புனித ஜெர்த்ரூத்தம்மாள் வாழ்க்கைப்பாதையில் 6 :

ஜெர்த்ரூத்தின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு தொடர்ச்சி..

“ இல்லை, ஒரே மகன் என்பதைவிட தலைச்சன் பிள்ளை என்பதுதான் உரிய பட்டம். ஏனெனில் எனது மிகமிக  பிரிய குமாரனுக்கு அடுத்தபடி அவராலும் அவரிலும் எனது ஸ்நேகத்தின் வயிற்றிலிருந்து பிறந்த நீங்கள் அனைவரும் எனது பிள்ளைகள். அதாவது சேசுவின் சகோதரர்கள் ஆகிவிட்டீர்கள் “ என்று தேவதாய் கூறினார்கள்.

தேவதாய் தனது தெய்வீக தாய்மையின் காரணமாக சேசுவின் இருதயத்தின் மீது கொண்டிருக்கும் செல்வாக்கையும் பாவத்தால் கறைபடிந்த மனிதர்களையும் சேசுவின் சகோதரர்களாக ஏற்றுக்கொள்ளும் தாராளத்தையும் அவளுக்கு மாதா தெரியப்படுத்தினார்கள். ஒருநாள் தேவதாயை குழுமியிருந்த ஆன்மாக்களுக்கு சம்மனசுக்களின் அணி இடைவிடாத பாதுகாப்பளிப்பதை அவள் கண்டாள். இவர்கள் தேவதாயின் பக்தியுள்ள ஊழியர்கள். தேவதாய் தனது பெரிதான அரசிக்குரிய மாந்தையை விரித்து வைத்திருந்தார்கள். அம்மாந்தையின் பாதுகாப்பை பெற பலதரப்பட்ட மிருகங்கள் ஓடி வந்தன. மகிமையின் அரசி அம்மிருகங்கள் ஒவ்வொன்றையும் தடவிக் கொடுத்தார்கள். அம்மிருகங்கள் அனைத்தும் பாவக்கறைகள் படிந்த பாவிகள் ஆவர். இதன் மூலம் தேவதாய் தனது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடும் பாவிகளை எந்த அளவுக்கு வரவேற்கிறார்கள், பாதுகாக்கிறார்கள் என்பதையும் அவர்கள் மனந்திரும்பி ஆண்டவருடன் ஒப்புரவாக வேண்டுமென்று விரும்புவதையும் தெறியப்படுத்தினார்கள்.

ஆண்டவரது பிறப்பின் திருநாளன்று மாமரி தனது மகனின் இருதயத்தின் மீது தனக்குள்ள செல்வாக்கை புனிதைக்கு தெரியப்படுத்துவதற்காக கீழ்கண்ட நிகழ்ச்சியை காட்டினார்கள்.

ஜெர்த்ரூத் “ கிருபைதயாபத்தின் மாதாவே “ என்ற செபத்தை சொல்லிக்கொண்டிருந்தாள். “ எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்” என்று அவள் கூறியபோது தேவதாய் குழந்தை சேசுவை கரங்களில் ஏந்தியிருக்கக் கண்டாள். தேவதாய் தனது திருமகனின் தோளை லேசாகத் தொட்டு ஜெர்த்ரூத்தையும் அவள் சகோதரியையும் பார்க்குமாறு செய்தார்கள். “ இதோ தயாளமுள்ள கண்கள். தங்களது நித்திய மீட்புக்காக யார் என்னை மன்றாடுகிறார்களோ அவர்கள் அனைவர் மீதும் என் மகனின் கண்களைத் திருப்புவேன் “ என்று கூறினார்கள். சேசுவும் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட விதியை அதாவது அனைத்து மனிதர்களுக்கும் தனது வரப்பிரசாதத்தை தனது தாயாரின் வழியாக மட்டுமே அளிப்பது என்ற தனது விதியை வெளிப்படுத்தினார்.

ஜெர்த்ரூத்தின் மனந்திரும்புதல் தேவதாயின் சுத்திகரத் திருநாள் அன்று ஆரம்பித்தது எனபதனை நாமறிவோம். அதனைத் தொடர்ந்து வந்த நாட்களின்போது குறிப்பாக மங்கள வார்த்தை திருநாளன்று ஆண்டவர் அவளிடம், “ எனது இனிய தாயாரை உனது பாதுகாவலியாக நியமிக்கிறேன். அவரது பராமரிப்பில் உன்னை ஒப்படைக்கிறேன்” என்று கூறுனார். சோதனை நேரம் வரும்போது அவள் நடுநடுங்கி ஆண்டவரை தனக்கு உதவ மன்றாடினாள். ஆண்டவர் அவளிடம். “ நான் எனது தயாள தாயாரை உன்னுடைய தாயாராகத் தந்துள்ளேன். அவர் வழியாகவே நான் எனது வரப்பிரசாதங்களை உனக்கு அளிப்பேன். உனது அனைத்து தேவைகளிலும் அவர்களை நீ அனுகிச்செல் நிச்சயமாக திடத்தையும் ஆறுதலையும் கண்டடைவாய்” என்றார்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !