும் இவர் கணவரான செபதேயுவும் ஓரளவு படித்தவர்கள். கிரேக்கர்களோடு பழகும், உரையாடும் அளவுக்கு படிப்பறிவும் சமுதாய அந்தஸ்தும் பெற்றவர்கள். மேலும் தேவ மாதாவுக்கு நெருங்கிய உறவினரும் கூட. யாகப்பரின் பெற்றோரின் பெயர் விவிலியத்தில் வருவதும்..அதுவும் சலோமியம்மாளின் பெயர் மேலும் சில இடங்களில் வருவதும் இந்த சகோதர்களுக்கு இறைவன் தந்த மகிமை. சலோமியம்மாள் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவள். இயேசு சுவாமியைக் காண்பதற்கு முன்னால் வரை ஜெருசலேம் தேவாலயத்திற்கு சென்று பிதாவை வழிபடுவதிலும், கோவில் காரியங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

தன் பாசமான பிள்ளைகள் இயேசுவைப் பின் சென்றவுடன் இந்த தாயும் இயேசுவை பின் சென்றாள். அவருக்கு பணிவிடை புரிந்தாள். அதிலும் முக்கியமான பங்கு வகித்தாள். வலைத்தளங்களில் இவரை அமைச்சர் என்று குறிப்பிடுகிறார்கள், அந்த அளவுக்கு இயேசுவின் நற்செய்தி பணிகளுக்கு இயேசுவுக்கு ஒத்தாசையாகவும், ஒருங்கினைப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறாள். இயேசுவின் தாய்க்கும் பெரும் உதவியாகவும் இருந்திருக்கிறாள். இவரும் இயேசுவின் பெண் சீடர்களில் ஒருவர். இயேசுவிடமும் அவர் தாயிடமும் செல்வாக்கு பெற்று விளங்கியிருக்கிறார். 

அதனால்தான் உரிமையோடு இயேவிடம் தன் பிள்ளைகளுக்காக பரிந்து பேசியிருக்கிறார் “ என்னுடைய புதல்வருள் ஒருவர் உமது வலப்புறமும், ஒருவர் இடப்புறமும் அமர நீர் அருள்புரிய வேண்டும் “ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறைவன் இயேசு வானகம் சென்ற பின் அவருடைய பிள்ளைகளைப்போல இவரும் நற்செய்தி பணி ஆற்றியிருக்கிறார். செபதேயுகுடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். அதில் மூன்று பேர் புனிதர்கள் (புனித பெரிய யாகப்பர், புனித அருளப்பர், புனித சலோமி). செபதேயு தன்ன்னுடைய குடும்பத்திற்காக மட்டும் உழைக்கவில்லை. ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் மாதாவுக்காகவும் உழைத்திருக்கிறார். அவரும் பேறு பெற்றவரே. எத்தனைச் சிறப்பு இந்த குடும்பத்திற்கு. எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் இந்த குடும்பம். இன்னொரு முக்கியமான விசயம். தனக்குப்பின் தன் தாய் இந்த குடும்பத்தில்தான் இருக்க வேண்டும் என்று விரும்பிய இயேசு சுவாமி தன் தாயை அருளப்பரிடம் ஒப்படைத்தார். அதற்க்கு காரணம் புனித சலோமியம்மாளின் பேரன்பு கொண்ட குணாதிசயம். இயேசுவுக்கு பின் தேவ மாதாவை பாதுகாக்கும், அரவணைக்கும் பொறுப்பும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இன்னும் ஒரு சிறப்பு.

எங்கள் பாசமிகு பாதுகாவலரின் அன்னையான புனித சலோமி ஆச்சியின் பாதம் தொட்டு வணங்கி சமர்பிக்கிறோம். 

புனித சலோமி அம்மாளே ! “எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் “

ஜெபம் : 

திருக்குடும்பத்திற்க்கு அடுத்தபடியாக அநேக சிறப்புகளை பெற்ற குடும்பத்தின் தலைவியான எங்கள் புனித சலோமியம்மாளே !

நீங்களும் தெய்வ பக்தியாய் இருந்து உங்கள் பிள்ளைகளையும் நல்ல தெய்வபக்தியுள்ள கீழ்படிதலுள்ள பிள்ளைகளாய் வளர்த்தால்தான் அந்த உம் அன்புப் பிள்ளைகள் மாபரன் இயேசு “ என்னைப்பின் செல் “ என்ற ஒரு வார்த்தையில் அழைத்தபோது மறுப்பேதும் சொல்லாமல் அவரை பின் சென்றார்கள்.

இப்போது உள்ள தாய்மார்கள் உங்களை பின் பற்றி தன் பிள்ளைகளை தெய்வ பக்கியுள்ள நல்ல பிள்ளைகளாக, கடவுளுக்கு கீழ்படியும் பிள்ளைகளாக, நல்ல  நேர்மையுள்ள நெறியில் வளர்க்கவும், தேவ அழைத்தலுக்கு எந்த தடையும் சொல்லாமல் மனமுவந்து அனுப்பவும், மேலும் திருச்சபைக்கும், இந்த சமுதாயத்துக்கும் நல்ல விதைகளாக அளிக்க (விதைக்க) வரம் தர புனித சலோமியம்மாளே  உம்மை மன்றாடுகிறோம்.

****இந்த பகுதி தூய சந்தியாகப்பரின் அன்னை புனித சலோமிக்கு சமர்ப்பணம் *****

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு. (புனித சலோமியைபற்றி இன்னும் விரிவாக இன்னொரு பகுதியில் பார்க்கலாம்)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !