மனுமகன் சேசு பாகம் - 12

இருளில் ஒளிர்ந்த ஒளி இயேசு…

“ அவருள் உயிர் இருந்தது: அவ்வுயிரே மனிதருக்கு ஒளி. அவ்வொளி இருளில் ஒளிர்ந்தது; இருளோ அதை மேற்கொள்ளவில்லை”

அருளப்பர் 1 : 4-5

கடவுள் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்தான் அவர் எடுத்த மனித பிறவி..

பாவம் தவிர மற்ற அனைத்திலும் அவர் மனிதரைப் போல இருந்தார் என்கிறது வேதாகமம்..

சாதாரன மனிதனுக்கும் அதாவது நமக்கும் சேசு கிறிஸ்துவுக்கும் ஒரே வித்தியாசம்தான்.. நம்மிடம் பாவம் இருக்கிறது.. அவரிடம் அது இல்லை..

பசி, தாகம், சோர்வு, வேதனை, துக்கம், வலி, நோவு, களைப்பு, பயம், அன்பு, பாசம், நேசம், அழுகை, கோபம் என்று நம்மிடம் உள்ள அனைத்து உணர்வுகளும் அவரிடம் இருந்தன..

நாற்பது நாட்கள் நோன்பிருந்தபோது அவர் பசியுற்றார் (மத்தேயு 4 :2) என்கிறது வேதாகமம்..

லாசர் இறந்த செய்தி கேட்டு மனம் குமுறி கலங்கினார்; கண்ணீர் விட்டு அழுதார் என்கிறது வேதாகமம் ( அரு 11 : 34-35)..

ஆண்டவருடைய கோபத்திற்கு அளவே இல்லை..

தலைமைக் குருக்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மத்தியில் துணிச்சலோடும் கோபத்தோடும் எத்தனை முறை அவர்களுக்கு முகத்திற்கு நேரே பேசியிருப்பதை நாம் அறிவோம்..

ஆண்டவரின் கோபத்தின் உச்சம்தான் தன் பிதாவின் ஆலயம் வாணிக ஸ்தலம் ஆனபோது வெகுண்டெழுந்து அவர்களை அடித்து துரத்தியது..

ஜெருசலேமைப்பார்த்தும் ஒருமுறை கண்ணீர் சொரிந்தார் என்றும் வேதாகமத்தில் பார்க்கிறோம்..

எல்லாவற்றிக்கும் மேலாக மனிதனைப்போலவே பயந்தார் என்றும் பார்க்கிறோம். தன்னுடைய பாடுகளை நினைத்து பயந்துதான் அன்று கெத்சமெனி தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்தார்..

ஆக அவர் வாழ்ந்த 33 ஆண்டுகளும் அதாவது 12,045 நாட்களும் சோதனை நிறைந்த நாட்கள்தான், போராட்டம் இருந்த நாட்கள்தான், பிரச்சனைகள், வறுமை, ஏழ்மை இருந்த நாட்கள்தான்.. அதை அவர் எப்படி எதிர்கொண்டார்..?

முதலில் “அவர் ஜெபித்தார்”. அவர் கடவுளாக இருந்தாலும், கடவுளும்-மனிதனுமாக இருந்தாலும் அவர் ஜெபித்தார் என்று வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கின்றோம்..

இரவெல்லாம் ஜெபித்தார் என்று பார்க்கின்றோம்..

இரவானதும் சீடர்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையான இடத்தையும், ஒலிவ மரங்கள் இருந்த இடத்தையும், மலைப்பகுதிகளையும் தேடிச் சென்று ஜெபித்தார் என்று பார்க்கின்றோம்..

தனக்கு 12 சீடர்களை தேர்ந்தெடுக்கும் முன் ஜெபித்தார் என்று பார்க்கின்றோம்.

அருளப்பர் நற்செய்தி 17- அதிகாரம் முழுவதும் தன் நேச பிதாவை நோக்கி அவர் ஜெபித்த ஜெபம்தான்..

அது கெத்சமெனி தோட்டம் வரை தொடர்கின்றது..

மேலும் அவர் சிலுவையில் உயிர்விடுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் அவர் வாயிலிருந்து உதிர்த்த வார்த்தையான,

“ என் கடவுளே ! என் கடவுளே ! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற வார்த்தை வரைக்கும்.. ஏன் அவரிடமிருந்து அந்த வார்த்தை வந்தது என்றால் அதுவரை அவர் ஜெபித்துக்கொண்டிருந்தார் என்பதையே அது காட்டுகிறது..

சிலுவையில் அத்தனை வேதனை, வலிகளுக்கு மத்தியிலும், இரத்தம் வடிந்து உயிர் போய்க்கொண்டிருக்கும் வேளையிலும் கூட அவரால் ஜெபிக்க முடிந்தது என்றால் அவர் வாழ்ந்த காலமான 33 ஆண்டுகளில் ஒரு நாட்கள் கூட  அவர் ஜெபிக்காமல் இருந்ததில்லை என்பதையே அது காட்டுகிறது..

மேலும் அவர் தன் பிதாவைவிட்டு ஒரு வினாடி கூட அவர் பிரிந்திருந்ததில்லை என்பதையும் அது காட்டுகிறது..

ஆண்டவர் இயேசுவே நமக்கு தலை சிறந்த கல்வி சாலை, ரோல்மாடல், பைபிள், பாடம் எல்லாம்..

அவர் சந்தித்த ஒவ்வொரு சூழ்நிலையும், அனுபவித்த வேதனையையும்  நம்மைவிட பல மடங்கு கடினமான, அதிகமானவைகள் நம் சூழ்நிலையை அவர் சூழ்நிலையோடு ஒப்பிட அவைகள் தகுதியற்றவை..

ஆண்டவர் மனிதராக இருக்கும்போது ஒன்றைக் கண்டுபிடித்து வைத்துள்ளார்.. அது என்னவென்றால் தன்னால் கடவுள் இல்லாமல் அதாவது தன் அப்பாவை விட்டுப் பிரிந்து ஒன்றும் செய்ய முடியாது மற்றும் செய்யக் கூடாது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்..

அதனால் அவர் தன் சந்தோசத்திலும் அவர் பிதாவை மகிமைப்படுத்தினார்; வேதனையின் மத்தியிலும் அவர் தன் பிதாவை மகிமைப்படுத்தினார்..

எப்போதும் அவரைச் சார்ந்து அவரிலியே இருந்தார்.. அதனால்தான் இந்த ரிஸ்க் நிறைந்த மனிதப் பிறவியை ஜெயிக்க அதைக் கடக்க அவரால் முடிந்தது..

நாம் முதலில் ஜெபிக்கிறோமா?

நமது சோதனையான நேரத்தில் அவரை நினைக்கிறோமா?

நாம் எந்த அளவுக்கு கடினமான, கஷ்டமான சூழ்நிலையிலும் அதளபாதாள சூழ்நிலைக்குப் போனாலும், டாக்டர்களால் கைவிடப்படும் நோய்களுக்கு சென்றாலும் அந்த நேரத்தில் நம் கடவுளை அழைக்கிறோமா? தேடுகிறோமா? அவரால் எதுவும் முடியும் என்று விசுவசிக்கிறோமா? அல்லது அவரது திருவுளம் எதுவோ அதுவே நமக்கு நடக்கட்டும் என்று அதை அவர் பெயரால் ஏற்றுக் கொள்கிறோமா?

ஆண்டவர் கடந்ததை நம்மால் ஏன் கடக்க முடியவில்லை என்ற  சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

ஒரே ஒரு குறிப்பு மட்டும், மன்னிக்கவும் : இன்றைய தலைப்பில் உள்ள இறைவார்த்தையை ஒரு முறை வாசித்துவிட்டு (இருளோ அதை மேற்கொள்ளவில்லை), திருவிவிலியம், தொடக்க நூல் 3 : 15 -க்கு சென்று பாருங்கள் ‘அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்; நீ அதன் காலை காயப்படுத்துவாய் ‘  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது எத்தனை அபத்தம். பரிசுத்த வேதாகமத்தில் மாதாவை நினைவில் வைத்து பிதா சொல்கிறார் “நீயோ அவள் குதிங்காலைத் தீண்ட முயல்வாய்” அதாவது உன்னால் முயற்சி மட்டுமே செய்ய முடியும் என்பதை வெளிப்படையாகவும், ஆனால் அது உன்னால் முடியாது” என்பதை மறைமுகமாகவும், “ ஏனென்றால் ‘அவள் அமல உற்பவி’ என்பதை மறைபொருளாகவும் குறிப்பிடுகிறார்..

இப்போது சொல்லுங்கள்.. அல்லது மனதிலாவது நினைத்துக்கொள்ளுங்கள்..

கத்தோலிக்க ‘பரிசுத்த வேதாகமம்’  சரியா?

திருவிவிலிய பொது மொழிபெயற்பு சரியா?

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !