புனித ஜெர்த்ரூத்தம்மாள் வாழ்க்கைப்பாதையில் 7 :

ஜெர்த்ரூத்தின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு தொடர்ச்சி.. (முக்கியமான பதிவு)

ஆண்டவர் அவளிடம். “ நான் எனது தயாள தாயாரை உன்னுடைய தாயாராகத் தந்துள்ளேன். அவர் வழியாகவே நான் எனது வரப்பிரசாதங்களை உனக்கு அளிப்பேன். உனது அனைத்து தேவைகளிலும் அவர்களை நீ அனுகிச்செல் நிச்சயமாக திடத்தையும் ஆறுதலையும் கண்டடைவாய்” என்றார்.

பன்முறை ஆண்டவர் இதனை ஜெர்த்ரூத்திடம் தெரிவித்தபோதும் தேவதாய் மீது காட்டும் அன்பும் நம்பிக்கையும் நமது ஆண்டவர் மீது காட்டவேண்டிய அன்புக்கும் நம்பிக்கைக்கும் இடையூராக மாறிவிடுமோ என்று கலங்கினாள். இது பல கிறிஸ்தவர்களிடம் சாதாரணமாக காணப்படும் ஐயமே. அவளிடம் இந்தக் கலக்கத்தை, சந்தேகத்தை நீக்க ஆண்டவரே ஒரு புதுப்பாடத்தைப் போதிக்கலானார்.

மங்கள வார்த்தை திருநாளன்று ஒரு குருவானவர் மடத்துக் கன்னியருக்கு ஞானபோதனை வகுப்பு ஒன்று நடத்தினார். அதில் தேவதாயின் புண்ணியங்கள், அவரது மேன்மை குறித்து நுணுக்கமாக விவரித்தாரே தவிர  மனுவுருவெடுத்ததில் தேவகுமாரன் காட்டிய அணைகடந்த நேசம் பற்றி எதுவும் பேசவில்லை. ஜெர்த்ரூத் இதனால் கலக்கமுற்றாள், வருத்தப்பட்டாள்.

பிரசங்கம் முடிந்து திரும்பி வரும்போது மாதாவின் பீடத்தை கடந்து வர வேண்டியிருந்தது. வழக்கம்போல மாதாவின் சுரூபத்திற்கு வணக்கம் செலுத்திய ஜெர்த்ரூத், இதற்கு முன் வழக்கம்போல் காட்டும் பயபக்தியுருக்கத்துடன் இப்போது செய்யவில்லை. மாறாக அவரது உதிரத்தின் கனியாகிய சேசுநாதருக்கே அன்பையும், ஆராதனையையும் செலுத்தினாள். இவ்வாறே அவள் ஒவ்வொரு முறை தேவதாயின் சுரூபத்திற்கு வணக்கம் செலுத்தும்போதும் செய்து வந்தாள்.

அதன் விளைவாக அவளது உள்ளத்தில் இன்னொரு கவலை பிறந்தது. ஒருவேளை விண்ணகத்தில் வல்லமை மிக்க அரசியை தான் நோகச் செய்தேனோ என்று கலங்கினாள். பின்பு சேசுவே அவளது கலக்கத்தை அகற்றும் வகையில் அவளிடம் ஒருநாள் இனிமையாகப் பேசினார்.

“ அன்பு மகளே, உன் அன்பு, பக்தி அனைத்தையும் நீ என்னிடம் செலுத்துவதால் என் இனியதாய் வருத்தப்படுவாரோ என்று ஒருபோதும் எண்ணாதே, மாறாக இதனால் என்தாய் மிகவும் மகிழ்ச்சியடைவார். எனினும் உனது மனக்கவலையைப் போக்கும் வகையில் அவரது பீடத்தை கடந்து செல்லும்போது முழுபக்தியுடன் அவரது சுரூபத்திற்கு வனக்கம் செலுத்து. என்னைப் பற்றி கவலைப்படாதே.” என்றார்.

அதற்கு அவள், “ இல்லை ஆண்டவரே, என் இருதயம் ஒருபோதும் இதற்கு இசையாது. நீரல்லோ என் மீட்பு; நீரல்லோ எனது எல்லாம். உம்மை மறந்து இன்னொருவர் காலடியில் எப்படி எனது அன்பை சமர்ப்பிப்பேன்? “ என்று வினவினாள். ஆண்டவர் பதில் மொழியாக மிக மென்மையாக,

“ அன்பு மகளே, எனக்குக் கீழ்படி. என்னை மறந்து எனது தாய்க்கு நீ வணக்கம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் எனது மகிமையை அதிகரிப்பதற்காக நீ இனிய முகத்துடன் செய்யும் பரித்தியாகங்களால் நான் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வேனோ அவ்வளவு மகிழ்ச்சி அடைவேன். அதுமட்டுமல்ல என்னை மகிழ்வித்து நீ இன்முகத்துடன் செய்த ஒறுத்தல் முயற்சிகளால் நீ எந்த அளவு உத்தம தனத்தில் வளர்வாயோ அதே அளவு , தேவதாய்க்கு செய்யும் வணக்கத்தால் நீ வளர்வாய்” என்றார்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !