மனுமகன் சேசு பாகம் - 14

“ இதோ! இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற வந்து விட்டேன் “
எபிரேயர் 10 : 7

“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.”
பரிசுத்த வேதாகமம், லூக்காஸ் 1 : 42

இங்கே ‘கனி’ என்ற வார்த்தை ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது..?

பழைய ஏற்பாட்டில் ஒரு கனியால் பாவம் நுழைந்தது..

புதிய ஏற்பாட்டின் கனியால் பாவம் வெல்லப்பட்டது..

பழைய ஏற்பாட்டின் கனியில் பாவமும், சாவும் மறைந்திருந்தன..

புதிய ஏற்பாட்டின் கனியில் நிலைவாழ்வும், மோட்சமும் மறைந்திருந்தன..

கடவுள் உண்ணக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தும் அந்த கனியின் மேல் ஏவாள் ஆசை அல்லது இச்சை கொண்டு கடவுளுக்கு கீழ்ப்படியாமல் பிசாசுக்கு கீழ்படிந்து அந்தக் கனியை உண்டு உலகிற்கு பாவத்தைக் கொண்டு வந்தாள்..

அதுவரை பாவம் என்றால் என்ன என்று அறியாத உலகத்திற்குள் பாவம் நுழைந்தது.. 

கடவுளின் சாயலும் பாவனையுமான மனிதன் இரத்தத்திற்குள் பாவம் என்ற விஷம் ஏறிவிட்டது..

அதுவரை பரிசுத்தமாக இருந்த அவர்கள் பாவிகளானார்கள்..

அவர்களின் அமலோற்பவம் பரிபோனது..

அன்று ஆதிப்பெற்றோர்கள் மூலமாக நம் இரத்தத்தில் கலந்த அந்த கனியின் பாய்சன் இன்னும் இருக்கிறது..

அந்த பாய்சன் இருக்கா ? இல்லையா என்று நம்மை தாராளமாக Self-checkup பன்னலாம்..

நாம் என்ன செய்கிறோம்.. நல்லதைச் செய்கிறோமா? தீயதைச் செய்கிறோமா?

நல்லது செய்ய நமக்குள் ஆசை இருந்தாலும் தீமையைத் தானே செய்கிறோம்..

பாவம் செய்வது தப்பு என்று தெரிந்தாலும் அதைத் தானே செய்கிறோம்..

மற்றவர்களைக் குறித்த தவறான சிரிய சிந்தனை கூட அதாவது தீர்ப்பிடும் எண்ணம் கூட நமக்கு வராமலா இருக்கிறது..

நாம் மட்டும் யோக்கியவர் மற்றவரெல்லாம் அயோக்கியர் என்ற சிந்தனை வராமல் இருக்கிறதா..?

சூழ்நிலைக்கு தகுந்தவாறு நம்மைக் மாற்றிக்கொள்கிறோமே.. பல நேரங்களில் நல்லவர்களாக நடிக்கிறோமே..

அடுத்தவர் குறித்து புறணி பேசி கடவுள் கொடுத்த நம்முடைய பொன்னான காலத்தை வீணடிக்கிறோமே..

ஞானஸ்தானத்தின் வழியாக நம்முடைய ஜென்மப்பாவம் கழுவப்பட்டாலும்..  நாம் வளர வளர.. நம் பெற்றோர்.. மூதாதையர்.. வழி வழியாக வந்த அந்த பாவமும், பாவ சிந்தனைகளும் நம்மிடம் இருந்துகொண்டுதானே இருக்கிறது..

அந்த விஷத்திற்கு மாற்று மருந்தாக வந்த கனிதான் புதிய ஏற்பாட்டின் கனி..

தீவனத்தொட்டியில் தன்னையே மனுக்குலத்திற்கு உணவாகக் கொடுத்த கனி..

திவ்ய நற்கருணை ஆண்டவராக ஒவ்வொரு திருப்பலியையும் தன்னை உணவாகக் கொடுத்துக்கொண்டிருக்கும் கனி..

மாதாவின் திருவயிற்றின் கனி..

இயேசு என்னும் கனி..

நம்மை பாவத்திலிருந்து மீட்கும் கனி..

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நம்மை தயாரித்து பெறும் திவ்ய நற்கருணை என்னும் கனி..

நம்மிடம் இருக்கும் பாவ பிணியை நோக்கி பரிசுத்தராக மாற்றும் கனி…

நம் இரத்தத்தில் இருக்கும் பாவம் என்ற விஷத்தைப் போக்கி அதை நல்ல இரத்தமாக மாற்றும் கனி..

நம்மை இயேசுவாக மாற்றும் கனி..

மாதாவின் திரு உதிரத்தில்.. அதாவது அமல உற்பவத்தில் உதித்தி கனி..

மாதாவின் திருவயிற்றில் தங்கியிருந்த கனி..

மாதாவிடமிருந்து நமக்கு கிடைத்த கனி..

கடவுளையும், மனிதர்களையும் நித்தியத்திற்கும் ஏமாற்றாத புதிய ஏவாள் கொடுத்த கனி..

சாத்தானுக்கு நித்திய பகையாகி தன் அமல உற்பவத்தை இறுதி வரை பாது அவன் தலையை மிதித்த புதிய ஏவாளான தேவ மாதா கொடுத்த கனி..

மாதாவின் திருவயிற்றின் கனியை நாம் எப்படி சொல்ல வேண்டும்? எப்படி புகழ வேண்டும்..

“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.”

மாதாவின் திருவயிற்றின் கனியான திவ்ய நற்கருணை ஆண்டவரான இயேசு கிறிஸ்துவே உம்மை போற்றுகிறோம்.. புகழுகிறோம்.. தெண்டனிட்டு ஆராதிக்கிறோம்..

குறிப்பு : ‘வுல்கத்தா’ பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் கனி என்ற வார்த்தையை திருவிவிலிய பொதுமொழிபெயற்பில் குழந்தை என்று மாற்றியிருக்கிறார்கள்..

எல்லா மொழியிலும் கனி.. தமிழ் திருவிவிலியத்தில் மட்டும் குழந்தை.. (லூக் 1: 42)..

“கனி” என்று கனீரென்று ஓலித்த இடத்தில் இப்போது குழந்தை என்று ஒலிக்கிறது..

எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டே போனால் ஒரு காலத்தில் மற்ற மொழிகள் பேசும் எல்லாரும் திருச்சபையில் இருப்பார்கள்.. ஆனால் தமிழ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டும் திருச்சபைக்கு வெளியே இருப்பார்கள்.. ஆனால் கொடுமை என்னவென்றால் தாங்கள் திருச்சபைக்கு வெளியேதான் இருக்கிறோம் என்று தெரியாமலேயே இருப்பார்கள்..

ஏற்கனவே ஒரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ‘ அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ‘ என்று சொல்லி திருச்சபைக்கு வெளியே இருந்தார்களே அதைப் போல..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !